| கிருஷ்ணன் நம்பி | பக்கம் 1 2 3 4 |
என்னுடைய பதினோரு வயதிலிருந்து பதினாறு பதினேழு வயதுவரை என் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. என்னைப்பற்றிய கனவுகளை, நம்பிக்கைகளை
என் வீட்டிலிருந்தவர்கள் கைவிட்டுவிட்டிருந்தனர். அப்போது திருவனந்தபுரத்திலிருந்து வந்து ஒரு டாக்டர் என்னைப் பரிசோதித்தார். அவருடைய சிகிச்சையின் காரணமாகத்தான் நான் ஓரளவுக்குக் குணமடைந்தேன். ஒருவேளை எனக்கு அந்த மருத்துவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால் என் வாழ்க்கை வேறு விதமாக முடிந்திருக்கக்கூடும். அவ்வளவு மோசமான நிலையில் இருந்தேன். என் உடம்பு ஓரளவு தேறியதும் அந்த டாக்டர் என்னை வெளியில் தாராளமாகப் போய்வர வேண்டும் என்று சொன்னார். சைக்கிளில் போகக் கூடாது, நடந்துபோகலாம் என்று சொன்னார்.
உடல் நிலை கொஞ்சம் தேறியதும் நான் மணிமேடைக்குப் போக ஆரம்பித்தேன். அப்போது எனக்குத் துண்டுப் பிரசுரங்களைப் படிக்க ரொம்பவும் பிடிக்கும். தினந்தோறும் அல்லது இரண்டு நாளைக்கு ஒரு தடவையாவது புதிதாக ஒரு துண்டுப் பிரசுரம் வந்துவிடும். நான் தொடர்ந்து வாங்கி வருவேன் என்பதால் அந்தக் கடைக்காரர் நாளைக்கு இந்தப் புத்தகம் வரப்போகிறது என்று சொல்லுவார். ஒரு புத்தகம், நாலணா, எட்டணா, ஆறணா இவ்வளவுதான் இருக்கும். அதை வாங்கிக் கொண்டு நேராக ஸ்கூலுக்கு வருவேன். நன்கு இருட்டும்வரை அந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பேன். படித்ததை யாருடனேனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றும். தனிமை என்மீது கவிழ்ந்திருந்தது. ஆனால் பகிர்ந்துகொள்ள யாருமே இருக்கவில்லை.
நான் அவனைச் சந்திக்கும்போது எனக்கு இருபது வயதிருக்கும். அவனுக்குப் பத்தொன்பது வயதிருக்கும். ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டவன் அவன். கொஞ்சம் பழகிய பின்தான் சகஜமாகப் பேச ஆரம்பிப்பான். அதற்குச் சில மாதங்கள்கூட ஆகும். நான் அவனிடம் என்னென்ன புத்தகங்கள் படிப்பதுண்டு, ஏதாவது எழுதியதுண்டா என்று கேட்டேன். அப்போது அவன் யார் யாரைப் படித்திருக்கிறேன், என்ன எழுதியிருக்கிறேன் என்று சொன்னவை நினைவில் இல்லை. அவனை அதிகம் பேச வைக்க வேண்டும் என்பதற்காக வேறு எதில் ஈடுபாடு உண்டு என்று கேட்டேன். சங்கீதத்தில் ஈடுபாடு உண்டு என்று சொன்னான். அதைப்பற்றி நாலைந்து கேள்விகள் கேட்டதும் நிறைய சொன்னான். யார் யார் நன்றாகப் பாடுகிறார்கள், என்னென்ன ராகங்கள் அவனுக்குப் பிடிக்கும் என்பது பற்றி யெல்லாம் பேசினான். ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் கச்சேரிகளுக்குப் போய்க் கேட்டதுபற்றிச் சொல்வான். சுசீந்திரத்தில் நடக்கும் கச்சேரிக்குப் போனதுபற்றி, நாகராஜா கோவிலில் நடக்கும் கச்சேரிகள்பற்றி, கிருஷ்ணன்கோவிலில் நடக்கும் கச்சேரிகள்பற்றிச் சொல்லுவான். நன்றாகப் பாடுகிறாரோ இல்லையோ, முதல் வரிசையில் போய் உட்கார்ந்துகொண்டு விடுவான். பாடகர்களைக் கேலிசெய்து பேசுவான். இப்படிப் பேசிக்கொண்டேயிருப்போம். சில நாட்களில் நன்கு இருட்டி விடும். அப்போது எங்களுக்கு ஒரு விஷயம் புரிந்தது. இருவருக்குமே தொடர்ந்து சந்தித்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது என்பது. பிரியும்போது நாளைக்குச் சந்திப்போம் இல்லையா என்று கேட்பேன். ஆமாம் கட்டாயம் வருவேன், எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று சொல்லுங்கள் என்பான். அதன்படியே வந்துவிடுவான்.
இலக்கியம் பற்றிய என்னுடைய கருத்துகளுக்கும் அவனுடைய கருத்துகளுக்கும் இடையில் அப்போது எந்தச் சம்பந்தமும் இருந்திருக்கவில்லை. அவன் நாங்கள் ஏதோ வறட்டுத்தனமாகச் சில விஷயங்களைச் செய்துவருகிறோம்; ஏதோ சில கனவுகளை வைத்துக்கொண்டிருக்கிறோம்; நாங்கள் மிக மோசமான முறையில் தோற்றுத்தான் போகப்போகிறோம் என்று வாதாடுவான். மலையாளக் கதைகளை அவனுக்குப் படித்துக் காட்டுவேன். அப்போது எங்கள் பகுதியில் இருந்தவர்களுக்கு மலையாளமும் நன்கு தெரியும். கூட்டங்களில்கூட மலையாளத்தில் பேசுவார்கள். 1956ல்தான் தமிழகத்துடன் எங்கள் பகுதி இணைந்தது. அவனுக்கு மலையாளக் கதைகளைப் படித்துக்காட்டியபோது இவையெல்லாம் கதைகளா, இவற்றையெல்லாம் யாராவது படிக்கிறார்களா என்று கேட்டான். ரொம்பப் பேர் படிக்கிறார்கள் என்று சொன்னதும் அவனுக்குத் தெரியாத ஒரு பகுதி என்னிடம் இருக்கிறது; அது சரியோ தவறோ அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு ஏற்பட்டது.
ஓர் இடத்தில் இருந்துவிட்டு நாங்கள் இரண்டாவதாகப் போகும் இடம் அநேகமாகப் பூங்காவாக இருக்கும். எஸ். எல். பி. ஸ்கூலிலும் அதிக நேரம் உட்கார்ந்து பேசுவோம். ஐந்து மணிக்கெல்லாம் அங்கு போய்விடுவோம். அருமையான காற்று வீசும். நம்பிக்கும் அந்த இடம் ரொம்பவும் பிடிக்கும். அப்போதெல்லாம் மாலை ஐந்து மணியானால் அங்கு யாரும் இருக்கமாட்டார்கள். இப்போதுதான் விளையாடுவதற்கு என்று, நடப்பதற்கு என்று ஆட்கள்
வந்து போகிறார்கள். முன்பு மாலை நேரத்தில் நடப்பது என்பது எல்லாம் பழக்கமாகியிருக்கவில்லை. அந்தப் பள்ளியில் ஐந்தாறு படிக்கட்டுகள் உண்டு. ஒரு அரை மணிநேரம் ஒரு படிக்கட்டில் அமர்ந்து பேசுவோம். அதன் பின் இன்னொரு படிக்கட்டிற்குப் போய்விடுவோம். நான் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பேன். அப்போது எனக்கு ஒரு ஆள்கூடத் தேவையில்லை. ஒரு முகம் அது மட்டும்தான் தேவையாயிருந்தது. அவன் என்ன கேட்கிறான், என்ன புரிந்துகொள்கிறான், என்ன எதிர்க்கேள்வி கேட்கிறான் என்பது போன்ற விஷயங்களைப் பொருட்படுத்திப் பேசும் நிதானமோ, பக்குவமோ எனக்கு அப்போது இருந்திருக்கவில்லை. நான்தான் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பேன். நீண்ட காலத்திற்குப் பிறகுதான் அவனும் பேச ஆரம்பித்தான்.
‘புதுமைப்பித்தன் மல’ரை வடசேரியில் இருந்த ஒரு அச்சகத்தில்தான் அடித்தேன். பெருமாள்தான் சொன்னார், வடசேரியில் ஒரு புதிய அச்சகம் திறந்திருக்கிறார்கள் என்று. அச்சு நன்றாக இருக்கும் என்று அந்த இடத்தை ஏற்பாடு செய்து தந்திருந்தார். எனக்கு அப்போது ஒரு புத்தகம் எப்படி அச்சாகிறது, என்ன செலவாகும் என்பது பற்றி எதுவுமே தெரியாது. முதன்முதலாக அப்போதுதான் அச்சுக் கோர்ப்பதையே பார்க்கிறேன். பேப்பருக்கான காசை அவர்களிடமே தந்துவிடுவேன். அதனால் பல காரணங்களால் நீண்ட நாள் தாமதமாக மலர் வந்து சேர்ந்தது. நம்பி அந்தப் புத்தகம்பற்றிக் கேட்பான். யார் யாரெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்று காட்டுவேன். கிருஷ்ணன்கோவில் என்பது வடசேரிக்குப் பக்கத்தில்தான் இருந்தது. நாங்கள் இருவரும் நடந்து போய்க்கொண்டிருப்போம். நடக்க வேண்டும் என்பது அல்ல எங்கள் நோக்கம். அமர்ந்து பேசுவதற்கு ஒரு நல்ல இடத்தைக் கண்டுபிடிக்கத்தான் அப்படி நடந்துபோய்க் கொண்டிருப்போம். அப்படியே நடந்து போய் புத்தேரி குளத்தருகே ஒரு இடத்தைக் கண்டுபிடித்தோம். நாகர்கோவிலிலிருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் தூரம் இருக்கும். அந்த இடமும் பின்னணியும் அழகாக இருக்கும். எந்த இடத்துக்குப் போகும்போதும் இந்த இடத்துக்குப் போவோம் என்றெல்லாம் பேசி வைத்துக்கொண்டு போவது கிடையாது. மணிமேடையைத் தாண்டியாகிவிட்டது என்றால் நேராகப் புத்தேரி குளத்துக்குத் தான் போகப் போகிறோம் என்று இருவருக்கும் தெரிந்துவிடும். இவையெல்லாம் தானாகவே பழக்கத்தில் வந்துவிட்டிருந்தது.
‘புதுமைப்பித்தன் மல’ரை அவனுக்குப் பிடித்திருந்தது என்று சொல்ல முடியாது. படித்துப் பார்த்தான். அச்சு அமைப்பு எல்லாம் எதிர்பார்த்த அளவுக்குக் கொண்டுவர முடிந்திருக்கவில்லை. அந்தப் புத்தகங்கள் எங்கள் வீட்டில் இருந்தன. நாங்கள் அதை விற்க முயற்சிகள் மேற்கொண்டோம். பெருமாள் அதற்கு பெரிதும் உதவி செய்தார். அந்தப் புத்தகங்களை வீட்டுக்குக் கொண்டுவந்த பிறகுதான் எனக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணமே வந்தது. அதுவரை யார் வாங்குவார்கள், என்ன செய்வது என்பது பற்றியெல்லாம் ஒரு தீர்மானமும் இருந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடம் அச்சு வேலைகள் நடந்தது. அச்சகத்தில் ஏதாவது முக்கியமான வேலைகள் வந்துவிட்டால் எங்கள் வேலையைத் தள்ளி வைத்துவிடுவார்கள். குறிப்பிட்ட தேதியில் வர வேண்டும் என்பது போன்ற எந்த நெருக்கடியும் இல்லாதிருந்ததால் வேலைகள் மிகவும் சாவகாசமாகவே நடந்தன. புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தன. பலருக்கு இலவசமாகக் கொடுத்தோம். ஒரு புத்தகத்தில் அது பற்றி மதிப்புரை வந்தது. பத்துப் பதினைந்து பிரதிகளுக்கான ஆர்டர் வந்தது. என்ன நோக்கத்திற்காக அதை அச்சடித்தேனோ அது நிறைவேறவேயில்லை. புதுமைப்பித்தனின் குடும்பத்தினர் மிகவும் கஷ்டமான நிலையில் இருந்தார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல தொகையை இந்த மலரின் மூலம் திரட்டித்தர வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. விளம்பரங்கள் கொஞ்சம் கிடைத்திருந்தன. அதனால் பெருமளவு நஷ்டம் இல்லாமல் சமாளிக்க முடிந்திருந்தது.
என்னிடம் அப்போது இன்னொரு பழக்கமும் இருந்தது. கொஞ்சம் கேள்விப்பட்ட எழுத்தாளருடைய புத்தகம் என்றால் பின்னாலாவது படித்துக்கொள்ளலாமே என்று வாங்கி வைத்துக் கொள்ளுவேன். ரஷ்ய நாவல்கள், கதைகள் எல்லாம் அப்போது மிகக் குறைந்த விலையில் கிடைத்தன. டால்ஸ்டாய் போன்றோருடைய புத்தகங்களை எல்லாம் வாங்கி வைத்துக் கொள்ளுவேன். தமிழ்ப் புத்தகங்களையும் அப்படி வாங்கி வைத்துக் கொள்ளுவேன். நானும் நம்பியும் படித்த புத்தகங்கள் பற்றி பேசிக்கொள்வோம். அப்படிப் பேசிய புத்தகங்களில் ஒன்று க. நா. சு.வின் ‘ஒருநாள்’. அதை அவனும் படித்திருந்தான். மொத்த நாவலுமே ஒரே நாளில் காலையில் ஆரம்பித்து இரவுக்குள் முடிந்துவிடுகிறது. சம்பவங்கள் என்று எதுவுமே கிடையாது. முழுக்க முழுக்க சம்பாஷணைதான். அந்தக் கதாநாயகனின் பெயர் மூர்த்தி. அவன் அவனுடைய மாமா பெண்ணைக் காதலிக்கிறான். அவளுடைய பெயர் மங்களம். அந்த நாவல் ஒரு அக்ரஹாரத்தை மையமாகக் கொண்டுதான் எழுதப்பட்டிருந்தது. நான் என் தாத்தாயிருந்த அக்ரஹாரத்துக்கு அடிக்கடிப் போய் வந்ததுண்டு. நம்பி அக்ரஹாரத்தில்தான் இருந்தான். இந்த விஷயம் எங்களை அந்த நாவலை விரும்பிப் படிக்கத் தூண்டியிருக்கக் கூடும்.
Top |


