Suraa முகப்பு | தொடர்புக்கு | Font Problems?
Sundaramsamy.com

Ninaivodai

தொலைவிலிருக்கும் கவிதைகள்  பக்கம் 1 2

விடை பெறுதல்
மலர்ச் செண்ட
நான் நேசித்த வீடு
உனக்கு அந்தப் பறவை வேண்டுமென்றால்
அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தனர்
இவ்வளவுதான் சொல்ல
நான் திரும்பி வருவேன்


விடை பெறுதல்
நான் இறந்தால்,
மாடிக் கதவை திறந்து வை
அந்தக் குழந்தை ஆரஞ்சு தின்று கொண்டிருக்கிறது.
(எனது மாடியிலிருந்து நான் அவனைப் பார்க்கிறேன்.)
அறுப்பவன் தானியங்களை அறுத்துக் கொண்டிருக்கிறான்.
(மாடியில் அவ்வோசை என் காதில் விழுகிறது)
நான் இறந்தால் மாடிக்கதவைத் திறந்து வை.

 
Top

ழாக் ப்ரெவர்
மலர்ச் செண்டு
என்ன செய்கிறாய் நீ சிறிய பெண்ணே
புதிதாய் கொய்த இப் பூக்களை வைத்துக் கொண்டு
என்ன செய்கிறாய் நீ இளம் பெண்ணே
வாடிக் கொண்டிருக்கும் இப் பூக்களை வைத்துக் கொண்டு
என்ன செய்கிறாய் நீ அழகிய மங்கையே
உதிர்ந்து கொண்டிருக்கும் இப் பூக்களை வைத்துக் கொண்டு
என்ன நீர் செய்கிறீர் மூதாட்டியே
அழிந்து கொண்டிருக்கும் இப் பூக்களை வைத்துக் கொண்டு.
வெற்றி கொள்பவனை எதிர்நோக்கியிருக்கிறேன்.
(கொல்லிப்பாவை ஜூலை 1985)

 
Top

அன்டானியோ மச்சடோ
நான் நேசித்த வீடு
ஒரு காலத்தில் நான் மிகவும் நேசித்த அந்த வீடு
அவள் குடியிருந்த அந்த வீடு
இப்போது இடிக்கப்பட்டு விட்டது.
அல்லது
சிதிலம் அடைந்து விட்டது.
கறுத்த, பூச்சி அரித்த மரத்தின்
எலும்புக் கூட்டை மட்டும்
இடிபாட்டுக் குவியலின் இடையே
காட்டிக் கொண்டு நிற்கிறது.
ஒரு கனவில்
சந்திரன்
ஜன்னல் கண்ணாடி மீது வெள்ளியைப் பூசி
தன் துல்லிய ஒளியைச் சிந்துகிறது.
என் அலங்கோல உடையில்
அந்த பழைய தெருவில்
நான் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறேன்,
துக்கத்துடன்.
(கொல்லிப்பாவை ஏப்ரல் 1986)

 
Top

ஏ.கே.ராமானுஜம்
உனக்கு அந்தப் பறவை வேண்டுமென்றால்
மங்கோலியாவில் அந்த அரசன் இருந்தான்
என்பதை நீ அறிவாய்.
தூரதேசம் ஒன்றைப் பிடிக்க அவன் படையெடுத்துச் சென்றான்.
அங்கு அபூர்வப் பறவை ஒன்றின் பாடலைக் கேட்டான்.
அந்தப் பாடல் அவனுக்கு வேண்டுமென்று தோன்றிற்று.
அந்தப் பாடலுக்காக அந்தப் பறவையும்,
அந்தப் பறவைக்காக அதன் கூடும்,
அந்தக் கூட்டிற்காக அந்தச் சுள்ளியும்,
அந்தச் சுள்ளிக்காக அந்த மரக்கிளையும்,
அந்த மரக்கிளைக்காக அந்த மரமும்,
அதன் வேர்களும்,
வேரடி மண்ணும்
அந்த ஊரும்
நீரும்,
அந்த ஊர் முழுவதும்,
அந்த தேசம் முழுவதும்,
அவனுக்கு வேண்டுமென்று தோன்றிற்று
படைகளும் தேர்களும் யானைகளும் குதிரைகளும் கொண்ட அவன்
அந்த தேசத்தை போரிட்டுப் பிடித்தான்.
அதன் பின் அவன் ஊர் திரும்பவில்லை.
(கன்னடத் தலைப்பு : ‘ஆ ஹக்கி பேகாதரே’ )

 
Top

ஃபெயிஸ் அகமத் ஃபெயிஸ்
அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தனர்
அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தனர்
கொஞ்சம் வேலை கொஞ்சம் காதல் என்றிருந்தவர்கள்
ஒரு வேலைபோல் காதலையும் எடுத்துக்கொண்டவர்கள்
அல்லது தம் வேலையை மட்டும் நேசித்தவர்கள்
நானும் என் வழியில் அலுவல் மிகுந்தவனாகத்தான் இருந்தேன்
சிறிது காதலித்தேன்; சிறிது பணியாற்றினேன்.
வேலை என் காதலைத் தகர்த்தது.
காதலும் அடிக்கடி என் வேலையில் குறுக்கிட்டு வந்தது.
இறுதியில் சோர்ந்து போனேன்
இரண்டையும் பூர்த்தி செய்யாது விட்டேன்.

 
Top

வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்
இவ்வளவுதான் சொல்ல
ஐஸ் பெட்டியில்
இருந்த
ப்ளம்பழங்களை
நான் தின்று விட்டேன்
ஒருக்கால்
காலை உணவுக்காக
நீ வைத்திருந்ததோ
என்னவோ
என்னை மன்னித்து விடு
ரொம்ப ருசி அவை
ஒரே தித்திப்பு
சில்லென்று
(காலச்சுவடு 8 அக் - டிச 1989)

 
Top

பாப்லா நெருடா
நான் திரும்பி வருவேன்
சிறிது காலத்துக்குப் பின்
நான் வாழ்ந்திராத அக்காலத்தில்
பயணியே, ஆணோ அல்லது பெண்ணோ
இங்கு என்னை தேடு, தேடு.
கல்லுக்கும் கடலுக்கும் இடையே
நுரையின் சூறை ஒளியில் என்னைத் தேடு.
இங்கு என்னைத் தேடு, தேடு
ஏனெனில் ஏதும் கூறாமல்
இங்கு நான் திரும்பி வருவேன்
குரலின்றி, வாயின்றி, சுத்தமாக;
நீரின் அசைவு போல்
அதன் பண்படாத மனம் போல்
நான் திரும்பி வருவேன்.
இங்கு நான் காணாமல் போவேன் இங்கு தென்படுவேன்
ஒருக்கால் இங்கு நான் கல்லாகவும் அமைதியாகவும் இருப்பேன்.


 
Top


Powered By Minveli © sundararamaswamy.com All Rights Reserved