Suraa முகப்பு | தொடர்புக்கு | Font Problems?
Sundaramsamy.com
Ninaivodai
கிருஷ்ணன் நம்பி பக்கம் 1 2 3 4

Sura16என்னுடன் பேசியது என்பது அவனுக்கு ரொம்பவும் உபயோகமானதாகத்தான் இருந்தது. ஆரம்பத்தில் அவன் இலக்கியம் தொடர்பாகப் பேசுவதை உணர்ந்துகொள்ளும் நிலையில் மட்டும்தான் இருந்தான். சரளமாக அதுபற்றி பேசவோ எழுதவோ முடிந்திருக்கவில்லை. போகப்போகத்தான் அந்தத் திறமையை வளர்த்துக்கொண்டான். உதாரணத்துக்கு நீல. பத்மனாபன் பற்றிப் பேசியபோது நன்றாகத்தான் பேசினான். ஆரம்ப காலத்தில் அவனால் அப்படியான ஒரு பேச்சைப் பேசியிருக்க முடியாது. தினமும் நான்கைந்து மணிநேரம் என்னுடனான பேச்சு என்பது ஒரு பயிற்சியாக இருந்திருக்கிறது. ஒரு கேள்வி திடீரென்று கேட்பான். அது தொடர்பாக நான் என் பதிலைச் சொல்லுவேன். அந்தப் பதிலை நன்கு சொன்னேன் என்று அவன் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. புதுக்கவிதை பற்றி ஒருநாள் கேட்டான். ரொம்ப நேரம் பேசினேன். கேட்டுக்கொண்டிருந்தான். வீட்டுக்குப் போனதும் அந்த உரையாடலைப் பாராட்டிக் கடிதம் எழுதினான். அப்படிப் பல கடிதங்கள் எழுதியிருக்கிறான். அந்தக் கடிதங்கள் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்திருக்கின்றன. ஆனால் அதை வெளிப்படையாக அவனிடம் சொல்வதில் ஒரு கூச்சம் இருந்தது. இப்போது யோசித்துப் பார்க்கும்போது அவற்றை வெளிப்படையாகப் பேசியிருக்கலாமே என்று தோன்றுகிறது. அப்போது ஏனோ அது முடிந்திருக்கவில்லை. அதுபோல் ஒரு தடவை ஆர்ட்டிஸ்ட், தியரிட்டிசியன் பற்றி பேச்சு வந்தது. ஆர்டிஸ்ட் எப்போதும் தியரிட்டிசியனைவிட முன்பாகப் போய்விடக்கூடியவன். க்ரியேட்டிவ் ரைட்டிங்தான் தத்துவவாதிகளுக்குக்கூட முன் மாதிரியாக இருக்கிறது என்றெல்லாம் சொன்னேன். அது பற்றியும் கடிதம் எழுதியிருந்தான்.

ஒரு தடவை அவன் எங்கள் வீட்டுக்கு வந்தான். நேராக என் அப்பாவைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தான். நான் அப்போது மொட்டை மாடியில் இருந்தேன். மேலே வருவான் வருவான் என்று கொஞ்ச நேரம் காத்திருந்துவிட்டு கீழே போய்ப் பார்த்தேன். என் அப்பாவுடன் ரொம்ப உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தான். சரியென்று மாடிக்குப் போனேன். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்தேன். பேசிக்கொண்டேயிருந்தான். நான் மீண்டும் மாடிக்குப் போய்விட்டேன். நான் ரெஸ்ட்லெஸ் ஆகத் தொடங்கினேன். சிறிது நேரம் கழித்துக் கீழே போய்ப் பார்த்தால் அவனைக் காணோம். என்னைப் பார்க்க வராமலேயே போய் விட்டிருந்தான். அது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது. அதை அவன் திட்டமிட்டுத்தான் செய்தான். அதாவது என் அப்பாவைச் சந்தோஷப்படுத்துவதற்காக அப்படிச் செய்தான். முதலில் என் பையனுடன் நட்பாக இருந்தான். அப்போது வீட்டுக்கு வந்தால் அவனை மட்டும் பார்த்துவிட்டுப் போய்விடுவான். எப்போது என்னுடனான பழக்கம் அவனுக்கு ஏற்பட்டதோ அப்போது என் பையன் மீதான முக்கியத்துவம் குறைந்து நான் முக்கிய மானவனாக ஆகிவிட்டேன் என்று என் அப்பா சந்தோஷப்பட வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தான்.

அப்புறம் எனக்கு ஒரு நாள் ஒரு விஷயம் மனதில் தோன்றியது. அதாவது அவன் எப்போதுமே வேட்டியைத் தழையத் தழையத்தான் கட்டிக்கொண்டிருப்பான். மடித்துக் கட்டி நான் பார்த்ததே கிடையாது. நானும் பொதுவாக அப்படித்தான் கட்டிக்கொள்வேன். ஆனால் மழை பெய்தது, ஏதாவது சாக்கடை இருக்கிறது என்று வந்தால் தூக்கிக் கட்டிக் கொள்வோமே. அவன் ஒரு நாள்கூட அப்படிக் கட்டிக் கொண்டது கிடையாது. கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடம் பழகியிருக்கிறோமே, ஒரு நாளாவது இவன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நாம் பார்த்தது இல்லையே என்று ஒரு நாள் அவனிடமே கேட்டேன். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு கட்டிபோல் இருக்கிறது என்று சொன்னான். மருத்துவர் யாரையாவது பார்த்தாயா என்று கேட்டேன். இல்லை என்று சொன்னான். அதுபோல் இரவில் எங்கள் வீட்டில் படுத்துக் கொள்ளும்போது பார்த்திருக்கிறேன். சில சமயங்களில் உடம்பில் ஒரு பகுதியைத் தொடர்ந்து தட்டிக் கொண்டேயிருப்பான். என்ன விஷயம் என்று கேட்டால் லேசாக வலிக்கிறது என்று சொல்லுவான். அதற்கு எந்தவித மருத்துவரையும் அவன் தன் வாழ்நாள் முழுவதிலும் பார்த்ததில்லை.

ஒருநாள் அவன் வீட்டில் மாடியில் படுத்துக் கொண்டிருந்தபோது வலி அதிகரித்து அந்த கட்டி உடைந்துவிட்டிருக்கிறது. அதிலிருந்து சீழ் மேல்கூரை வரை பீய்ச்சி அடித்திருக்கிறது. இது அவன் சொன்னதுதான். சிறிது நேரத்தில் ரத்தமும் கலந்து வந்திருக்கிறது. அவனது மனைவி யதேச்சையாக மாடிக்குப் போனபோது அவன் படுக்கையில் அப்படியே படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறாள். அப்படியே அதிர்ந்து போய்விட்டாள். நேராக எனக்கு போன் செய்தாள். என்ன விஷயம் என்பதைத் தெளிவாக அவளால் சொல்ல முடிந்திருக்கவில்லை. பதற்றத்தில் சீக்கிரம் வீட்டுக்கு வாருங்கள் என்று போனில் கதறினாள். நான் உடனே காரில் புறப்பட்டுப் போனேன். அங்கே அவன் படுத்துக்கிடந்ததைப் பார்த்ததும் எனக்கும் பதற்றமாகிப் போனது. முதலில் அந்தப் புண்ணில் கொஞ்சம் பஞ்சை வைத்து ரத்தப் போக்கை நிறுத்தினோம். அதன்பின் அந்த அறையை சுத்தப்படுத்தி, அவனுக்கு வேறு ஆடை உடுத்திக் கைத்தாங்கலாக நானும் அவனுடைய மனைவியுமாக காரில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றோம். டாக்டர் கோபால பிள்ளையிடம் போகலாம் என்று பார்த்தால் அவர் அறுவைச் சிகிச்சை நிபுணர் அல்ல. எனவே டாக்டர் மோரிஸைப் பார்க்கப் போனோம். டாக்டர் சொன்னார் அந்த வியாதியின் பெயர் சார்க்கோமா. அது ஒரு வகையான கான்சர் தான். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இந்த வியாதி இருந்திருக்கிறது. எந்தவித மருத்துவச் சிகிச்சையும் பெறவில்லை என்று சொல்கிறீர்கள். கீழ்ப் பகுதியில் ஆரம்பித்து அந்த எலும்பு முழுவதும் சீழ் உருவாகி, முழுவதும் பரவி கடைசியில் வெடித்து விட்டிருக்கிறது என்று சொன்னார். அதன் பின் அந்த நோய்க்குத் தன்னால் அவ்வளவு சிறப்பாகச் சிகிச்சை செய்ய முடியும் என்று தோன்றவில்லை. திருவனந்தபுரத்திலிருந்து ஒரு புற்றுநோய் நிபுணரை வரவழைத்து சிகிக்சையைச் செய்வோம். அதன் பின் அவர் மாதா மாதம் வந்து பரிசோதிப்பதற்கும் ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார். நான் இது பற்றியெல்லாம் நம்பியிடமோ அவனது மனைவியிடமோ எதுவும் சொல்லாமல் சரி அப்படியே செய்யுங்கள் என்று சொன்னேன்.

அந்த டாக்டர் வந்தார். பரிசோதித்துப் பார்த்துவிட்டு காலை எடுத்து விட வேண்டும். இல்லையென்றால் உயிர் பிழைப்பது கடினம் என்று சொன்னார். காலை வெட்டி எடுப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. எந்த இடம் வரை நோய் பரவியிருக்கிறது என்பது நன்றாகத் தெரியவேண்டும். அந்தக் குறிப்பிட்ட இடம்வரை வெட்டி எடுத்தால்தான் பிரயோஜனமாக இருக்கும். அப்புறம் காலை வெட்டியபின் செயற்கைக் காலைப் பொருத்துவது என்று ஒரு விஷயம் வேறு இருக்கிறது. அதற்குக் காலின் குறிப்பிட்ட பகுதி வரை இருந்தால்தான் பொருத்த முடியும் என்று இருக்கிறது. எனவே இதையெல்லாம் பார்த்துத்தான் காலை எடுக்க வேண்டியிருக்கும். யாராவது ஒரு பிசியோதெரபிஸ்டிடம் கொடுத்து வெட்டிக்கொள்ளலாம் என்றெல்லாம் பார்த்தால் முடியாது. எனவே திருவனந்தபுரத்துக்குக் கொண்டுபோய் அங்குதான் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னார். சரி என்று சொன்னோம். நம்பி முதலில் மருத்துவச் செலவிற்குப் போதிய பணம் இல்லையே என்று ஜெயா சொல்கிறாள் என்று சொன்னான். அப்படியன்றும் அதிகம் செலவாகாது என்று சொன்னேன். உன் அப்பாவிடம் இது பற்றிப் பேசிப் பார்க்கலாம். அவரிடம் அப்போது கொஞ்சம் நகைகள் இருந்தன. பெண் குழந்தைகள் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது, அங்கு தங்கியிருக்கும்போது ஏற்படும் செலவு போன்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன். மருத்துவச் செலவை மட்டும் நீ பார்த்துக் கொண்டால் போதும் என்று சொன்னேன். அவனுக்குத் தன்னுடைய அப்பாவிடம் பணம் கேட்டு வாங்குவதில் ஏனோ விருப்பம் இருந்திருக்கவில்லை.

கோட்டாறில் அப்துல் காதர் என்றொரு மருத்துவர் இருந்தார். அவரிடம் போய் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று சொன்னான். போதிய பணம் இல்லை என்பதுதான் அதற்குக் காரணம். அந்த மருத்துவரை எனக்கு அவ்வளவாகத் தெரியாது. என்னிடம் சொல்லாமலேயே அவன் அங்கு போய்விட்டான். திருவனந்தபுரத்திற்குப் போகிறேன் என்று சொல்லி மோரிஸிடமிருந்து டிஸ்சார்ஜ் ஆனவன் நேராக அப்துல் காதர் மருத்துவமனைக்குப் போய்விட்டான். அவர் உடனே காலை அகற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டார். அவர் அறுவைச் சிகிச்சை செய்யக்கூடியவர்தான். நம்பியின் காலை அகற்றிய அடுத்த நாள் நான் போய்ப் பார்த்தேன். காலிருந்த பகுதியில் ஒரு தலையணையை வைத்து ஒரு போர்வையால் போர்த்திக் கொண்டிருந்தான். மருத்துவமனையில் என்ன செய்திருக்கிறார்கள் என்றால் இவனது காலை வெட்டியெடுத்த பின் அதைப் புதைப்பதற்கு முன் ஒரு கவரில் சுற்றி அந்த அறையிலேயே வைத்திருந்திருக்கிறார்கள். இவனுக்கு நினைவு வந்ததும் கண் முழித்துப் பார்த்தபோது முதலில் அது கண்ணில் பட்டதும் பயங்கரமாக அலறியிருக்கிறான். மனிதனைப் போல் அல்ல, ஒரு மிருகத்தைப் போல் அலறினான் என்று மருத்துவர் சொன்னார். அவர் மருத்துவமனைச் சிப்பந்திகளை, இப்படியா வெட்டிய காலை அங்கேயே வைத்திருப்பது என்று சத்தம் போட்டிருக்கிறார்.

 
Top


Powerd By Minveli © Sundaranasamy.com All Right Reserved