Suraa முகப்பு | தொடர்புக்கு | Font Problems?
Sundaramsamy.com
Ninaivodai
பிரமிள் பக்கம் 1 2 3

Sura20உணவைப் பற்றியோ, ஆடை பற்றியோ அவருக்குக் கவனமே கிடையாது. உயிர் வாழ உண்ண வேண்டியிருக்கிறது. அம்மணமாக இருந்தால் பார்ப்பவன் உதைப்பான். அதற்கு மேலாக எதுவுமில்லை. என் வீட்டு மொட்டை மாடியின் நடுவிலிருந்த ஒரு கூரையின் நிழல் பன்னிரண்டு மணி வரையிலும் பக்கவாட்டில் இருக்கும். அந்த நிழலுக்குமேல் ஒரு பலாமரத்தின் கிளைகளும் வீச்சாக இருக்கும். அந்த இடத்தில் வெறும் தரையில் படுத்துக்கொண்டிருப்பார். திடீரென்று எழுந்திருந்து வெளியேபோய் சுற்றிவிட்டு வருவார். எங்கு போவார் என்பது தெரியாது. திரும்பி வரும்போது முகத்தைப் பார்த்தால் நாலைந்து மைல்கள் சுற்றியிருப்பதுபோல் தோன்றும். ஒரு காசு வீணாக்கமாட்டார். செலவழிக்கவே யோசிப்பார். பணமும் கையில் மட்டாகத்தான் எப்போதும் இருக்கும்.

ஆரல்வாய்மொழியில் அவர் அறை இருந்தாலும் பெரும்பாலும் அவர் என்னுடன்தான் இருப்பார். அப்படி இருப்பது திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. பேசிக்கொள்ளவும் பரஸ்பரம் கேலிசெய்து கொள்ளவும் நிறைய சந்தர்ப்பங்கள் கிடைத்துக்கொண்டிருந்தன. தோசை சாப்பிடுவதில் எனக்கு இருந்த பலவீனத்தை அவர் பலமாகப் பிடித்துக்கொண்டு கேலி செய்வார். எதாவது பிரச்சினைகளுக்கு நான் தரக்கூடிய விளக்கம் அவருக்குப் பிடிக்காமல் போகிறபோது, ‘உமக்குத் தோசை திங்கத்தான் தெரியும்’ என்பார். நம்பி, கூட இருந்தான் என்றால், ‘மாலாடு பிடிக்கும் என்று அவர் அம்மா சொல்லியிருக்கா’ என்று அவரை மேலும் தூண்டி விடுவான். இதுபோல் என்னை இறக்க அவரிடம் பல பிடிகள் இருந்தன. அதை உரிய சந்தர்ப்பத்தில் பயன்படுத்தவும் அவருக்குத் தெரியும்.

திடீரென்று ஒரு நாள் பெட்டி படுக்கையுடன் சிவராமூ என் வீட்டுக்கு வந்தார். அலங்கோலமாக இருந்தார். என்ன என்று கேட்டேன். ‘பெரிய சிக்கல் ஓய்’ என்றார். அதைப்பற்றிப் பின்னால் பேசிக்கொள்ளலாம் என்றேன். சொன்னார். தெளிவாகவே சொல்லவில்லை. அவருடைய வாழ்க்கையில் நடந்த எந்த விஷயத்தைப்பற்றிக் கேட்டாலும் சொற்ப வார்த்தைகளில் மென்று துப்புவார். நான் மீண்டும் மீண்டும் கேட்டு ஒரு மாதிரி விஷயத்தைப் புரிந்துகொண்டேன்.
டி. பி.யைக் கவனித்துக் கொண்டிருந்த கிழவியின் மகளுடன் அவருக்கு ஏதோ தகராறு ஏற்பட்டுவிட்டது. ‘அந்தப் பெண் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்திருக்கிறாள். நான் வந்துவிட்டேன்’ என்றார். அதற்குமேல் அவரிடமிருந்து புரிந்துகொள்ள முடியவில்லை.

எனக்கும் நம்பிக்கும் முப்பது வருடங்களில் ஏற்பட்ட நெருக்கமானது சிவராமூவுடன் நாலைந்து மாதங்களிலேயே எனக்கு ஏற்பட்டுவிட்டது. அவர் கொள்ளும் கோபங்கள் எல்லாம் எனக்குள் பெரிய வலியை ஆரம்பத்தில் தோற்றுவித்திருக்கவில்லை. அவர் என்னை நிறைய உற்சாகப்படுத்தியிருக்கிறார். ‘அஃக்’ பரந்தாமன் பல தடவை சிவராமூவைப் பார்க்க எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். ஒரு முறை பிரம்மராஜன்கூட வந்திருந்தார். அப்போது எனக்கு பிரம்மராஜன் என்று தெரியாது. ஏதோ ஒரு கல்லூரி மாணவர் என்றுதான் பதிவாகியிருந்தது. அவரும்கூட சிவராமூவைப் பார்க்கத் தான் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார் என்று நினைக்கிறேன். அப்படிப் பலரும் அவரைப் பார்க்க வருவதுண்டு. அஃக் பரந்தாமன் சிவராமூவின் கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகம் போட்டிருந்தார். அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு என்று நினைக்கிறேன். அதற்கு சாமிநாதன் தான் முன்னுரை எழுதியிருந்தார்.

எனக்கும் நம்பிக்கும் இடையில் இருந்த அதே அளவுக்கான நெருக்கம் எனக்கு சிவராமூவுடன் நாலைந்து மாதங்களிலேயே ஏற்பட்டிருந்தது என்று சொன்னேன் இல்லையா? அது பற்றி நம்பிக்கு உள்ளூர வருத்தம் இருந்தது. சில சமயங்களில், சிவராமூவுடன் நெருங்கிப் பழகாதீர்கள் என்று சொல்லுவான். ஏன் என்று கேட்பேன். அவரிடம் ஒருவித துர்புத்தி இருக்கிறது என்று சொல்லுவான். தனக்குச் சொந்தமாக இருந்த ராமசாமியை சிவராமூ வந்து எடுத்துக் கொண்டுவிட்டான் என்ற எண்ணம் நம்பி மனதில் இருந்ததாக எனக்குத் தோன்றியது. அந்த ஆற்றாமை காரணமாகத்தான் அவன் என்னை எச்சரிப்பதாக நான் எடுத்துக்கொண்டேன். பொதுவாகவே நான் அவனுடன் எந்த விஷயம் குறித்தும் எதிர்வாதம் செய்ய மாட்டேன். அவனிடம் லேசாகச் சொல்லிப் பார்ப்பேன். அதன் பின் விட்டு விடுவேன். ஏனென்றால் உணர்ச்சிபூர்வமாக ஒரு விஷயத்தைப்பற்றிப் பேச்சு நகரும்போது அவனால் அதை ஒரு பிரச்சினையாகத்தான் சொல்ல முடியுமே தவிர விவாதமாகக் கொண்டு போக முடியாது.

Sura21சிவராமூ யாராவது ஒருவரது வீட்டில் தங்கினார் என்றால் அந்த வீட்டிலிருப்பவர்களிடையே, கணவன் மனைவியிடையேகூட ஒரு பிரச்சினை நிச்சயம் உருவாகி விடும். பெரும்பான்மையான குடும்பங்களில் அப்படி நடந்திருக்கிறது. எங்கள் வீட்டில் அப்படியான பிரச்சினை வரவில்லை. ஆனால் அவர் கமலாவிடம் பேசும் போது என் மீது சந்தேகம் வரும்படியாக ஏதாவது பேசுவார். கிண்டல் மாதிரியும் இருக்கும். ஆனால் ஒருவித விஷ ஊசியை மறைத்துக் கொண்டிருப்பாகவும் தோன்றும். எங்கள் வீட்டில் அவரது முயற்சி ஏனோ வெற்றி பெறவில்லை. இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருந்தால் ஒருவேளை வெற்றி அடைந்திருந்தாலும் அடைந்திருக்கும். நம்பியின் வீட்டில் ஒரு பத்துப் பதினைந்து நாட்கள்தான் தங்கியிருந்தார். அதற்குள் அவனுக்கும் அவனது மனைவிக்கும் இடையில் ஒருவித மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டது. கொஞ்ச நாளில் அவர் அங்கிருந்து எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார். ‘நம்பியை இனி ஜென்மத்துக்கும் பார்க்க போவதில்லை’ என்று சொன்னார். அதை நம்பியிடம் சொன்னதும், அவர் என்ன அப்படிச் சொல்வது, அதற்கு முன்பே நான் அப்படித் தீர்மானித்து ஆகிவிட்டது என்று சொன்னான். இருவரிடமும் அதன் பின் பல தடவை என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறேன். இருவருமே எதுவுமே சொல்லவில்லை.

அவர் எங்கள் வீட்டில் தங்கியிருந்த நாட்களில் நான் என் அப்பாவுக்கு அவரை அறிமுகப்படுத்தி வைக்கவேயில்லை. சிவராமூவும் அதுபற்றிக் கவலைப்படவில்லை. எனக்கு என்ன தோன்றியது என்றால் என் அப்பாவின் மனதில் இரண்டு விதமான பட்டியல்கள் இருந்தன. பார்த்தசாரதி போன்றோரெல்லாம் ஒரு பட்டியலில் வருவார்கள். நாகராஜன் போன்றவர்கள் எல்லாம் இன்னொரு பட்டியலில் வருவார்கள். சிவராமூவையும் என் அப்பா இரண்டாவது பட்டியலில்தான் வைத்திருப்பார். எனவே, சிவராமூவை என் அப்பாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தால் ஏதாவது சண்டை வரும் என்று நினைத்து நான் அதைச் செய்திருக்கவில்லை. என் அப்பாவும் அதுபற்றி எதுவும் கேட்டிருக்கவில்லை.

கடிதம் எழுதினாரென்றால் மிகக் கடுமையாக விமர்சித்துதான் எழுதுவார். வெங்கட் சாமிநாதன் விமர்சித்து எழுதினாலும் மிகவும் மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் அவர் சொல்லும் விமர்சனங்களில் ஒரு தர்க்கபூர்வமான நியாயம் இருக்கும். சிவராமூ எழுதுவது அப்படி இருக்காது. அதோடு சாமிநாதன் எழுதியதற்கு நாம் விளக்கம் சொன்னால் அவர் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுவார். உறவை மீண்டும் ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் சிவராமூ விடம் அது சாத்தியமில்லை. வேறு எழுத்தாளர்களுடன் எப்படி உறவு கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்த அளவில் இவ்விதமாகத் தான் இருந்து வந்தார். அதோடு சிவராமூவைப் பற்றிப் பேசும்போது வெ.சா. பற்றியும், வெ.சா. பற்றிப் பேசும் போது சிவராமூ பற்றியும் பேச வேண்டி வந்துவிடுகிறது. இரண்டு பேரும் தமிழ்ச் சூழலில் சேர்ந்தே இயங்கி வந்தார்கள் என்பதால் அது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் என்னளவில் இரண்டு பேரும் முற்றிலும் வேறான இரு நபர்கள்தான்.

அது மட்டுமல்லாமல் என்னைப் பற்றி மட்டுமல்ல, தமிழ் நாட்டில் இருக்கும் வேறு யாரைப் பற்றியும் எந்த விதமான விமர்சனத்தை வைப்பதற்கான அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு. அவர் சொல்பவற்றில் வெறும் கோணல் மட்டுமல்ல ஒருவித குரூரமும் இருக்கும். தினமணியில் வேலை கிடைத்ததும் கொல்லிப் பாவையை ராஜமார்த்தாண்டன், ராஜகோபாலிடம் ஒப்படைத்துவிட்டு மதுரைக்குப் போய்விட்டிருந்தார். ராஜகோபால் என்னைச் சந்தித்து எட்டு இதழ்கள் தன்னால் கொண்டு வர முடியும் என்றும் நான் கொஞ்சம் ஆதரவு தந்தால் உற்சாகமாக அதைச் செய்ய முடியும் என்றும் சொன்னார். நானும் என்னால் முடிந்த ஆதரவைத் தந்து வந்தேன். இது சிவராமூவுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. சிவராமூ ஏதாவது படைப்பை அனுப்பினாலும் ராஜகோபால் அதை வெளியிடத்தான் போகிறார். இத்தனைக்கும் பலருக்கும் என் மீது இருப்பதைவிட அதிக ஈடுபாடு சிவராமூ பேரில் இருந்திருக்கிறது. ராஜகோபால், ராஜமார்த்தாண்டனுக்கும் சிவராமூ பேரில் ஒருவித ஈர்ப்பும் மதிப்பும் இருந்திருக்கிறது. அது மிகவும் இயல்பான மிகவும் சாதாரணமான விஷயம்தான். நுட்பமான வாசகர் ஒருவர் அவர் பேரில் ஈடுபாடு கொள்வது என்பது மிகவும் இயல்பான விஷயம்தான். ராஜகோபாலுக்கு என்னைப் பற்றிக் கெட்டவார்த்தைகள் போட்டு -அவற்றையெல்லாம் வெளியில் சொல்லவே முடியாது -கடிதம் எழுதியிருக்கிறார். அதுபோல் பலருக்கும் எழுதியிருப்பார் என்றுதான் நான் நம்புகிறேன்.

 
Top


Powered By Minveli © sundararamaswamy.com All Rights Reserved