| க. நா. சுப்ரமணியம் | பக்கம் 1 2 3 4 |
க. நா. சு. ஆரம்ப காலத்தில் கு. ப. ரா., மௌனி இவர்களைத் தான் சிறந்த எழுத்தாளராகச் சொல்லி வந்திருக்கிறார். புதுமைப் பித்தனுக்குப் பரவலான பெயர் கிடைத்த
பிறகுதான் கட்சி மாறி அவரையும் பெரிய எழுத்தாளராகச் சொல்ல ஆரம்பித்தார் என்ற தொனியில் தொ. மு. சி. சொல்லியிருக்கிறார். நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆரம்பத்திலேயே அவருக்குப் புதுமைப்பித்தன் பற்றி நல்ல அபிப்ராயம் இருந்திருக்கிறது. மௌனி பற்றியும் ரொம்ப உயர்வான அபிப்ராயம் வைத்திருந்தார். மௌனி, புதுமைப்பித்தன் இவர்களில் யார் உயர்ந்தவர் என்பதுபற்றி அவருக்குக் குழப்பம் இருந்திருக்கிறது. ஒரு விதத்தில் மௌனி சிறந்தவராகவும் இன்னொரு விதத்தில் புதுமைப்பித்தன் சிறந்தவராகவும் அவருக்குத் தோன்றுகிறார்கள். அது ஒரு பெரிய குற்றமே கிடையாது. தெளிவாக வெளிப்படையாகத்தான் அந்த மதிப்பீட்டை அவர் வைத்துக்கொண்டிருக்கிறார். கு. ப. ரா. பற்றிச் சொல்லும்போது அவர் நல்ல சிறுகதை எழுத்தாளர்தான். வடிவமெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என்று சொன்னாலும் அவருக்கு கு. ப. ரா. மேல் ஈடுபாடு அதிகம் இருக்கவில்லை. எழுத்துவில் ஒரு நீளமான கட்டுரை கு. ப. ரா. பற்றி க. நா. சு. எழுதியிருந்தார் என்றாலும் அது செல்லப்பா வற்புறுத்தியதால் எழுதிய கட்டுரை. செல்லப்பாவுக்கு கு. ப. ரா. மேல் ரொம்பப் பெரிய அபிப்ராயம் உண்டு. பின்னாளில்தான் திடீரென்று பி. எஸ். ராமையாவைப் பற்றி உயர்வாகச் சொல்ல ஆரம்பித்தார். எனக்குக்கூடத் தோன்றியதுண்டு - இப்படி இவர் ராமையாவை முக்கியமான எழுத்தாளராகச் சொல்லுகிறாரே, செல்லப்பாவின் இலக்கிய விமர்சனம்மீது மரியாதை வைத்திருப்பவர்கள் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டி வருமே என்று.
இலக்கிய வட்டம் காலத்துக்குப் பிறகும் எனக்கும் க. நா. சுவுக்கும் இடையில் நெருக்கமான நட்பு இருந்தது. அவர் எந்தப் பத்திரிகையில் எழுதினாலும் அதை ஒன்றுக்கு இரண்டு தடவை படித்து என்ன சொல்ல வருகிறார் என்பதைத் தொடர்ந்து புரிந்துகொண்டுவந்தேன். ஆனால் ஒருதடவைகூட அவருக்கு இது பற்றி எழுதியதே கிடையாது. அந்த மாதிரியான கடிதப் போக்குவரத்து வைத்துக்கொள்ளக்கூடிய சுபாவமே அவருக்குக் கிடையாது. இருந்தும் அவர் எனக்கு முக்கியமானவராகத்தான் இருந்திருக்கிறார். அவருடைய சில கருத்துக்கள் நான் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லாவிட்டாலும் ஆழ்ந்து சிந்திக்கும் படியாக அவை இருந்திருக்கின்றன. தமிழில் மிக முக்கியமான மாற்றத்தை அவர் உருவாக்கியிருக்கிறார் என்பது தெளிவாகவே எனக்குத் தெரிகிறது. கோபதாபங்களுக்கு அவர் பயப்படவேயில்லை. எழுத்து உலகில் ‘கெட்ட’ பெயர் வாங்கிக்கொள்ளாமல் எந்த உண்மையையும் சொல்ல முடியாது என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.
1947- 48களில்கூட யார் பிரபலமானவர்களாக இருந்தார்களோ, யார் லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டிருந்தார்களோ அவர்கள்தான் சிறந்த எழுத்தாளர்கள் என்ற எண்ணம் சமுதாயத்தின் எல்லாத் தளங்களிலும் இருந்தது. க. நா. சு. தான் அதை முதன்முதலாக உடைத்தார். அப்போது வெகு குறைவான பேர்களே அவரது கருத்துக்களை ஏற்றுக்கொண்டார்கள். சிறு பத்திரிகை வட்டத்துக்கு, பின்னாட்களில் வந்து சேர்ந்தவர் கள்கூட ஆரம்பத்தில் இவர் என்ன சொல்கிறார், இவரைப் படிப்பதற்கு யாருமே இல்லையே. லட்சக்கணக்கானவர்கள் படிக்கிறார்களே, அவர்கள் என்ன மோசமான எழுத்தாளர்களா என்று முரட்டுத்தனமாகக் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அந்தக் கேள்வி மழுங்கி க. நா. சுவின் பார்வை நாளாக நாளாக வலுப்பட்டு வந்திருக்கிறது. லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் எப்படி அந்த வாசகர்களை உருவாக்கிக்கொண்டார்களோ அதே போல் க. நா. சுவால் தீவிரமான எழுத்தாளர்களுக்கு ஒரு வாசகர் பட்டாளத்தை உருவாக்கித்தர முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள் முன்னால் இலக்கிய விமர்சனம் சார்ந்து ஒரு வாதத்தை க. நா. சு. முன்வைத்திருந்தாரே அது தமிழ் இலக்கியத்துக்கு அவர் ஆற்றிய மிகப் பெரிய பங்களிப்பு என்று நான் நினைக்கிறேன். வணிக எழுத்தாளர்கள் முன்வைத்த வாதமானது ஒரு தர்க்க நிலையோ, விமர்சன மரபோ கொண்டது அல்ல என்பதெல்லாம் இப்போது அம்பலப்பட்டுப் போய்விட்டிருக்கிறது. ஒருபுறம் அவர் சிறந்த நாவலாசிரியர் - இல்லையென்றால் நல்ல நாவல்களை எழுத ஆசைப்பட்டுக் கைகூடாமல் போனவர் - அவர் நமக்கு மிகச் சிறந்த விமர்சனக் குறிக்கோளை உருவாக்கித் தந்திருக்கிறார்.
க. நா. சு. மேற்கத்திய புத்திகொண்டவர்; தமிழ் நாட்டைப் பற்றி அக்கறை இல்லாதவர் என்று சொல்வது வழக்கத்தில் இருக்கிறது. இன்றைக்கும் பலர் அப்படிச் சொல்கிறார்கள். சொல்ல ஆசைப்படுகிறார்கள். ஆனால், அவர் பல சந்தர்ப்பங்களில் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் செயல்பட்டிருக்கிறார் என்பதற்கான தடயங்கள் இருக்கின்றன. இந்தத் தமிழ் நாட்டைப் பற்றி உயர்வாகப் பேசிக்கொண்டு அதன் மதிப்பீடுகளை அழிக்கக்கூடிய புத்தகத்தைச் சந்தோஷமாகவும் தாராளமாகவும் பலர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. அதனால் அவர் எல்லாவற்றையும் ஒரு முன்யோசனையோடுதான் செய்கிறார் என்று தோன்றுகிறது. அவர் சொன்னது உண்மைதான் என்பது பின்னால் நிரூபணமாகியிருக்கிறது. அதற்கு ஒருவிதமான பலன் ஏற்பட்டிருக்கிறது என்ற தெளிவு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர் மொழிபெயர்த்த நாவல்களை ஒருசிலராவது விரும்பிப் படித்தார்கள். எழுத்தாளர்களை அது முக்கியமாகப் பாதித்திருக்கிறது. மகாபாரதத்தைப் படிப்பதில் எவ்வளவு ஆர்வம் உண்டோ அதே அளவு ஆர்வத்துடன் க. நா. சு. மொழிபெயர்த்த நாவல்களைப் பலர் விரும்பிப் படித்திருக்கிறார்கள். நிறைய எழுத்தாளர்கள் அந்த நாவல்களால் பாதிப்பு பெற்றிருக்கிறார்கள். பேர்லாகர் குவிஸ்டின் ‘பாரபாஸ்’ (அன்பு வழி) என்ற நாவல் பலரை ரொம்பவும் பாதித்திருக்கிறது. நம்பி தான் படித்ததிலேயே ‘மதகுரு’ மிகச் சிறந்த நாவல் என்று சொல்லியிருக்கிறான். அதை அவன் படித்தான் என்று சொல்வதைவிடப் பாராயணம் செய்தான் என்று சொல்வது தான் சரி. க. நா. சு. கூட அந்நாவலை மொழிபெயர்க்கும்போது மொழிபெயர்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் பல பக்கங்கள் படித்துக்கொண்டே போய்விட்டதாகவும் பின்பு விட்ட இடத்திலிருந்து மொழிபெயர்க்க ஆரம்பித்ததாகவும் சொல்லியிருக்கிறார். ஸெல்மா லாகர்லாஃபின் அந்தப் புத்தகத்தை வருடத்துக்கு ஒரு சில தடவைகள் படிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
மேற்கத்திய விமர்சனங்களைப் பின்னாட்களில்
படித்தபோது ஒரு விஷயம் தெரிய வந்தது. அதாவது அந்த ஸ்வீடிஷ் படைப்பாளிக்கு இவ்வளவு மரியாதை கொடுத்துப் பேசியது உலகத்தி லேயே க. நா. சு. ஒருவர்தான். பல சமயங்களில் அந்தக் காலத்து எழுத்துக்களைப் பற்றி எழுதிய பிற மேற்கத்திய விமர்சகர்களின் பட்டியலில் ஸெல்மா லாகர்லாஃபின் புத்தகத்தைப் பற்றிப் பேச்சு மூச்சில்லை. உலக விமர்சனம் புறக்கணித்துவிட்ட படைப்பாளியைத் தன்னந்தனியாகப் பல பத்தாண்டுகள் சொல்லிக்கொண்டு வந்திருப்பதுடன் அந்த நாவலை மொழி பெயர்க்கக் கிடைத்த சந்தர்ப்பத்தையும் அச்சந்தர்ப்பத்தின் ஓட்டைகள் தெரிந்த நிலையிலும் முழுமையாக மொழிபெயர்த்திருக்கிறார்.
அவரது மொழிபெயர்ப்பு பற்றிப் பொதுவாக ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அவர் மொழிபெயர்ப்பைச் சரளமாகப் படிக்கும்படிச் செய்திருக்கிறார். அதைப் படிக்கும்போது எந்த ஒரு சிக்கலும் இருக்காது. ஆனால், அநேக மேற்கத்திய படைப்புக்களைப் படிக்கும்போது - அவை சகஜமாகப் படிக்கும்படியாக இருக்கின்றன என்றாலும் - சில இடங்களில் ஒரு அந்நியமான, சிக்கலான விஷயங்கள் வரத்தான் செய்கின்றன. ஏனென்றால், மேற்கத்தியக் கலாச்சாரம் என்பது நம் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்ட ஒன்றுதானே. அங்கு பல விஷயங்கள் வித்தியாசமாக நடந்திருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக, சர்ச் சம்பந்தமாக பல சண்டைகள் விவாதங்கள் அங்கு நடந்திருக்கின்றன. கிறிஸ்தவ தியாலஜி சம்பந்தமான விவாதங்கள் அவற்றுக்குரிய சொற்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்த மாதிரியான பகுதிகளையும் சேர்த்து மொழிபெயர்ப்பவர்கள் மொழிபெயர்ப்பில் வாசிக்கும் போது சிக்கலை உணர நேரிடலாம். க. நா. சுவின் மொழி பெயர்ப்புகளில் அந்த விதமான சிக்கல்களைக் காணவே முடியவில்லை. மொழிபெயர்ப்பு, மூலத்துக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறது என்பதை யாருமே சோதித்துப் பார்க்கவில்லை. நான் வலிமைப்படுத்த விரும்பும் கருத்து என்னவென்றால் அவருடைய தேர்வுகள் முக்கியமானவை. தேர்வு செய்யும்போது அதைப் பிரக்ஞை பூர்வமாகச் செய்திருக்கிறார். தமிழ் மக்களை, தமிழ்க் கலாச்சாரத்தை மனதில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஒட்டக் கூடியதைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்.


