| பிரமிள் | பக்கம் 1 2 3 |
அதன் பின் இரண்டு மூன்று வருடங்கள் கழித்து ராஜமார்த்தாண்டன் எங்கள் கடைக்கு வந்தார். அவர் சொன்னார், சிவராமூவும் வந்திருக்கிறார் என்று. எங்கே என்று கேட்டேன். வெளியில் நின்றுகொண்டிருக்கிறார் என்றார். இது அவருடைய குணம். நம்மைத் தர்மசங்கடத்துக்கு ஆளாக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதைச் செய்வார். பலவிதங்களில் அதைச் செய்வார்.
‘ஏன் வெளியில் நிற்கிறார்’ என்று கேட்டேன். ‘உள்ளே வரத் தயக்கமாக இருக்கிறது அவருக்கு’ என்று சொன்னார் ராஜமார்த்தாண்டன். ‘இது ஒரு வியாபார நிலையம்தானே. இங்கு யார் வேண்டுமானாலும், வரலாம். போகலாம்’ என்று சொன்னேன். போய் அழைத்து வந்தார். சௌக்கியமாக இருக்கிறீர்களா என்று கேட்டேன். இருக்கிறேன் என்று சொன்னார். கடையில் உள்ளே ஒரு அறை இருந்தது. அங்கு போனேன். அவர்கள் இருவரும் வந்தார்கள். சிவராமூ எதுவுமே பேசவில்லை. நாங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அதன் பின் இருவரும் போய்விட்டார்கள். அப்போது அவர் ராஜமார்த்தாண்டனுடன் தங்கியிருந்தார்.
இரண்டு மூன்று நாட்கள் கழித்து சிவராமூ மட்டும் கடைக்கு வந்தார். என்னிடம் இருந்து வாங்கியிருந்த நாற்பது பக்கம் நோட்டையோ எதையோ திருப்பித்தரும் சாக்கில் வந்தார். நீங்கள் எல்லாம் கணக்கு வழக்குகளில் துல்லியமாக இருக்கக் கூடியவர்கள். இந்தப் புத்தகத்தைத் திருப்பித் தரவில்லை என்று சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தாலும் தொடுத்துவிடுவீர்கள் என்பது போன்ற ஒரு தோரணையில் அதை வந்து கொடுத்தார். அவருக்கே அவையெல்லாம் மிகையான கற்பனைகள் என்பது தெரிந்துதான் இருந்தது. அதன் பின் அப்படியே மெல்ல ஒரு பழக்கம் உருவானது. அதன் பின் ராஜமார்த்தாண்டன் திருமணத்தின்போது ஒரு மாத காலம் எங்கள் வீட்டில் இருந்தார். அடிக்கடி ராஜமார்த்தாண்டனைப் போய்ப் பார்த்துவிட்டு வருவார். அப்போது சாமிநாதனைப் பற்றிக் கடுமையாகத் தாக்கிப் பேசுவார். நீங்கள் அதையெல்லாம் அவருக்குக் கடிதம் எழுதித் தெரியப்படுத்துங்களேன் என்று சொல்லுவேன். நீங்களும் சாமிநாதனும் ஒரு கட்சி என்பது எனக்குத் தெரியும் என்று என்னைத் தாக்குவார். ‘சாமிநாதன் இப்போது விளையாடிக் கொண்டிருக்கிறான். என் வசம் நான் நூற்றுக்கணக்கான யானைகளை வைத்திருக்கிறேன். ஒரு நாள் அவற்றை அனுப்பி வைப்பேன். அப்போது அவனுக்குத் தெரிய வரும் யாருடன் மோதுகிறோம் என்பது’ என்று சொல்லுவார்.
ஒரு நாள் எனக்கு ஒரு பெரிய பில் அனுப்பியிருந்தார். என்ன என்று பார்த்தால் எங்கள் குடும்பத்தில் இருந்த எல்லோருடைய பெயரையும் எண் கணித சாஸ்திரப்படி அவர் மாற்றிக் கொடுத்ததற்கான பில் அது. அவர் மாற்றிக் கொடுத்தது வாஸ்தவம்தான். அதற்கு பில் அனுப்பியிருந்தார். கமலாவுக்கு 900 ரூபாய். எனக்கு ஆயிரம். நான் அவளைவிட வயதில் மூத்தவன். உயரமாகவும் வேறு இருக்கிறேன். அதனால் எனக்கு நூறு ரூபாய் அதிகம். இப்படி வீட்டில் இருந்த எல்லோருக்கும் பெயரை மாற்றிய கணக்கில் ரூபாய் முப்பத்தைந்தாயிரம் நான் தரவேண்டும் என்று ஒரு பில் அனுப்பியிருந்தார். நான் அதற்குப் பதில் போடவேயில்லை. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. நாங்கள் சொல்லி அவர் பார்க்கவில்லை என்பதெல்லாம் அவருக்கு நன்கு தெரியும். இருந்தாலும் அப்படி எழுதினார். அதோடு நிற்காமல் நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு கடிதம் எழுதினார். ராமசாமி எனக்கு முப்பத்தைந்தாயிரம் ரூபாய் தரவேண்டியிருக்கிறது. நான் ரொம்பவும் கஷ்டப்படக்கூடியவன் என்பது உங்களுக்குத் தெரியுமே. ராமசாமியிடம் வசதி இருக்கிறது. இந்நிலையில் எனக்குச் சேர வேண்டிய முப்பத்தைந்தாயிரத்தை நீங்கள்தான் கேட்டு வாங்கித்தர வேண்டும் என்று கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதம் கிடைத்தவர்களில் ஒருவர்கூட, அவருடன் தங்கியிருந்தபோது அவர் உனக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார். அதோடு அவருக்கு இந்த விஷயங்களில் நம்பிக்கை கிடையாது. அவரிடம் போய் இப்படிக் கேட்பது சரியல்ல என்று -எனக்குத் தெரிந்து ஒருவர்கூட - எழுதியிருக்கவில்லை. ஆனால் பணத்தைக் கொடுத்துவிடும்படி பலர் எனக்குக் கடிதம் போட்டார்கள். தமிழ்ச் சூழல் மோசமாக இருக்கிறது என்பதுதான் எனக்கு உறுதிப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அந்தக் காரியத்தைச் செய்துவந்தார். என்னுடைய எல்லாக் கஷ்டங்களுக்கும் ராமசாமி பணம் தராததுதான் காரணம் என்று பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் சொன்னார்.
அப்போது மதுரையில் இருந்து வைகை பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. குமாரசாமிதான் அதன் எடிட்டராக இருந்தார். மோகனும் அவருக்கு உதவியாக இருந்தார். ‘அக்ரஹாரத்தில் கழுதை’ படத்தைப் பற்றி மூன்று பேருடைய விமர்சனத்தை அந்த இதழில் வெளியிட்டிருந்தார்கள். ஒன்று சிவராமூவினுடையது. இன்னொன்று ஜானகிராமனுடையது. இன்னொன்று என்னுடையது. பொதுவாக வேறு யாராவது இருந்தால் அந்தக் கடிதத்தைப் பிரசுரித்திருக்கமாட்டார்கள். நான் கடுமையாகவே விமர்சித்து எழுதியிருந்தேன். வசனங்களைக் குறைத்து காட்சிபூர்வமாகச் செய்வதற்கு நிறைய ஸ்கோப் அந்தக் கதையில் இருந்தது. இருந்தும் அதை ஒரு மேடை நாடகம் போல் வசனங்களால் நிரப்பிவைத்திருந்தார். இத்தனைக்கும்
சாமிநாதனுக்கு நிறைய சினிமாக்கள் பார்த்த அனுபவம் இருந்தது. நிறைய சூட்சுமங்கள் தெரிந்துமிருந்தன. இருந்தும் அந்தத் திரைக்கதையை அவர் அப்படி ஏன் எழுதினார் என்பது புரியவேயில்லை. சிவராமூ பல தடவை சொல்லியிருக்கிறார் - அந்தத் திரைக்கதை நன்றாக இல்லை, க்ரியேட்டிவாக இல்லை என்று பல குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசியிருக்கிறார். ஆனால் நான் அதைப் பொருட்படுத்தியிருக்கவில்லை. ஏனென்றால் அவரது விமர்சனங்கள் எல்லாமே அரசியல் நோக்கங்கள் கொண்டவை. இன்று ஒன்று சொல்லுவார். நாளை வேறொன்று சொல்லுவார். என்னிடம் பேசியபோது அதை விமர்சித்த சிவராமூ முன்னுரை எழுதிய அந்த வசனம் புத்தக உருவத்தில் வந்தபோது பாராட்டி எழுதியிருந்தார். அது தெளிவான அரசியல் காரணங்கள் கொண்ட அணுகுமுறைதான். அந்த முன்னுரையைச் சாமிநாதன் பொருட்படுத்தி எடுத்துக்கொண்டாரா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது சிவராமூவின் உண்மையான அபிப்ராயம் அல்ல என்பது எனக்குத் தெரியும்.
அவர் என் வீட்டிலிருந்து பெட்டியை எடுத்துக் கொண்டு முழுவதுமாகப் பிரிந்து போனது என்பது ‘ஜே.ஜே : சிலகுறிப்புகள்’ எழுதுவதற்கு முன்பேதான் என்பது நன்கு நினைவிருக்கிறது. அதன் பின் அவரை நான் பார்க்கவேயில்லை. சென்னையிலோ வேறு எங்குமோ தற்செயலாகக்கூட அவரை நான் பார்க்க முடிந்திருக்கவில்லை. முதலில் என்னை விட்டுப் பிரிந்த பிறகு சென்னையில் போய் சில காலம் இருந்தார். சினிமாவில் சேர்ந்துவிட வேண்டும் என்று அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. இவர் என்று இல்லை, இவரைவிட எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும் தமிழ்த் திரையுலகத்தினருக்கு அவர்கள் தேவையே இல்லை என்பது இவருக்கும் நன்கு தெரியும். ஒரு சாதாரண ரசிகன்கூடச் சொல்லிவிடுவான், உங்களை அவர்கள் உள்ளே சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்று. ஆனால் அவர் விடாமல் முயற்சி செய்து வந்தார்.
அதன் பின் அவர் லயத்தில் என்னைப்பற்றி என்னவெல்லாம் எழுதினாரோ எல்லாவற்றையும் ஒன்றுகூட விடாமல் படித்திருக்கிறேன். அவர் என்ன நினைத்தாரென்றால் தனது வசைகளின் மூலம் என்னை அழித்து விட முடியும் என்று நினைத்தார். அவர் தாக்கி எழுதினால் ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ அழிந்துபோய்விடும் என்று நினைத்தார். பல நண்பர்கள்கூடச் சொன்னார்கள். அந்தக் கட்டுரை வந்ததும் ‘ஜே.ஜே : சில குறிப்புகள்’ அழிந்துபோய்விட்டது என்று. நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால் அவர் அப்படி இந்த ஒரு நாவலை மட்டும் குறிப்பிட்டு ஏன் தாக்கிவந்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. தமிழில் எத்தனையோ நாவல்கள் வந்திருக்கின்றன. அந்த நாவல் ஏன் அவரை அவ்வளவு சங்கடப்படுத்தவேண்டும். தனக்குப் பிடிக்கவில்லையென்றால் அதை விட்டு விட்டுத் தாண்டி ஏன் அவரால் போக முடியவில்லை. தமிழ்ச் சமூகத்தில் அந்த நாவலுக்கு இருக்கும் இடத்தைப் பற்றி, அவரது நண்பர்கள் அதைப்பற்றிச் சொல்வதுபற்றி அவர் ஏன் கவலைப்படவேண்டும். அந்த நாவலுக்கு ஏதோ சர்வதேச அளவில் முக்கியத்துவம் கிடைத்தது போல் என் மீதான வெறுப்பை அதன் மூலம் அவர் வெளிப்படுத்திவந்தார்.
நான் ஒரு பேட்டியில், தமிழில் மேஜர் பொயட்டே இல்லை, மைனர் பொயட்ஸ்தான் இருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தேன். அது அவரைக் குறித்துச் சொன்னதாகத்தான் அவர் நினைத்துக்கொண்டார். நான் அப்படிச் சொல்லியிருக்கவில்லை. என்றாலும் அவர் ஒரு மைனர் பொயட்தான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இவரை மேஜர் பொயட் என்று சொன்னால் கம்பனை என்னவென்று சொல்லுவீர்கள். பாரதியை என்னவென்று சொல்லுவீர்கள். அவர்களைச் சுட்டுவதற்கு ஒரு பெயர் இருக்க வேண்டுமே. சிவராமூ கவிதைகள் அதிகமாக ஒன்றும் எழுதியிருக்கவில்லை. ஒருவேளை அவர் தன் முழுக் கவனத்தையும் கவிதைகளுக்கு மட்டுமே செலவழித்திருந்தாரென்றால் அப்படி ஆகியிருக்கக்கூடும். இன்னொரு வகையில் சொல்வதானால் அவரது சுபாவத்தினால் அதிகமும் நஷ்டமடைந்தது அவர்தான். பாரதியோடு எல்லாம் அவரை ஒப்பிடவே முடியாது. முதலாவதாகப் பாரதி அளவுக்கு இவருக்கு, சமுதாய அக்கறை கிடையாது. எந்தத் தேசத்திலிருந்து வந்தார், அந்தத் தேசத்தின் இன்றைய நிலை என்ன? அதுபற்றி அவருக்கு எந்த அக்கறையும் இருந்தது கிடையாது. மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கும் இடையிலான உறவு பற்றித்தான் அதிகமும் பேச முற்படுகிறார். ஆனால் அப்படியான ஒருவருக்கும் அவருடைய வாழ்க்கைக்கும் இருந்த முரண்பாடு இருக்கிறதே அதுதான் மிகவும் உறுத்தலாக இருந்தது. ஓயாமல் பிறரைக் கொத்திக்கொண்டேயிருக்கும் ஒரு பாம்பு, மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையிலான இணைப்பைப் பற்றித்தான் நான் எப்போதும் சிந்தித்து வருகிறேன் என்று சொன்னால் எப்படி இருக்கும், அதுபோல்தான் சிவராமூவின் செயல்களும்.
அவரைப் போன்ற ஆட்கள் பிற நாடுகளில் பல உயரிய கலைப் படைப்புகளைப் படைத்திருக்கிறார்கள். நமது மரபில் இப்படியான ஒரு நபரை முதன் முதலாகப் பார்க்கும்போது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. எனக்கும்கூட ஆரம்பத்தில் சில சந்தேகங்கள் இருந்தன. அவற்றுக்கு அப்போதே செவி சாய்த்திருந்தேன் என்றால் விஷயங்கள் வேறுவிதமாக நடந்திருக்கக்கூடும். ஆனால் அப்போது ஏனோ அப்படி நடக்கவில்லை. ஆனால் அவர் மூலமாகக் கிடைத்த அனுபவமானது என் நண்பர்களை நான் வடிகட்டித் தேர்ந்தெடுக்கவோ, எச்சரிக்கையாகப் பழகவோ என்னை மாற்றியிருக்கவில்லை. நண்பர்கள் வீட்டுக்கு வரக்கூடாது என்று நான் சொன்னதேயில்லை. ஓரிரு மாற்றங்கள் என்னில் ஏற்பட்டிருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் சிவராமூவை, அவருடனான அனுபவத்தை தனியான ஒன்றாகத்தான் நான் பார்த்தேன்.
என்னைத் துன்புறுத்த வேண்டும் என்று பலருக்கு ஆர்வம் இருந்து வருவது எனக்குத் தெரியும். ஆனால் அவரைப் போல் ஒரு தொழிலாக அதைச் செய்பவர்கள் வேறு யாருமே கிடையாது.
(தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்)


