Suraa முகப்பு | தொடர்புக்கு | Font Problems?
Sundaramsamy.com
Ninaivodai
கிருஷ்ணன் நம்பி பக்கம் 1 2 3 4

Sura14அவனுக்குக் க. நா. சு. மேல் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவரைப்பற்றிச் சில விஷயங்கள் தெரிந்துவைத்திருந்தோம். அவர் ரொம்பவும் படித்தவர், எங்கு இருக்கிறார் என்பது தெரியாது. அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருப்பார் என்பது போன்ற மர்மமான விஷயங்களைத் தெரிந்துவைத்திருந்தோம். மஞ்சரி என்ற பத்திரிகையை அவன் படித்துவந்தான். அந்த பத்திரிகையில் பாரிஸ§க்குப் போய் வந்தது பற்றி க. நா.சு. ஒரு சிறிய கட்டுரை எழுதியிருந்தார். இதுபோன்ற விஷயங்கள் அவர் மீது ஒருவித வசீகரத்தை ஏற்படுத்தியிருந்தது. நானும் அவனும் சேர்ந்து சந்தித்த முதல் எழுத்தாளர் யார் என்பது நினைவில்லை. மனதில் பதிந்திருப்பது க. நா. சு.வைச் சந்தித்தது தான். நான் அப்போது இலக்கியம் தொடர்பாக யாரைச் சந்தித்தாலும் மலையாள எழுத்தாளராக இருந்தாலும் சரி, வாசகராக இருந்தாலும் சரி, நம்பியைப்பற்றி அவர்களிடம் சொல்லுவேன். அவர்களை நம்பியிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவேன். இது ஒரு பழக்கமாகவே இருந்துவந்தது. அப்படி நான் அறிமுகப்படுத்தாமல் அவனை வந்து சந்தித்துச் சென்றதாக அந்த 25 வருடத்திலும் யாரும் இருந்ததாக எனக்கு நினைவில்லை. அவனுடைய எல்லா நண்பர்களுமே நான் அறிமுகப்படுத்தியவர்கள்தான். அப்படி அறிமுகமான நண்பர்களில் பல பேர் என்னைவிட அவனிடம் அதிக நெருக்கமும் வாஞ்சையும் கொண்டவர்களாக ஆகியிருக்கிறார்கள். எங்கள் இருவருக்கும் ஆளுமையில் இருந்த வித்தியாசமாக அதை நான் கருதினேன்.

அவன் சொன்னான், க. நா. சு.வைப் போய் சந்திப்போம் என்று. போய்ப் பார்த்தோம். அது பற்றி க. நா. சு. பற்றிய நினைவோடையில் சொல்லியிருக்கிறேனே. அவருடன் இருக்கும் போது அவன் எதுவும் பேசவே மாட்டான். நானுமே க. நா. சு. கூட இருக்கும்போது அதிகம் பேசமாட்டேன். அவருடன் பேசி முடித்துவிட்டு வெளியே வந்ததும் நாங்கள் தனியாக ஒரு இடத்தில் நின்றுகொண்டு பேசுவோம். அப்போது க. நா. சு. சொன்னதுபற்றி அவன் நிறையப் பேசுவான். க. நா. சு. ஒரு தடவை கல்கியில் வந்த அகிலனின் நாவல் பற்றிப் பேசினார். அதில் 45ஆம் அத்தியாயம் நன்றாக இருக்கிறது என்று அவர் சொன்னார். நம்பி கேட்டான், மீதி நாற்பத்து நான்கு அத்தியாயங்கள் நன்றாக இல்லை. நாற்பத்தைந்தாவது அத்தியாயம் நன்றாக வந்திருக்கிறது என்று எப்படி சொல்கிறார் என்று கேட்டான். அதுபோல் நாங்கள் உயர்வாக நினைத்துக்கொண்டிருக்கும் எழுத்தாளரைப் பற்றி அவர் குறைத்துச் சொன்னதும் எங்களுக்கு நாங்கள் சரியாக கணிக்கவில்லையோ என்ற எண்ணம் ஏற்படும். க. நா. சு. முகத்துக்கு நேராக நல்ல எழுத்தாளர் இல்லை என்று எல்லாம் சொல்லமாட்டார். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா, எனக்குப் பிடிக்கவில்லை அவ்வளவுதான் என்பார். என்ன அளவுகோலை வைத்து ஒருவரை நல்ல எழுத்தாளர் என்று சொல்லுகிறார், என்ன அளவுகோலை வைத்து ஒருவரை நிராகரிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்கு இருந்தது. எங்களுக்கு அப்போது என்ன எண்ணம் இருந்தது என்றால் நீண்ட கால வாசிப்பு, எழுத்து மூலமாக அவருக்கு அது சாத்தியமாகியிருக்கிறது. நமக்கு அது போன்ற சூழல் அமையவில்லை. எனவே அவரைப் போல் மதிப்பிட நம்மால் முடியாது என்ற எண்ணம் எங்கள் இருவர் மனதிலும் இருந்தது. ஆனால் நாட்கள் போகப் போக சுயமாகவே தேர்ந்தெடுக்கும் பக்குவம் அவனுக்கு வந்துவிட்டிருந்தது.

பல கருத்துக்களைத் துணிச்சலாக நுட்பமாகச் சொல்லுவான். அவற்றைச் சொல்லும்போது, கேட்பவருக்கு இப்போது நாம் சொல்வது அவ்வளவு ஏற்புடையதாக இல்லை; ஆனால் நாளடைவில் நமது கருத்துக்கு அவர் வந்து சேர்வார் என்ற தோரணையில் சொல்லுவான். நமக்கு அது வைரம் என்பது தெரிந்திருக்கிறது. இவர்களுக்கு அது வைரம் என்பதை உணர்ந்து கொள்ளும் சூட்சுமம் கைகூடவில்லை என்பது போன்ற ஒரு எண்ணம் அவனுக்கு இருந்தது.

அதன் பின் அவன் சென்னைக்குப் போனபோது இங்கு பார்த்த எழுத்தாளர்களுடன் நட்பைப் புதுப்பித்துக் கொண்டான். அழகிரிசாமியும் அவனும் நவசக்தி பத்திரிகையில் ஒன்றாகவே பணிபுரிந்திருக்கிறார்கள். ஜெயகாந்தன் மீது நம்பிக்கு உயர்வான அபிப்ராயம் உண்டு. அதோடு ஜெயகாந்தனுக்கு நம்பியை ரொம்பப் பிடிக்கும். அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதுண்டு. ஜெயகாந்தன் பொதுவாக யாரையும் போய் சந்திப்பது கிடையாது. இவனைச் சந்திப்பார். நம்பிக்குப் படிப்பு குறைவாக இருக்கலாம். ஆனால் அவனது Sura15ரசிப்புத்தன்மை அபாரமானது என்பது அவனுடன் பழகிய எல்லோருடைய அபிப்ராயமாகவும் இருந்தது. ஒரு கதையை நாம் எழுதியதும் நமக்கே தெரியும் நன்றாக வந்திருக்கிறது என்று. என்றாலும் யாராவது ஒருவர் அதைப் படித்துப் பார்த்துச் சொல்வது என்பதும் தேவையாகத்தானே இருக்கிறது. அப்படியான ஒரு நல்ல உரைகல்லாக அவன் இருந்தான் என்பது பலருடைய அபிப்ராயமாக இருந்தது. பலபேருடன் நல்ல நெருக்கம் இருந்தது. அவர்களுடன் கடிதப் போக்குவரத்து இருந்தது. ராஜநாராயணன் எல்லாம் இங்கு வந்தால் நாங்கள் சேர்ந்துதான் இருப்போம். நாகராஜனும் அப்படித்தான். இப்படியே பெயர் சொல்லிச் சொல்வதானால் என்னுடைய நண்பர்கள் அனைவருடைய பெயரையும் சொல்லவேண்டியிருக்கும்.

அவன் பொதுவாகவே குறைவாகத்தான் எழுதினான். படிப்பதும் குறைவாகத்தான் படிப்பான். ஒரு புத்தகத்தைப்பற்றி நான் தொடர்ந்து சொன்னால்தான் அவன் அதைப் படிப்பான். அதுபோல் எழுதுவதற்கும் ரொம்பவும் வற்புறுத்த வேண்டும். அப்போதுதான் எழுதுவான். ஆனால் அவனது எழுத்து நாளாக நாளாக முன்னேற்றம் அடைந்துகொண்டேதான் வந்தது. அது போல் அவனுக்கு விசேஷ குணம் ஒன்று உண்டு. அதாவது ஒரு புத்தகத்தைப் படிக்காமலேயே அதன் சாராம்சத்தை கிரஹித்துக் கொண்டுவிடும் குணம். காஃப்காவை அவன் படித்ததில்லை. அவனால் காஃப்காவின் எழுத்தைப் பொறுமையாக உட்கார்ந்து படிக்க முடியாது. ஆனால் யாராவது காஃப்கா பற்றிப் பேசினால் அதைப் புரிந்துகொண்டு விடுவான். அதோடு அவனும் காஃப்காபற்றி சில அபிப்ராயங்களைச் சொல்லுவான். அதைக் கேட்கும் ஒருவருக்கு அவன் காஃப்காவைப் படித்திருக்கிறான் என்ற எண்ணம்தான் ஏற்படும். அப்படி வெவ்வேறு படைப்பாளிகளின் வெவ்வேறு உலகங்களை மனதிற்குள் திறமையாகப் பதிய வைத்துக்கொண்டிருப்பான். பிற மொழிப் படைப்பாளர்கள்பற்றி க. நா. சு. பேசியது, நான் பேசியது, மற்றவர்கள் அவனுடன் பேசியது இவற்றிலிருந்து அவன் பல விஷயங்களை கிரஹித்துக்கொண்டிருப்பான். தமிழ் எழுத்தாளர்கள் பலருடைய படைப்புகளை அவனே படித்திருக்கிறான்.

நான் எழுதியது எது வெளிவந்தாலும் - சின்ன கடிதமாக இருந்தாலும் - அது பற்றிய அவனது அபிப்ராயத்தை எழுதுவான். நேரில் சொல்ல மாட்டான். நான் ஏதாவது கதையோ கட்டுரையோ எழுதினால் கேட்பேன், படித்துப் பார்த்தாயா என்று. ஆமாம் படித்தேன் என்பான். அவ்வளவுதான், வேறெதுவும் சொல்ல மாட்டான். எனக்கு ஆரம்பத்தில் அவன் அப்படிச் சொல்வது உள்ளூர வருத்தத்தைத் தரும். நான்கைந்து நாட்கள் கழித்து ஒரு கடிதம் வரும். அதில் தன் அபிப்ராயத்தை எழுதியிருப்பான். அப்படி ஒரு கறாரான மதிப்பீட்டை நேரில் சொல்ல அவனுக்குத் தயக்கமாக இருக்கும். கடிதமாக எழுதத்தான் அவனால் முடியும். பல சமயங்களில் நிறையப் பாராட்டி எழுதியிருக்கிறான். அதுபோல் அவனுக்குப் பிடிக்காத கதைகள் எழுதினால் பிடித்து வாங்கு வாங்கு என்று வாங்கிவிடுவான். அதுபோல் அவனுடைய கதைகளைப்பற்றி என்னிடம் அபிப்ராயம் கேட்பான். விரிவாகச் சொல்லுவேன். அது தொடர்பாக சந்தேகங்கள் கேட்பான். அவனுக்கு என்ன எண்ணமென்றால் நான் அவனை விட நிறைய படிக்கிறேன். அவனைவிட எனக்கு நண்பர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் அவனைவிட எனக்கு அதிகமாக விஷயங்கள் தெரிந்திருக்கும். தான் அதை எப்படியும் தெரிந்துகொண்டுவிட வேண்டும். எனக்குத் தெரிந்த விஷயம் எல்லாம் அவனுக்கும் எப்படியும் தெரிந்துவிட வேண்டும் என்பதில் மிகவும் குறியாக இருப்பான்.

அவன் கிட்டத்தட்ட பத்து கதைகள் எழுதியதும் இதை ஒரு புத்தகமாகக் கொண்டு வருவோம் என்று நான் சொன்னேன். இந்த நேரத்தில் எழுத்து பத்திரிகை வெளிவர ஆரம்பித்திருந்தது. முதல் இதழிலா இரண்டாவது இதழிலா தெரியவில்லை, வெங்கட் சாமிநாதன் சூடாமணியின் கதை பற்றி ஒரு மதிப்புரை எழுதியிருந்தார். அப்படி கறாராக அதுவரை யாரும் எழுதியதில்லை. க. நா. சு. மதிப்புரை எழுதும்போது சிறுகதைபோல் தோன்றுகிறது; ஆனால் சிறுகதை அல்ல என்று எழுதுவார். அதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அந்தக் கதை மீது அவருக்கு அவ்வளவு மரியாதை இல்லை என்று. வெங்கட் சாமிநாதன் நேரிடையாகப் படைப்பின் குறைகளைச் சொல்லியிருந்தார். அத்தகைய அணுகுமுறை நம்பிக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அவனுக்குச் சில ஆட்களைப்பற்றி விமர்சனம் செய்யும்போது அவர்களது மனதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பேச வேண்டும், கொஞ்சம் அவர்களைத் திருப்திப்படுத்தும் விதமாகப் பேச வேண்டும் என்று சொல்லுவான். அதே சமயம் சிலரை ஒரேயடியாகச் சீவிவிட வேண்டும் என்றும் சொல்லுவான். தாறுமாறாகப் பேசுவான். அத்தகைய மனநிலையிலும் அவன் இருந்ததால் வெங்கட் சாமிநாதனின் அந்தக் கட்டுரை அவனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ‘பாலையும் வாழையும்’ கட்டுரை வெளிவந்ததும் ரொம்பவும் நன்றாக வந்திருக்கிறது என்று சொன்னான். அதோடு இன்னொரு விஷயமும் சொன்னான். அதாவது அவன் தனது சிறுகதைத் தொகுப்புக்கு வெங்கட் சாமிநாதனிடம்தான் முன்னுரை வாங்குவேன் என்று சொன்னான். எனக்கு அது ஒருவித மனவருத்தத்தை உண்டாக்குமோ என்ற கவலையும் அதே சமயம் எனக்கு ஒரு மனவருத்தத்தை உண்டாக்க வேண்டும் என்ற எண்ணமும் அதில் கலந்தே இருந்தன. நான் சொன்னேன், அது நல்ல விஷயம்தான். நாம் இருவரும் நண்பர்களாக இருக்கிறோம். எனவே நான் என்னதான் நேர்மையாக அபிப்ராயம் சொன்னாலும் அதற்கு மதிப்பு இருக்காது. அவர் வெளியில் இருக்கிறார். அவர் சொன்னால் அந்த விஷயத்துக்கு ஒரு மதிப்பு இருக்கும். எனவே அவர் முன்னுரை எழுதுவது என்பது மிகவும் சரியானதாக இருக்கும் என்று சொன்னேன்.

 
Top