| க. நா. சுப்ரமணியம் | பக்கம் 1 2 3 4 |
தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்து அவர்
ஒருவருக்குத்தான் அப்படி ஒரு பார்வை இருந்திருக்கிறது. மற்றவர்களெல்லாம் தங்களுக்கு என்னென்ன சந்தர்ப்பங்கள் வருகிறதோ அவற்றைச் செய்து தருவார்கள். அதற்கான வருமானத்தைப் பெற்றுக் கொள்ளுவார்கள். அதை மீறிப் பல விஷயங்களைச் செய்திருக்கிறார். அவ்வளவு உயர்வாக அவரே கருதாத புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறார் என்பது உண்மைதான். அவருடைய வாழ்க்கை அப்படியான நிர்ப்பந்தங்களை அவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் தனக்கு விருப்பமில்லாத ஒன்றை அவர் ஒருபோதும் செய்திருக்கவில்லை. இன்னும் நாம் அவரை விரிவாக ஆராய்ந்து பார்த்தால் அதிகக் குறைகள் கண்டுபிடிக்கச் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். எதிர்காலத்தில் அவை வெளிப்படுத்தப்பட்டாலும்கூட மொழிபெயர்ப்பிற்கு அவர் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. அது மட்டுமல்ல, இன்றுவரை அதைத்தாண்டி யாருமே போயிருக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்.
அடுத்ததாகக் க. நா. சுவின் பங்களிப்பாக நான் கருதுவது அவர் புதுக்கவிதைக்கு ஆற்றியது. ஆரம்பத்தில் பிச்சமூர்த்தி, கு. ப. ரா., வல்லிக்கண்ணன் இவர்களால் ஆரம்பிக்கப்பட்ட புதுக்கவிதை இயக்கம் நடுவில் சற்று ஓய்ந்து போய்விட்டிருந்தது. அது இறந்துபோய்விட்டது என்ற எண்ணங்கள் அதை உருவாக்கியவர்களுக்கேகூட இருந்திருக்கின்றன. தற்செயலாக 1959ல் ந. பிச்சமூர்த்தியின் ‘பெட்டிக்கடை நாரணன்’ கவிதையைச் செல்லப்பா மறுபிரசுரம் செய்யப்போக, நிறைய பேர் அதைப் பார்த்துவிட்டுப் புதுக்கவிதை எழுதத் தொடங்கினார்கள். அந்தக் கவிதை அவர்களைப் பாதித்தது என்று சொல்வதைவிட அது வெளியான காலத்தில் இளம் படைப்பு மனங்களில் புதிதாக ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் எப்படிச் செய்வது என்று தெரியாத தத்தளிப்பும் இருந்தன. சமுதாயத்துக்குப் புதுவிதமான கவிதை தேவையாக இருந்தது. பாரதிதாசன் மறைந்தபிறகு எழுத்துத் தோன்றுவது வரை எழுதப்பட்ட கவிதைகளை இன்று நாம் படிக்கவே முடியாது. கவிதையை உண்மையாக நேசிக்கக் கூடியவனுக்கு கவிதை இல்லாமல் இருந்தது. ஒருவித வறட்சி ஏற்பட்ட நேரத்தில் வழி திறந்துவிட்ட விஷயத்தைத்தான் எழுத்து செய்தது.
ஒருதடவை நான் அவரைப் பெங்களூரில் சந்தித்திருந்தேன். நான் என் மனதுக்குள் எந்த இடைவெளியையும் உணர்ந்திருக்கவில்லை. இடைவெளி இருப்பதை நான் விரும்பவும் இல்லை. அங்கு அவரைச் சந்தித்தபோது ஒரு மனநிறைவு ஏற்பட்டது. இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட மனநிறைவு. என் அப்பா அம்மா காலமானபின் அவரைச் சந்தித்திருக்கவில்லை. அது பற்றி இங்கிதமாகத் தொட்டும் தொடாமலும் பேசினார். அதன்பின் இந்தக் காலத்தில் முக்கியமானவர்களில் யார் யாரெல்லாம் நாகர்கோவிலுக்கு வந்திருந்தனர் என்று கேட்டார். ராமாமிர்தம், தி. ஜா., கு. அழகிரிசாமி இவர்கள் எல்லாரும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள் என்றேன். செல்லப்பா வந்து தங்கியதைப் பற்றிச் சொன்னேன். அழகிரிசாமி, பார்த்தசாரதி இவர்களுடன் கடிதத் தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிறீர்களா என்று கேட்டார். அந்தக் கேள்வியை அவர் கேட்கும்போது உற்சாகமும் ஆர்வமும் அவர் குரலில் தெரிந்தது. தொடர்பு இப்போது விட்டுப்போயிருக்கிறது. சென்னைக்குச் சென்று மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறேன் என்றேன். ‘ரகுநாதனைச் சந்திப்பதை முற்றாக விட்டாச்சோ?’ என்றார். நான் க. நா. சுவைச் சந்திப்பதற்கு முன் ரகுநாதன் தான் என்னை வெகுவாகப் பாதித்திருந்தார் என்பது அவருக்குத் தெரியும். ‘ரகுநாதன் இப்போது சோவியத் யூனியன் அலுவலகத்தில் வேலை செய்கிறார். அவருடைய இலக்கியப் பணிகள் சொல்லும்படியாக இல்லை. எனக்கும் வேறு விதமான கவனங்கள் வந்திருக்கின்றன. அவரது அலுவலகத்துக்குப் போய் அவரைப் பார்ப்பது என்பது சுலபமும் இல்லை’ என்றேன். இன்னொரு நாள் சாயந்திரம், நாளைக்கு நான் ஃப்ரீ, நீ ஃப்ரீயா இருந்தா பார்ப்போம் என்றார். உண்மையிலேயே அன்று எனக்கு வேறு வேலைகள் இருந்தன. மதியத்துக்கு மேல் சந்திக்கலாம் என்றேன். ‘நான் பிரீமியர் புக் ஸ்டாலில் இருப்பேன், நீயும் அங்கு வந்துவிடு’ என்றார். அந்தக் கடை மகாத்மா காந்தி ரோட்டுக்கு அருகில் இருந்தது. முக்கியமான கடை என்று தமிழவன் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. நான் அதுக்கு முன் பெங்களூர் போனபோது வேறு பல கடைகளுக்குப் போயிருக்கிறேன். ஆனால் அந்தக் கடை எனக்குத் தெரிய வந்திருக்கவில்லை. அது ஒரு சந்துக்குள் உள்ளடுங்கி இருந்ததால் என் பார்வையில் விழவில்லை. க. நா. சுவுடன் ஏதாவது பேசுவதானால் பேசிக்கொள்ளட்டும் என்று கண்ணனையும் அழைத்துக்கொண்டு போனேன். அங்கு நாங்கள் போனபோது அவர் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். க. நா. சு. புத்தகங்களைப் பார்ப்பது ஒரு தினுசாக இருக்கும். அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. எல்லாப் புத்தகத்தையும் எடுத்துக் கூர்ந்து பார்ப்பார். அநேகமாகப் பல புத்தகங்கள் அவர் படித்ததாக இருக்கும். சில புத்தகங்கள் கேள்விப்பட்டதாக இருக்கும். அவருக்குத் தெரியாத புதுப்புத்தகங்கள் என்று கொஞ்சம்தான் இருக்கும். அந்தப் புதிய புத்தகங்களை எடுத்து அது என்ன சரக்கு என்று யீமீமீறீ பண்ணிப் பார்க்க முயற்சி செய்வார். அதுவும் தவிர புத்தகக்கடையில் இருக்கும்போது அவருக்குச் சுய உணர்வே இருக்காது. நமக்கு ஒரு உடம்பு இருக்கிறது. நாலுபேர் போக வர இடம் விட்டு நிற்க வேண்டும் என்ற உணர்வே இருக்காது அவருக்கு. அதுவும் தவிர ஒரு புத்தகத்தை நாம் விலை கொடுத்து வாங்கினதுக்கு அப்புறம்தான் அது நமக்குச் சொந்தமாகும், அதுவரை அது புத்தகக் கடைக்காரருக்குத்தான் சொந்தம் என்பது போன்ற எண்ணமெல்லாம் அவருக்கு இருக்காது. அங்கே இருக்கும் ஒரு புத்தகத்தை எடுத்து இங்கே வைப்பார். இங்கே இருக்கும் புத்தகத்தை எடுத்து அங்கே வைப்பார். அப்படிச் செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல்தான் இருப்பார்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக
ஆனார். அதுக்கு அவருக்கு நல்ல வெகுமதி கிடைத்தது. அதை எவ்வளவு சீக்கிரம் தீர்க்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தீர்த்துவிட்டார். அதன் பின் அவருடன் எனக்குத் தொடர்பிருக்கவில்லை. பத்திரிகை நடத்தும்போது மேட்டர் கேட்டுக் கடிதம் அனுப்புவார். அது தவிர கடிதம் ஒன்று இரண்டு வந்திருக்கும். அவ்வளவு தான். திருவனந்தபுரத்தில் அதாவது 1954ல் அவரைப் பார்த்ததிலிருந்து அவர் இறந்துபோவதுவரை ஒரு மானசீகத் தொடர்பு, நேர் சந்திப்பு, நட்பு, மதிப்பு எல்லாம் இருந்து வந்திருக்கின்றன. அவர் நேரில் இல்லாதபோதும் அவருடன் தனியாகப் பேசிக் கொள்வதுபோல் ஒரு உறவு தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. இப்போதும் சில விஷயங்களுக்கு அவரிடம் ஆலோசனை கேட்டு மனதளவில் பெற்றுக்கொண்டுதானிருக்கிறேன். அவர் 1989ல் இறந்தார். ரொம்ப ஆரோக்கியமாகத்தான் இருந்தார். சட்டென்று மரணம் வந்துவிட்டது. அது ஒருவிதத்தில் நல்லது தான். அவரெல்லாம் படுக்கையில் படுத்து நோயால் வதை பட்டுக்கொண்டிருப்பது மிகக் கொடுமையான விஷயம். பார்வை அழிந்து படிக்க முடியாமல் ஆகிவிடுவதைவிட உயிர் பிரிவது தான் அவருக்கு நல்லது. அப்படியான நிலைமையெல்லாம் வராமல் அதற்கு முன்பே போய்ச் சேர்ந்துவிட்டார்.
அவரது மறைவு எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்னால் தாங்கிக்கொள்ள முடிந்திருக்கவில்லை. அவரைப் போன்ற ஒரு பெரிய மனிதரைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்ததைப் பெரிய விஷயமாகத்தான் மதிக்கிறேன். சாதாரண எழுத்தாளருக்கெல்லாம் இவரிடம் இவ்வளவு ஆத்மார்த்தமாகப் பேசக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான். அந்த நட்பில் மேடு பள்ளங்கள் இருந்தன என்றாலும் அதெல்லாம் இயற்கையானதுதான் என்பது இப்போது நன்றாகவே தெரிகிறது. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இடையில் கூட எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றனவே. ஆனால் தமிழ்நாட்டுக்கு அவரைப்பற்றித் தெரியாது. தமிழ்நாட்டு இடது சாரி எழுத்தாளர்களுக்கு அவரைப்போன்ற ஒருவர் தேவையே இல்லை. அவர்களுக்குத் தேவை வல்லிக்கண்ணனும் தி. க. சியும் தான். ரகுநாதன்கூடத் தேவையில்லை.
(தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்)
Top |


