| க. நா. சுப்ரமணியம் | பக்கம் 1 2 3 4 |
எங்கள் ஊர்ப்பக்கம் சின்னதாக, இனிப்பாக ஒரு வாழைப் பழம் இருக்கும். அதுக்கு மட்டிப்பழம் என்று பெயர். க. நா. சு. அதை விரும்பிச் சாப்பிடுவார். அதிகமாகச்
சாப்பிடமாட்டார், ஒன்று இரண்டு சாப்பிடுவார். அவருக்கு இவற்றையெல்லாம் விட காஃபி டிபன்தான் ரொம்பப் பிடிக்கும். காலையில் டிபன் சாப்பிட்ட விஷயம், இரவில் டிபன் சாப்பிட்ட விஷயம் எல்லாவற்றையும் எங்களிடம் ஆர்வமாகச் சொல்லுவார். இந்தப் பக்கம் கோட்டாறுவரை அந்தப் பக்கம் பார்வதிபுரம்வரை கிட்டத்தட்ட ஐந்து மைல் சுற்று வட்டாரத்தில் அவர் சாப்பிடாத ஹோட்டலே கிடையாது என்று சொல்லலாம். எங்களுக்குத் தெரியாத இருபத்தைந்து முப்பது ஹோட்டல்களில் அவர் சாப்பிட்டிருப்பார். தினமும் புதுப் புதுப் பெயராகச் சொல்லுவார். ரசவடை அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. பீம விலாஸில் இன்னிக்கு ரசவடை ரொம்ப நன்னா இருந்தது என்பார். காலையில் என்ன சாப்பிட்டேன், ராத்திரி என்ன சாப்பிட்டேன் என்று சொல்லியிருக்கிறாரே தவிர, மத்தியானச் சாப்பாடு பற்றி அவர் எதுவுமே எங்களிடம் சொன்னது கிடையாது. அந்த ரகசியத்தைத் துப்பறிய வேண்டும் என்று நானும் நம்பியும் நேரம் மாத்தி மாத்திப் போயிருக்கோம். நீங்க சாப்பிட்டாச்சா என்று கேட்க ஏதோ காரணத்தினால் கூச்சமா இருந்தது. மத்தியானச் சாப்பாட்டை அவர் ‘ஸ்கிப்’ பண்ணறாரோ என்ற சந்தேகமும் இருந்தது. அவருக்குச் சோறு பிடிக்காது என்பது ஒரு புறம் இருக்க அவரிடம் காசு இல்லையோ என்றும் தோன்றும். நானும் நம்பியும் அவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வீட்டிலிருந்து ஏதாவது எடுத்துக் கொண்டு போய்விடுவோம். அவருக்கு அதில் சந்தோஷம் இருக்கிற மாதிரியும் தெரியாது. சாப்பிடுவார். நாங்களும் அவருடன் உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவோம். இதெல்லாம் ரொம்பக் குறைவான தடவைகள் தான் நடந்திருக்கும்.
க. நா. சுவிடமிருந்த இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவருக்கு இந்திய இலக்கியத்தில் நல்ல பரிச்சயம் இருந்தது. ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு இவற்றில் வெளியான படைப்புகளை அவை ஆங்கிலத்தில் வந்திருந்தாலும் சரி, தமிழில் வந்திருந்தாலும் சரி, அவர் படித்திருந்தார். நாங்கள் அப்போது அதுமாதிரியான புத்தகங்கள் நாலோ ஐந்தோதான் படித்திருந்தோம். எங்களுக்கு அறிமுகமாகியிருந்த உலகம் மிகவும் சின்னதாக இருந்தது. அதுபோல் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருப்பதை அவர்தான் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அந்தப் புத்தகங்கள் எல்லாம் எங்கே கிடைக்கும் என்று கேட்டபோது, ‘அதையெல்லாம் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். புத்தகம் நம்மைத் தேடி வருமா? அதைத் தேடுவதே பெரிய சுவாரஸ்யமான விஷயம்’ என்பார். அவர் சொல்வதைப் பார்த்தால் எந்தப் புத்தகமும் சீக்கிரமாகக் கிடைத்துவிடக்கூடாது; தேடித் தேடி அலைந்து திரிந்த பிறகுதான் கிடைக்கவேண்டும் என்று ஒரு விதி இருப்பதுபோல் தோன்றும். அப்படி ஒரு பழக்கத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம். அப்படியே செய்தும் வந்தோம். நம்பியின் மறைவு வரையிலும் இந்தத் தேடல் தீவிரமாக நடந்தது.
பாரதி பற்றி அவரிடம் ஒரு மௌனம் இருந்தது. பாரதியைக் குறை சொல்லி எதுவும் எழுதினதும் இல்லை சொன்னதும் இல்லை. அதுபோல் பாரதியைப் பாராட்டி எதுவும் சொன்னதும் இல்லை, எழுதினதும் இல்லை. அவருக்கு 18-19ம் நூற் றாண்டுத் தமிழ் இலக்கியங்கள் மிகவும் பிரியமானவை. அவர் மனதிற்குள் அது பற்றி விரிவான சித்திரங்கள் இருந்தன. யார் யார் எந்தெந்தக் காலத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களது காலத்தில் சமூகச் சூழல் எப்படி இருந்தது போன்றவை பற்றித் தெரிந்து வைத்திருந்தார். ஆங்கிலக் கட்டுரைகள் எழுதுவதற்கும் அந்தத் தகவல்கள் அவருக்கு உபயோகமாக இருந்திருக்கின்றன. ராமலிங்க சுவாமிகளைப் பற்றி அடிக்கடிச் சொல்லுவார். ஜோதி ராமலிங்கம் என்றுதான் சொல்லுவார். இதுபோல் பல விஷயங்களைக் கொஞ்சம் வித்தியாசமாகச் சொல்லுவார். சின்ன வயதில் அவருக்குப் பெயர் அப்படிப் பதிந்திருக்கலாம். கடிதங்களிலும் அப்படித்தான் எழுதுவார்.
அவருடைய முக்கியமான குணமாகப் பரவலாகப் பலர் சொன்னது என்னவென்றால், ஒரு லட்ச ரூபாய் தருகிறேன்; ஒரு குறிப்பிட்ட சினிமா பற்றி விமர்சனம் கொஞ்சம் தூக்கி எழுதுங்கள் என்று யாராவது சொன்னாலும் நடக்கவே நடக்காது. அந்த ஆள் அடுத்த தடவை அவர் முகத்தில் முழிக்கவே முடியாது. ஆனால் அவராகவே ஒரு படத்தை ஆஹா ஓஹோ என்று தூக்கி எழுதுவார். அது வேற விஷயம். ‘நல்ல தம்பி’ என்ற என். எஸ். கிருஷ்ணனின் படத்துக்கு ஒரு விமர்சனம் எழுதியிருந்தார். என். எஸ். கிருஷ்ணனுக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு அந்த விமர்சனம் என்று சொல்லலாம். அந்தப் படத்தில் என். எஸ். கிருஷ்ணன் மது விலக்குப் பிரச்சாரம் செய்திருக்கிறார். அதனால் கல்கி அவரைப் பற்றி அப்படி எழுதினார் என்று சொல்வார்கள். கல்கி பற்றி அன்று எனக்கிருந்த அபிப்ராயங்கள் அவை. இதெல்லாம் க. நா. சுவிடம் சொன்னேன்.
உடனே அவர், ‘கல்கி பெரிய க்ரியேட்டிவ் எழுத்தாளர் கிடையாது. அவருக்குப் புகழ் அதிகமாக இருந்தது அவ்வளவு தான்’ என்றார்.
க. நா. சுவுக்கு ஆர். ஷண்முகசுந்தரம் பற்றி ரொம்ப உயர்வான எண்ணம் இருந்தது. ஆனால் அந்த அபிப்ராயம் கொஞ்சம் மிகையானதோ என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. அவர் நிறைய நாவல் எழுதி இருக்கிறார். நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். விற்பனை ஆக
வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் பல நாவல்கள் எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் நல்ல நாவல்கள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்த காலத்திலேயே கிட்டத் தட்ட பத்து நாவல்கள் எழுதியிருக்கிறார். அவையெல்லாம் அவ்வளவு உயர்வாக இல்லை. ஒரே ஒரு நாவல் - குறு நாவல் என்று சொல்வது சரியாக இருக்கும் - எழுதியவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டுமா என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால், க. நா. சுவைக் குருவாக மதிக்கக்கூடியவர் ஷண்முக சுந்தரம். க. நா. சுவால்தான் நான் ஒரு எழுத்தாளனாக இருக்கிறேன் என்று சொல்லுவார். அதில் உண்மையும் உண்டு. அந்த அளவுக்கு அவர்மீது பக்தியும் உண்டு. இதேவிதமான பக்தி கு. அழகிரி சாமிக்கு க. நா. சு. பேரில் ஏற்பட்டது. கு. அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ தொகுதிக்கு க. நா. சு. ஹிந்து இதழில் மிகவும் சிலாகித்து எழுதிய மதிப்புரை மூலம்தான் தீவிர எழுத்தாளர்கள் / வாசகர்கள் கவனத்தைத் தான் பெற்றதாகப் பலமுறை அழகிரிசாமி என்னிடமே கூறியிருக்கிறார். க. நா. சுவுக்கு செல்லப்பா பற்றி உயர்வான அபிப்ராயம் கிடையாது. சிதம்பர சுப்பிரமணியனைப் பற்றி இருக்கும் அளவுக்குக்கூட செல்லப்பா பற்றிக் கிடையாது. ‘இதயநாதம்’ நாவல் அவருக்குப் பிடித்திருந்தது. அந்த நாவலை அவருக்குப் பிடித்திருந்தது என்று சொல்லும் போது இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்கவேண்டும். தமிழில் இருப்பவற்றில் சிறந்த நாவல் எவை என்று க. நா. சுவைக் கேட்டால் ‘நாகம்மாள்’, ‘பொய்த்தேவு’, ‘இதயநாதம்’ என்று சொல்லுவார். அவை ரொம்பச் சிறந்த நாவல்கள் என்ற அபிப்ராயம் அவருக்கே கிடையாது. இருப்பவற்றில் சிறந்தவை அவை என்றுதான் சொல்லுவார். அவ்வளவுதான்.
பிச்சமூர்த்தி மேலே அவருக்கு மதிப்பும் அக்கறையும் உண்டு. முக்கியமாக பிச்சமூர்த்தியின் இரண்டாவது ஜென்மம் இருக்கே -நீண்ட இடைவெளி விட்டு அதன்பின் அவர் எழுதத் தொடங்கிய காலம் - அதன் பின் அவர் எழுதிய கதைகள் எங்கு இருந்தாலும் தேடிப் போய்ப் படித்துவிடுவார். ஒரு தடவை கலைமகளில் பிச்சமூர்த்தியின் ஒரு கதை வெளிவந்திருப்பதாகத் தகவல் கிடைத்திருந்தது. மணிமேடையில் கேட்டபோது கிடைக்கவில்லை. நானும் நம்பியும் எங்கள் ஊரில் பூங்காவுக்குள் ஒரு நூலகம் இருக்கும் விவரத்தைப் பற்றி க. நா. சு. விடம் சொல்லியிருந்தோம். நேராக அங்கு போய்த் தேடிப்பிடித்து அதைப் படித்து விட்டார். கதை எப்படி இருக்கிறது என்று கேட்டோம். நன்றாகத்தான் இருக்கிறது என்றார். அவர் சொல்வதைப் பார்க்கும்போது பிச்சமூர்த்தி எப்போதுமே நன்றாகத்தான் எழுதுவார் என்ற தொனி இருக்கும். பரிபக்குவமான எழுத்தாளர். சில கதைகளில் எல்லாம் கூடி வரும். சில கதைகளில் அப்படிக் கூடி வந்திருக்காது. ஆனால் ஒன்றுகூட அசட்டுத்தனமாக இருக்காது என்ற நிம்மதியோடுதான் அவரைப் பற்றிப் பேசினார். பிச்சமூர்த்தியின் கதைகளில் உங்களுக்குப் பிடித்த கதை எது என்று கேட்டேன். எனக்கு ரொம்பப் பிடித்த கதை ‘காவல்’ என்றார். பிச்சமூர்த்தியின் கதைகள் முழுவதையும் படித்த பின் எனக்கும் அந்தக் கதைதான் பிடித்திருந்தது. க. நா. சுவின் அபிப்ராயங்கள் சார்ந்து பிடித்திருந்ததா, என் அபிப்ராயங்கள் சார்ந்து பிடித்திருந்ததா என்பது வேறு விஷயம். அவர் எழுதின ஆகச் சிறந்த கதை அது என்று சொல்ல முடியாவிட்டாலும் சிறந்த நாலைந்து கதைகளில் அதுவும் ஒன்று என்று சொல்லும்படியாக இருந்தது. அப்படிச் சிலர் மேல் அவருக்கு ரொம்ப அக்கறை உண்டு. அப்படிப்பட்டவர்களில் புதுமைப்பித்தன் முக்கியமானவர். புதுமைப்பித்தனின் சாதகமான அம்சங்களைப்பற்றிச் சொல்லுவார். அவரது நகைச்சுவை உணர்வு, மொழியில் இருக்கும் பிடிப்பு, நிறைய புத்தகங்களைப் படிக்கும் பழக்கம், தமிழுக்குப் புதிதாக எழுதிச் சேர்க்க வேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வம், அப்படி எழுதும்போது தோல்வி வந்தால் அது தோல்வி அல்ல என்ற நம்பிக்கை. இப்படிப் பலவிதமான குணங்கள் கொண்ட எழுத்தாளர் என்று சொல்லியிருக்கிறார்.


