| ‘தோட்டியின் மகன்’ தமிழுக்கு வந்த கதை | பக்கம் 1 2 3 |
தகழி சிவசங்கரப் பிள்ளையின் ‘தோட்டியின் மக’னை நான் மொழி
பெயர்த்தபோது நிலவிய சூழலும் மனநிலையும் இளமைக்கால
நினைவுகளும் இன்றும் என் மனதில் பசுமையாக அப்படியே
இருக்கின்றன. அன்றைய அனுபவங்களை வாசகர்களுடன் சிறிய
அளவிலேனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஓர் இழை
போல் இந்த நீண்ட காலப் பகுதியில் தொடர்ந்துவந்திருக்கிறது.
1946இல் எழுதப்பட்ட ‘தோட்டியின் மக’னை 1951, 52ஆம்
வருடங்களில்தான் மொழிபெயர்த்தேன். அப்போது எனக்கு வயது
இருபது, இருபத்தியன்று. அதற்குமுன் தமிழில் சொல்லும்படி
நான் எதுவும் எழுதியிருக்கவில்லை. நிச்சயமாக என்னுடைய
படைப்பென்று எதுவும் அச்சேறியிருக்கவில்லை. என் உடல், மனம்
சார்ந்த அன்றைய வேதனைகளைக் கோபத்துடனும் வருத் தத்துடனும்
புலம்பல் கடிதங்களாகக் கடவுளுக்கு எழுதிக்கொண்டிருந்தேன்.
அவை கிறுக்கல்களாகக் கைவசம் இருந்தன. வெளியே காட்ட
யோக்கியதை அற்றவை அவை. தமிழில் என்னை வெளிப்
படுத்திக்கொள்வது பெரும் திணறலாக இருந்த காலம் அது.
அப்போது நான் தமிழை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டு
இரண்டு மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கவில்லை.
‘தோட்டியின் மக’னை மொழிபெயர்க்கும் நேரத்தில் என்னை ஒரு கலாச்சார ஏழை என்றுதான் சொல்ல வேண்டும். ‘கலை உலகின் கடைசி ஏழை’ என்ற விவரிப்பும் அப்போது மனதில் இருந்தது. தகழியை மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆசை மூண்டபோது மொழிபெயர்க்கத் தகுதியிருக்கிறதா என்று யோசிக்கக்கூடத் தெரியாமல் இருந்தேன். அந்த மொழிபெயர்ப்பு நடந்து முடியவும் அந்த யோசனையற்ற நிலைதான் காரணம். யோசித்திருந்தால் அன்றே புகழ் பெற்றிருந்த தகழியின் படைப்புலகில் குறுக்கிடாமல் விலகிப்போயிருப்பேன்.
அப்போது நான் பெற்றிருந்த ‘ஞானங்களை’ இப்போது நினைத்துப் பார்க்க முயல்கிறேன். படித்திருந்தவை அதிகமும் அரசியல், சமூகச் சீர்திருத்தம், கலாச்சார விமர்சனம் சார்ந்த துண்டுப் பிரசுரங்கள்தான். ஆர்வத்துடன் படித்த படைப்புகளில் இன்றும் நினைவில் இருப்பவை க. நா. சு.வின் ஒருநாள், தொ. மு. சி. ரகுநாதனின் ‘புயல்’, ‘முதலிரவு’, ‘கன்னிகா’, ‘இலக்கிய விமர்சனம்’ முதலியவை. கவிமணியின் கவிதைகளும் முக்கியமாக மருமக்கள்வழி மான்மியமும். (பிராமணர் அல்லாதாரின் கொச்சையில் அன்று மிகுந்த ஈர்ப்பு இருந்தது.) இவை எல்லாவற்றையும்விட முக்கியமாகப் பெற்றிருந்த ‘ஞானம்’ புதுமைப்பித்தன் சிறுகதைகள். ‘புதுமைப்பித் தன் கதை’களும் காஞ்சனை தொகுப்பும். (அவரது ‘ஆறு கதைகள்’ என்ற தொகுப்பைக்கூடப் பின்னால்தான் படித்தேன் என்று நினைவு.) மனதை ஈர்த்த கதைகளை மீண்டும் மீண்டும் படித்ததில் பல பகுதிகள் மனப்பாடமாகியிருந்தன. ‘காஞ்சனை’ தொகுதியின் முன்னுரை முழுமையாகவே மனப்பாடமாகியிருந்தது. மனப்பாடப் பகுதிகளை வீட்டில் பிறர் முன் சந்தர்ப்பம் சார்ந்தும் சாராமலும் அரற்றுவது அப்போது பழக்கத்திலிருந்தது. அந்த அரற்றல், தொய்யும் மனதுக்கு நாணேற்ற நான் கண்டுபிடித்திருந்த வழி. அதற்குப் பலன் இருந்தது.
அரற்றுவதற்குப் புதுமைப்பித்தனைவிடவும் அதிக ஆவேசமளித்த இரண்டு படைப்புகளும் அதே காலத்தில் கிடைத்தன. ஒன்று இயேசுவின் மலைப் பிரசங்கம். மற்றொன்று வ. வே. சு. ஐயர் மொழிபெயர்த்த எமர்சனின் ‘தன்னம்பிக்கை’ என்ற நீண்ட கட்டுரை. இவற்றைத்தான் அன்றைய ஞானத்தின் ஆத்மீகத் தேட்டங்கள் என்று சொல்ல வேண்டும். கவிதை மீதான ஆசையை இந்த அரற்றல் வளர்த்ததோடு மொழியின் காந்த சக்திக்கு ஆட்படும் உணர்வுகளையும் கூர்மைப்படுத்தியது.
அந்தக் காலத்தில் சஞ்சிகை என்று நான் படித்தவை வை.கோவிந்தனின் ‘சக்தி’ மட்டும்தான். அதிலும் ‘சக்தி’யின் கடைசிக் காலத்தில் தொ. மு. சி. ரகுநாதனும் கு. அழகிரிசாமியும் இணைந்து பதிப்பித்த தொகுப்புகள் அவை. ‘சக்தி’ இதழ் ஒன்றில் வெளிவந்த மாப்பசானின் நாவல் பற்றிய ஒரு நீண்ட கட்டுரையின் மொழி பெயர்ப்பை (ரகுநாதன் செய்தது) பத்துப் பதினைந்து முறையாவது படித்திருப்பேன். யாருக்கும் தெரியாத படைப்பின் ரகசியங்களை என்னிடம் மட்டும் மாப்பசான் ரகசியமாகக் கூறுவதாகக் கற்பனை செய்துகொண்டு அந்தக் கட்டுரையைப் படித்தேன். ‘சக்தி’ இதழ் ஒவ்வொன்றையும் மாற்றிமாற்றிப் பல முறை படிப்பது அப்போது வழக்கத்திலிருந்தது. சிற்றிதழ்களின் முக்கியமான பகுதிகளை -பல சமயங்களில் முக்கியமற்ற பகுதிகளைக்கூட - தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட ஒரு காரணத்தால் பல முறை படிக்கும் பழக்கம் இன்றளவும் இருப்பது அன்றைய மனநிலையின் தொடர்ச்சி என்றுதான் நினைக்கிறேன்.
மலையாளத்தில் முக்கியமாக அப்போது நான்கு ஆசிரியர் களுடன் வாசக உறவு ஏற்பட்டிருந்தது. தகழி சிவசங்கரப் பிள்ளை, கேசவ தேவ், பொன்குன்னம் வர்க்கி, வைக்கம் முகம்மது பஷீர். பின்னால் இவர்களுடைய வரிசை என் மதிப்பீட்டில் மாறிவிட்டது என்றாலும் அப்போது எனக்குத் தகழி மீதுதான் மிகுந்த ஈர்ப்பு இருந்தது. தகழியிடம் இருந்தது ஈர்ப்பு என்றால் சி. ஜே. தாமஸிடமும் எம். கோவிந்தனிடமும் உருவானது ஆழ்ந்த ஈடுபாடு. வாழ்க்கையின் போதாமைகளை எண்ணி ரத்தத்தைக் கொதிக்கவைத்துக்கொள்ள ஒரு முகாந்தரம் தேடிக்கொண்டிருந்த எனக்கு அந்தக் காலத்தில் தகழியைப்போல் கொதிப்பின் சுகத்தை வேறு எவருமே அளிக்க வில்லை. ‘கௌமுதி’ என்ற மலையாள வார இதழையும் அப்போது ஆவேசத்துடன் படித்துவந்தேன். அதன் ஆசிரியர் கே. பால கிருஷ்ணனின் கையில் அப்போது மிக நீளமான சவுக்கு இருந்தது. அவருடைய மொழி அவருடைய விளாசல்களைச் சொடுக்கிய விதம் பிரமிப்பைத் தந்தது. அவர் தீவிர இடதுசாரிச் சிந்தனையாளர். புரட்சி என்ற சொல்லில் உண்மையாகவே புரட்சி கசிந்துகொண்டிருந்த பொற்காலம்.


