| ‘தோட்டியின் மகன்’ தமிழுக்கு வந்த கதை | பக்கம் 1 2 3 |
அன்றைய நாட்களில்
என்னைப் பற்றி எனக்கு இருந்த ஒரு
சித்திரம் இப்போதும் நினைவில் இருக்கிறது. மாலையில், இருள்
கவியும் நேரத்தில், மலையடிவாரத்தில், காய்ந்து வெடித்துக் கிடக்கும்
வயல்வெளிகளின் ஓரத்தில், ஓர் ஒற்றையடிப் பாதை
வழியாக நான் தன்னந்தனியாக நடந்து போய்க்கொண்டிருப்பேன். வளைந்த
முதுகுடனும் குனிந்த தலையுடனும். அந்தச் சித்திரத்தில் வேட்டியின்
விளிம்பு பறக்க நான் விடாமல் நடந்துகொண்டிருந் தாலும்
என் பக்கத்தில் நின்ற தென்னை மரம் அதே
இடத்தில் இருந்துகொண்டிருந்தது ஒரு முரண்பாடாகவே இருந்ததில்லை.
துக்கத்தைச் சுமந்து கொண்டு நடப்பது அன்றைய நாட்களுக்குரிய சுயபரிசோதனைக்கு இசைவாகவே இருந்தது. அதை ஒரு கற்பனைச் சித்திரம் என்று சொல்ல முடியாது. அது ஒரு குறியீடு. நோயினால் உடல் சார்ந்த கஷ்டங்கள். எதையெதையோ சாதிக்க வேண்டும் என்று ஏங்கும் மனம். எதைச் சாதிப்பது என்பது பற்றியோ எவ்வாறு சாதிப்பது என்பது பற்றியோ எந்தத் தெளிவும் இல்லாத மனநிலை. எழுத ஜீவசக்தி கொண்ட மொழி இல்லை. இல்லாத ஒரு மொழியை வைத்து எதையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்ற யதார்த்தத்தை உணரும்போது மனதில் பொங்கும் விசனம். வாசிக்கப் புத்தகங்கள் இல்லை. இலக்கியம் பேச நண்பர்களும் இல்லை. வாழ்க்கையின் போதாமைகளோ மனதில் கீறல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. ஆனால் அந்தக் கீறல்களை மொழிக்குள் வைக்கத் தெரியவில்லை. நிறையக் கேள்விகள் முளைத்தவாறு இருந்தன. எல்லா விடைகளும் அறிந் திருந்த ஒருவரை அன்று சந்தித்திருந்தாலும் கூடக் கேள்விகளை என்னால் உருவாக்க முடிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். என் கேள்விகளையும் நீங்களே உருவாக்கிப் பதில்களையும் நீங்களே சொல்லிவிடுங்கள் என்றுதான் சொல்ல நேர்ந்திருக்கும். வாழ்க்கையில் உணர்ந்திருந்த குறைகளை அனுபவ வடிவங்களாகச் சிறுகதைகளிலும் கவிதைகளிலும் நாவல்களிலும் படிக்கும்போது ரத்தம் கொதிப்பது போலிருக்கும். எதிரே நிற்கும் சுவரையும் காலால் உதைத்துத் தூளாக்கிவிடலாம் என்று தோன்றும். ஒரு அகராதியைத் தூக்குவதற்கான பலம்கூட என்னுடைய உடலுக்கு இல்லாதிருந் ததைக் கோபப்படும் என் மனம் ஒரு சமயம்கூடக் கணக்கில் எடுத்துக்கொண்டதில்லை.
இந்தப் பின்னணியில்தான் ‘தோட்டியின் மக’ னைப் படித்தேன். விருப்பமும் வியப்பும் மனதில் அலைமோதின. கொடுமையான ஒரு வாழ்க்கையை எவ்வளவு நேர்த்தியாக மனதில் பதியும்படி சொல்லிவிட்டார் இந்த ஆசிரியர்! வெளியுலகத்துக்கே தெரியாத ஒரு இருண்ட வாழ்க்கையினூடே எப்படி இவரால் இவ்வளவு சகஜமாகப் புகுந்து மன உணர்ச்சிகளை அள்ளிக் கொண்டுவர முடிகிறது? தகழி வெளிப்படுத்தியிருப்பது தோட்டிகளின் வாழ்க்கை சார்ந்த தகவல்களை அல்ல என்பதையும் காலம் அவர்களது அடிமனங்களில் மூட்டும் நெருப்பு என்பதையும் உணர்ந்தபோது மிகுந்த வியப்பு ஏற்பட்டது. இந்த நெருப்பை எப்படி அவரால் மொழியில் மறுஉருவாக்கம் செய்ய முடிந்தது? கொடுமையில் மனம் கொள்ளும் கோபத்தில், ரத்தத்தில் உஷ்ணம் ஏறாமல் என்னால் அப்போதெல்லாம் ‘தோட்டியின் மக’னின் எந்தப் பக்கத்தையும் படிக்க முடிந்ததில்லை. எனக்குத் தெரியாத ஒரு உலகத்திற்குள் என்னாலும் இவரைப்போல் புகுந்து புறப்பட முடியுமா என்ற கேள்வியின்முன் மனம் மிகவும் சோர்ந்துபோயிற்று. ‘தோட்டியின் மக’னை மொழிபெயர்த்த பின்புகூட அந்தக் காரியம் நடந்து முடிந்திருப்பதை என்னால் நம்பமுடியவில்லை. எப்படி இதைச் செய்து முடித்தேன் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டே இருந்தேன். இந்தப் பூரிப்பைப் பகிர்ந்துகொள்ள இசைவான எவரும் அப்போது எனக்கு இருக்கவில்லை. என் அம்மாவைத் தவிர. இருந்த ஒன்றிரண்டு நண்பர்களிடம் நான் செய்திருந்த ‘விஷமத்தை’ச் சொல்லக் கூச்சமாகவும் இருந்தது. சொன்னாலும் புதிராகவோ புரிந்துகொள்ள முடியாமலோதான் இருக்கும் என்று தோன்றிற்று. அவர்களை நான் கைவிட்டுவிட்ட தாகக் கூட நினைக்கலாம் என்றும் நினைத்தேன். இடதுசாரிச் சிந்தனைகளில் ஆழ்ந்த அக்கறை கொண்ட தோழர்கள் உருவான போது நான் செய்திருந்த பணியின் மதிப்பு என் மனதில் திடீரென்று உயர்ந்தது.


