Suraa முகப்பு | தொடர்புக்கு | Font Problems?
Sundaramsamy.com
Ninaivodai
பிரமிள் பக்கம் 1 2 3

Pramizhசிவராமூவை (பிரமிள்) நான் நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர் மீது எனக்குக் கவர்ச்சியும், கவர்ச்சியினால் ஒரு மானசீக உறவும் ஏற்பட்டிருந்தது. அவர் சாதாரணமானவர் அல்ல என்ற நினைப்பு எப்படியோ மனதிற்குள் வந்திருந்தது. முதலில் படித்த ஒருவருடைய எழுத்து எது என்பதையோ, முதலில் ஒருவரைப் பார்த்தது எப்போது என்றோ சொல்லும்போது என் ஞாபகம் பற்றிச் சிறிது நம்பிக்கையில்லாமல்தான் இருக்கிறது. சிறு பிசகு அதில் இருக்கலாம். பெரிய பிசகு இருக்காது என்று நினைக்கிறேன். சிவராமூ எழுத்துவில் எழுதியிருந்த எஸ். பொ.வின் ‘தீ’ பற்றிய கடிதம் மனதில் நன்றாகப் பதிந்திருந்தது. அது ஒரு விளாசல் கடிதம். விளாசல்கள் மீது எனக்கும் நம்பிக்கும் அந்த வயசில் ரொம்பக் கவர்ச்சி இருந்தது. எல்லாவற்றையும் நொறுக்கி எறியவேண்டும்! அந்த ஆவேசம்தான் மனதிற்குள். ஆவேசம் ஏற்படும்போது சந்தோஷமாக இருந்தாலும் பின்னால் தனியாக நான் யோசிக்கும்போது குறையாக இருந்தது. ‘தீ’ என்ற நாவலை நான் அப்போது படித்ததில்லை.

‘தீ’ வணிக எழுத்தல்ல. சிவராமூவின் விமர்சனத்திலிருந்தே அதை ஊகிக்க முடிந்தது. எஸ். பொ. தீவிரமாக எதையோ சொல்ல முயன்றிருக்கிறார். வழக்கத்திற்கு மாறாக ஏதோ ஒன்று. பழமையான மதிப்பீடுகளைக் குலைத்துப்போடப் பார்த்திருக்கிறார். அதில் அவர் வெற்றிபெறாமல்கூடப் போயிருக்கலாம். சிவராமூ சொல்கிற கருத்துக்கள் எல்லாமே சரி என்று வைத்துக் கொண்டாலும்கூட எதற்கு இவ்வளவு காரமான tone என்று நினைத்தேன். சிவராமூவைச் சந்தித்து, ‘ஓர் உயிரும் ஈருடலும்’ ஆன பின்பு பல சந்தர்ப்பத்திலும் இந்தக் கடிதத்தைப் பற்றிப் பேசியிருக்கிறேன். நிறைய விவாதித்திருக்கிறோம். அதற்குள் ‘தீ’யைப் படித்திருந்ததால் சிவராமூவின் கடிதத்தை நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்திருந்தது. எஸ். பொ.வை அவருடைய குறைகளுக்காக விமர்சிக்க வேண்டுமா அல்லது நிராகரிக்க வேண்டுமா என்பதைத்தான் சம்பாஷணைப் பாங்கில் நான் சிவராமூவிடம் ஒன்றிரண்டு முறை கேட்டேன். சிவராமூ தன்னை நியாயப்படுத்திப் பேசிக்கொண்டே இருந்தார். அவராகச் சில சமயம் தன்னை மறுபரிசீலனை செய்து சில சறுக்கல்களையும் அபூர்வமாக ஒத்துக்கொண்டு இருக்கிறார்.

திருவல்லிக்கேணியில் தமிழ்ப் புத்தகாலயமும் ஸ்டார் பிரசுரமும் ஒன்றாக இருந்த காலத்தில் தினமும் மாலையில் ஐந்தாறு எழுத்தாளர்கள் அங்கு வந்து கூடுவார்கள். க. நா. சு., செல்லப்பா, கு. அழகிரிசாமி மூவருக்கும் நிரந்தர ஆஜர் உண்டு. சில நாட்களில் அழகிரிசாமியுடன் நா. பார்த்தசாரதியும் சேர்ந்து வருவார். நானும் நம்பியும் சென்னையில் இருந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் தவறாமல் ஆசையுடன் அங்கு போவோம். கிண்டலும், கேலியும், நகைச்சுவையும் வெளிப்படும் அட்டகாசமான பேச்சுக்களாக இருக்கும். சிவராமூ செல்லப்பாவுடன் இருந்த நாட்களில் அவரையும் அங்கு அழைத்துக்கொண்டு போவாராம். அப்போதைய சிவராமூவைப் பற்றி என்னிடம் அதிகம் சொல்லியிருப்பவர் அழகிரிசாமி. பேசாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டிருப்பார் என்பதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்வார். அவருடைய கலகலப்பான சுபாவத்தால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடிந்திருக்கவில்லை போலிருந்தது. சிவராமூவுக்கு அப்போது வயசு மிகக்குறைவு. சென்னையும் அவருக்கு அன்னியமானது. அவரைச் சுற்றி எப்போதும் இருந்ததும் சீனியர் எழுத்தாளர்கள். இவையெல்லாம் காரணமாக இருந்திருக்கலாம் என்று நான் சொல்வேன். அழகிரிசாமி அவருடைய பேச்சுச் சாமர்த்தியத்திற்கு ஏற்றாற்போல், ‘ஐயா பேச வேண்டாம், ஒரு புன்னகை பூத்தால் தண்டனை உண்டா?’ என்று கேட்பார்.

ஒரு சில வருடங்களுக்குப் பின் சென்னைக்குச் சென்ற போது செல்லப்பாவுக்கு சிவராமூவைப் பற்றி ஒரு மறுபரிசீலனை உருவாகிக் கொண்டிருந்தது. சில சமயம் மனதைச் சங்கடப்படுத்தும் விதமாக நடந்துகொண்டு விடுகிறான், என்ன செய்வது என்றார். சிவராமூவின் மனதை முழுமையாக மௌனி ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததும் செல்லப்பாவுக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கலாம். சதா தன்னிடம் மௌனியைப்பற்றியே பேசிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். மௌனியைப்பற்றி சிவராமூ எழுதியிருக்கும் கத்தையையும் காண்பித்தார். பெரிய கத்தையாக இருந்தது. அதை அவர் காட்டிய முறையில் அதை வெளியிட வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இல்லை என்று தோன்றிற்று. சில விஷயங்களேனும் சிவராமூ முக்கியமாகச் சொல்லியிருப்பார் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. படித்துப் பாருங்களேன் என்று நான் செல்லப்பாவிடம் சொன்னேன். கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்க வேண்டும் என்றார் அவர். தொடர்ந்து எழுத்தைப் படித்துக்கொண்டிருந்த எனக்கு என்னிடம் காட்டிய கையெழுத்துப் பிரதியிலிருந்து செல்லப்பா அதிகமாகத் தேர்வு செய்யவில்லை என்றுதான் தோன்றிற்று.

ஒரு முறை அவர் சென்னைக்கு வந்தபோது - 1972 ஆக இருக்கலாம் - எனக்கSura27ு எழுதிய கடிதங்களில் எல்லாம் நாகர்கோவில் வர விருப்பம் தெரிவிக்கும் வரிகள் இருந்தன. வெளிப்படையாகச் சொல்லாத தினுசில். பத்மநாபன் தன்னை அழைத்திருப்பதாகவும் தனக்குத் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப் போகிறார் என்றும் எழுதியிருந்தார். பத்மநாபன் டில்லியிலிருந்து நாகர்கோவில் வந்து ஆரல்வாய்மொழி அண்ணா கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். இங்கிலீஷ் பேராசிரியர். ஒரு ஆசிரியராக அவருக்கு மிகவும் நல்ல பெயர் ஏற்பட்டிருந்தது. அவரும் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் சிவராமூவை, தான் அழைத்திருப்பதாகச் சொன்னார். அவரைத் தங்கவைக்க இடம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். நானும் அவரும் சேர்ந்து சிவராமூவைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பத்மநாபனுக்கு இருக்கிறதோ என்று நினைத்தேன். ஆனால் நான் அதிகமாகச் சம்பந்தப் பட்டுக் கொள்ளவில்லை. என் நிலை மோசமாக இருந்தது. வீட்டில் பிரச்சினைகள். வியாபாரத்திலும் பிரச்சினைகள். நம்பியைக்கூட அதிகம் பார்க்காமல் இருந்தேன்.

இந்நிலையில் சிவராமூ என் பொறுப்பில் வந்தால் சரிவர அந்தக் காரியத்தைச் செய்ய முடியாது என்று நினைத்தேன். அவர் சில மாதங்களேனும் இங்கு தங்கியிருக்க வேண்டும் என்ற யோசனையுடன் வருகிறார் என்பதும் தெரிந்தது. அவர் தங்கும் விஷயமாக நான் நிறைய பொறுப்புக்கள் எடுத்துக் கொள்ளும்படியாகத் தான் சந்தர்ப்பங்கள் உருவாகும்.

சிவராமூவுக்கு என் நிலையை மறைமுகமாகத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினேன். அவரைச் சந்திப்பதிலும், பேசுவதிலும் எனக்கும் நம்பிக்கும் இருக்கும் ஆசையைத் தெரிவித்திருந்தேன். மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. அவருடன் பேச ஆசைப்படும் விஷயங்கள் நிறைய இருந்தன. அவர் மர்மமாக இருந்தார். அவரைச் சுற்றியிருந்த மர்மங்களை எல்லாம் விரட்டிவிட்டு அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவருடைய வாசிப்பு, வேறு பாஷை எழுத்தாளர்களைப் பற்றியும், தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியும் அவருடைய அபிப்பிராயங்கள், திருகோணமலைப் பின்னணிகள், ஓவியம் பற்றிய ஈடுபாடுகள், ஆத்மீக ஞானம் பற்றிய அனுபவங்கள், ஜே. கிருஷ்ணமூர்த்தி, கவிதை சம்பந்தமாக அவர் தெரிந்து வைத்துக்கெண்டிருக்கும் ரகசியங்கள், இருந்திருந்து சிவானந்த சரஸ்வதியிடம் எப்படி அபிமானம் ஏற்பட்டது . . . இப்படிப் பல விஷயங்கள். சிவராமூவுக்கு எழுதிய கடிதத்தில் என் பிரச்சினைகளைச் சொல்லி, நான் விரும்பும் காரியங்கள் எதையுமே சந்தோஷமாகச் செய்ய முடியாத சோதனை இருப்பதையும் எழுதியிருந்தேன்.
ஒருநாள் சிவராமூ என் வீட்டுக்கு வந்தார். கையில் பெட்டியுடன், வேறு சில பைகளுடன். அறையைக் காலி செய்துவிட்டு வருவது தெரிந்தது. ‘சென்னையிலிருந்து நேராக வருகிறேன்’ என்றார். களைத்துப்போய் பறட்டையான கோலத்தில் இருந்தார். குளித்துவிட்டு வந்தபோது முகம் புதுசாக இருந்தது. அன்று என் வீட்டில் என் நண்பர்களான எழுத்தாளர்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தார்கள். காசியபன் இருந்தார். அது நல்ல ஞாபகம். கூட இருந்தது யார் என்பது ஞாபகம் இல்லை.

காசியபனுக்கு சிவராமூவை அறிமுகப்படுத்தி வைத்தேன். இவரா சிவராமூ என்று சத்தமாகக் கேட்டார். தன் ஜன்மத்தில் அவரைப் பார்க்க வாய்க்கும் என்று நினைத்திருக்கவில்லை போல் இருந்தது. நாகர்கோவிலில் அவர் இருந்த காலத்தில் நான் அவரை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் போதெல்லாம் ஏறத்தாழ இதே மாதிரி தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எனக்கு இது ஒருவிதமான சந்தோஷத்தையும் பெருமையையும் தந்தது. ஒவ்வொரு தடவை இப்படி நடக்கும்போது நான் சிவராமூவின் முகத்தைக் கவனிப்பேன். எதுவுமே நடக்காத மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு இருப்பார். அவரது சுபாவத்தில் இருந்த விசித்திரங்களையும் தந்திரங்களையும் கண்டு பிடிப்பதில் எனக்கும் நம்பிக்கும் ஒரு போட்டி இருந்தது. ஒவ்வொரு சமயம் நம்பியைச் சந்திக்கும்போதும் நாலைந்து புதிய கண்டுபிடிப்புகளைச் சொன்னேன். ஒரு தடவை நம்பி, ‘நான் உங்ககிட்ட தோத்துப் போயாச்சு, ஆளை விட்டுடுங்கோ’ என்றான். சிவராமூ விடம் மிக நெருக்கமாகிக் கொஞ்சலும் கேலியும் இருந்த காலத்தில் நானும் நம்பியும் மாற்றி மாற்றி ஸ்வரம் வாசிக்கும் நாதஸ்வரக்காரர்கள் மாதிரி சிவராமூ வின் தந்திரங்களை அவரிடமே அவிழ்த்து விடுவோம். அவருக்குச் சந்தோஷம் தாங்காது. நாங்கள் சொல்லும் ஒவ்வொன்றுக்கும் பெரிதாகச் சிரிப்பார். ஒரு தடவை, ‘ஓய், சூது வாது இல்லாம உலகத்தில பொழைக்க முடியாது சாமி’ என்றார்.

ஒவ்வொரு தடவை ஆரல்வாய்மொழியிலிருந்து சிவராமூ நாகர்கோவில் வரும்போதும் அவருடைய தங்கல்பற்றி விசாரிப்பேன். ‘போகுது ஓய், எல்லாம் டேர்ற்றி பிஸினஸ்’ என்பார். என்ன சொல்கிறார் என்பது புரியவேயில்லை. ஒரு நாள் இரண்டு நாள் என்னுடன் இருந்துவிட்டு மீண்டும் ஆரல்வாய் மொழிக்குப் போவார். நாகர்கோவிலில் இருக்கும்போது நான் அவருடன் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பே கிடையாது. அவர் அவருடைய உலகத்துக்குள்ளேயே ஆழ்ந்து கிடப்பார். படுத்துக்கொண்டே தியானம். கொஞ்சம் கொஞ்சம் படிப்பார். அவர் வெரோஷியஸ் ரீடரே அல்ல. தியானத்தில் எந்த வகை என்று கேட்டிருக்கிறேன். கிருஷ்ணமூர்த்தி என்பார். அல்லது ஜிட்டு என்பார். ஜே. கே. என்று சொல்வது அவருக்குப் பிடிக்காது. ‘மதராஸிலே ஜெயகாந்தன ஜே. கே. னு சொல்றாங்க ஓய்’ என்பார். நானும் அவரும் தியானத்தைப் பற்றி ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருப்போம். ஓஷோ பற்றி ஒரே பேச்சாக இருந்த காலம். ‘உங்களுக்குப் பிடிக்குமா?’ என்று கேட்டிருக்கிறேன். ‘நமக்கு ஒத்து வராது ஓய்’ என்று சொல்லியிருக்கிறார்.

 
Top


Powered By Minveli © sundararamaswamy.com All Rights Reserved