| கிருஷ்ணன் நம்பி | பக்கம் 1 2 3 4 |
திருவனந்தபுரத்தில் நீல. பத்மனாபனின் ‘உறவுகள்’ நாவல் பற்றி ஒரு கூட்டம் நடந்தது. நான் அவனிடம் சொன்னேன், இப்படி ஒரு மீட்டிங் நடக்கப் போகிறது, நான், எம். எஸ்., உமாபதி, ராஜமார்த்தாண்டன் எல்லோரும் காரில் போகப் போகிறோம் என்று சொன்னேன். அவன் வருகிறேன் என்று சொல்வான் என்று நான் நினைத்திருக்கவில்லை. சட்டென்று நானும் வருகிறேன் என்று சொன்னான். போனோம். முன் இருக்கையில் அவன் உட்கார்ந்துகொண்டான். நாங்கள் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டோம். என் கூடவே இருந்தான். நாங்கள் இருவரும் ஒரு ஹோட்டலில் தங்கினோம். இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்தோம். அதன் பின் அவனை வீட்டில் கொண்டு போய் விட்டேன். அப்படிக் கொஞ்ச காலம் கழிந்தது. நிறைய புத்தகங்களைப் படி, எழுது. அது உன் மனதுக்கு ஆறுதலைத் தரும் என்று சொன்னேன். என்னால் முடியவில்லையே என்று வழக்கம்போல் சொன்னான். நான் பல புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். எஸ். வி. ராஜதுரையின் ‘எக்சிஸ்டென்ஷியலிசம்’ புத்தகம் அப்போது வெளிவந்திருந்தது. அதைக் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். அந்தப் புத்தகம் எப்போது வெளிவந்தது என்று பார்த்து அதிலிருந்து நம்பி கால் ஆப்பரேஷன் ஆன காலத்தை நாம் கண்டு கொண்டு விடலாம். புத்தகம் கடினமானதாக இருக்குமோ என்று முதலில் பயந்தான். அதன் பின் அந்தப் புத்தகத்தைப் படித்தான். அது அவனுக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.
அப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்கும் பழக்கம் அவனுக்கு அதிகரிக்க ஆரம்பித்தது. ரொம்பவும் தீவிரமான புத்தகங்களையெல்லாம் படிக்க ஆரம்பித்தான். ராஜநாராயணனின் கதைகளை இப்போது படித்துப் பார்க்கும்போது பல குறைகள் தெரிய வருகிறது. ஆரம்பத்தில் அவை எதுவும் அப்படித் தென்பட்டிருக்கவில்லை என்று சொன்னான். நீ விமர்சனங்கள் எழுது என்று சொன்னேன். அப்போது உமாபதி, நான் எல்லோரும் சேர்ந்து தெறிகள் என்றொரு பத்திரிகை நடத்தினோம். அது உமாபதியின் பத்திரிகைதான். நான் சில உதவிகள் செய்து வந்தேன். அந்தப் பத்திரிகைக்கு அனுப்பு, அவர் பிரசுரிப்பார் என்று சொன்னேன். சதங்கையில் அவனது விமர்சனங்கள் வெளிவந்தன. கிளிப் பண்டிதர் என்ற பெயரில் எழுதியிருக்கிறான். அந்தக் காலகட்டத்தில்தான் ‘மருமகள் வாக்கு’ கதை எழுதினான். எனக்குப் பெரிய பெரிய கடிதங்கள் எழுதுவான். பணம் ரொம்பவும் நெருக்கடியாக இருந்தால்தான் என்னிடம் கேட்பான். அவனுடைய மருத்துவச் செலவுகள் எல்லாம் அவனுடைய அப்பா தந்தாரா, அவனாகவே பார்த்துக் கொண்டானா தெரியவில்லை. மருந்துச் செலவு, ஆப்பரேஷன் செலவு, மருத்துவமனை வாடகை போன்றவற்றையெல்லாம் அவனே தான் கவனித்துக் கொண்டான். டாக்டருக்குத் தனியாக பீஸ் தர வேண்டியிருக்குமே? அதற்குப் பணம் என்னிடம் இல்லை என்று சொன்னான். சரி நான் தருகிறேன் என்று சொன்னேன். இன்று நாள் நல்ல நாளாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இன்று இவனை அழைத்துப் போய்விடுகிறேன். நாளை வந்து பணத்தைத் தருகிறேன் என்று சொல்லி அவனை அழைத்து வந்திருந்தேன். மறுநாள் போய் பணத்தைத் தந்தேன். திருவனந்தபுரத்துக்குச் சிகிச்சைக்கு அல்லது ஏதாவது கூட்டத்துக்குப் போவது என்றால் நான்தான் அழைத்துப் போவேன். ‘காகங்கள்’ கூட்டம் ஆறு மணிக்கு என்றால் நாலரை மணிக்கே அவனை அழைத்து வரப் போய்விடுவேன்.
அதன் பின் டாக்டரைப் போய்ப் பார்த்தோம். உங்கள் நண்பர் வெளியில் இருக்கட்டும். நீங்கள் மட்டும் வாருங்கள் என்று சொன்னார். உள்ளே போனேன். ஒவ்வொரு எக்ஸ்ரேயாகப் பார்த்தார். அவனுக்கு இப்போது கான்சர் செகண்டரி ஸ்டேஜில் இருக்கிறது என்று சொன்னார். அதாவது புற்று நோய் உடம்பில் ஏதோ ஒரு பகுதியிலிருந்து அதற்குச் செய்த சிகிச்சையால் அது முழுவதுமாகக் குணமாகாமல் உடம்பின் பிற பாகங்களுக்குப் பரவி இறுதியில் இதயத்தைப் பாதிப்பதில் போய் முடிந்திருக்கிறது. அவனது மரணம் என்பது மிகவும் வலி நிறைந்த ஒன்றாக இருக்கும். நாட்கள் போகப் போக நுரையீரல் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிக்கொண்டே போகும். கடைசிக் கட்டத்தில் ஆக்ஸிஜன் கொஞ்சமாகப் போய்க்கொண்டுமிருக்கும். போதுமான அளவுக்குப் போகவும் செய்யாது. மூச்சு முட்டல் அதிகமாகும். ஒரு நல்ல மருத்துவமனையில் அவரை அட்மிட் செய்து, ஆக்ஸிஜன் குழாய்கள் பொருத்தி வைக்க வேண்டும். அப்போதும் பலவித வேதனைகளை அனுபவிக்க வேண்டி வரும். குறைந்தபட்சம் இறக்கும் போது அதிக வலியின்றி இறக்க அதைச் செய்தாக வேண்டும். இந்த விஷயத்தை அவரிடம் நீங்கள் சொல்லிவிடுங்கள். அவரது குடும்பத்தில் ஏதாவது செய்ய வேண்டியிருக்கலாம். மனைவியிடம் ஏதாவது சொல்ல வேண்டியிருக்கலாம். திட்டவட்டமாக நான் சொல்கிறேன். பதினைந்து நாட்களிலிருந்து ஒரு மாதத்திற்குள் அவர் இறந்துவிடுவார். இதை நீங்களே அவரிடம் சொல்லி விடுங்கள். இள வயதினராக இருக்கிறார். நான் அமெரிக்காவிலிருந்து வந்து கொஞ்ச காலம்தான் ஆகிறது. தனியாக கிளினிக் கூட நான் இன்னும் போடவில்லை. நோயாளிகளிடம் இது போல் பேசிப் பழக்கம் இல்லை. நீங்களே சொல்லிவிடுங்கள் என்று சொன்னார்.
அதன் பின் என் மகளுக்குத் திருமணம் நிச்சயமாகிக் கல்யாண வேலைகள் ரொம்பவும் மும்மரமாக நடந்துகொண்டிருந்தன. அப்போது அவனை மோரிஸ் ஹாஸ்பிட்டலில் சேர்த்து இருப்பதாக அவனுடைய தம்பியிடமிருந்து தகவல் வந்தது. ஹாஸ்பிட்டலுக்குப் போனேன். முதலில் அந்த மருத்துவரைப் பார்த்ததும் இங்கு மூச்சு முட்டல் வந்தால் ஆக்ஸிஜன் கொடுப்பதற்கு வசதியிருக்கிறதா என்று கேட்டேன். இல்லை என்று சொன்னார். நாகர்கோவிலில் வேறு மருத்துவமனையில் அந்த வசதி இருக்கிறதா என்று கேட்டேன். இங்கு எங்குமே இல்லை. அந்த வசதி வேண்டுமானால் நீங்கள் திருவனந்தபுரம்தான் போக வேண்டும் என்று சொன்னார். நான் இது பற்றி அவனிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்து அவனுடைய மனைவியிடம் சொன்னேன். மூச்சு முட்டல் அதிகமாகி ரொம்பவும் கஷ்டப்படுவான். திருவனந்தபுரத்துக்குக் கொண்டு போவோம். ஆக்ஸிஜன் குழாய் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று சொன்னேன். பார்த்துச் செய்வோம் என்று சொன்னாள். அவள் எதனால் அப்படிச் சொன்னாள் என்று என்னால் சொல்ல முடியவில்லை. எல்லாக் கதவுகளும் அடைபட்டுவிட்ட நிலையில் விரக்தியில் அப்படிச் சொன்னாளா அல்லது அவனது கடைசிக் கால வேதனை என்பது குறித்து அவள் மனதில் அவ்வளவு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டிருந்ததா, என்ன காரணம் என்று என்னால் சொல்ல முடியவில்லை. திருவனந்தபுரத்துக்குக் கொண்டுபோவதானால் நான்தான் அதைச் செய்தாக வேண்டும். அவனுடைய தம்பி சின்னவன். அவனால் முடியாது. அவனுடைய அப்பா அம்மாவுக்கெல்லாம் அந்த காரியத்தைச் செய்ய முடியாது. எனவே திருவனந்தபுரத்துக்குப் போவதானால் அவர்கள் என்னைத் தான் அழைத்துச் செல்லும்படிச் சொல்ல வேண்டும். என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. நான் என் வீட்டிற்குப் போய்விட்டேன். மறுநாள் போய்ப் பார்த்தேன். திருவனந்தபுரத்துக்குப் போவது பற்றி எந்தப் பேச்சும் எழவில்லை. தினமும் போய்ப் பார்த்து வந்தேன்.
(தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்)


