| க. நா. சுப்ரமணியம் | பக்கம் 1 2 3 4 |
1954ல் என்று நினைக் கிறேன், க. நா. சு. வை முதன்முதலாகத் திருவனந்தபுரத்தில் சந்தித்தேன். திருவனந்தபுரத்திற்குக் க. நா. சு. வந்திருக்கும் செய்தி எனக்கும் கிருஷ்ணன் நம்பிக்கும் கிடைத்திருந்தது. யார் மூலமாக என்பது ஞாபகத்தில் இல்லை.
நம்பி, ‘நாம் ரெண்டு பேரும் போய் க. நா. சுவைப் பார்த்துவிட்டு வருவோம்’ என்று
சொல்லிக்கொண்டேயிருந்தான். நம்பிக்கு நானும் கூட இருந்தால் ஆதரவாக இருக்கும், தைரியமாகப் போய்ப் பார்க்க முடியும் என்ற எண்ணம் இருந்தது. அந்த நேரத்தில் என்னால் அவனுடன் போக முடியவில்லை. உடம்புக்கு முடியாமல் வீட்டில் அடைந்து கிடக்கும் நான் அடிக்கடி திருவனந்தபுரம், மதுரை என்று புறப்பட்டுப் போவதைப் பார்த்து என் அப்பா இவனுக்கு ஒரு வியாதியும் கிடையாது. வீட்டில் கொஞ்ச நாள் இருக்கமாட்டான். எங்கையாவது புறப்பட்டுப் போய்விடுகிறான். பிரயாணம்தான் எல்லாத்துக்கும் காரணம் என்று தீர்மானமாகச் சொல்லிவிடுவார். இதையெல்லாம் கேட்டுக்கேட்டு அலுத்துப்போயிருந்த நான் நம்பி கூப்பிட்ட போது, ‘நீ போயிட்டு வா . . . ரொம்ப எளிமையான ஆளாகத்தான் இருப்பார்’ என்று சொன்னேன்.
‘இல்லை, எனக்குப் பயமாக இருக்கு. ரொம்பப் படிச்சவரா இருக்காரே’ என்றான் நம்பி.
‘ரொம்பப் படிச்சவர்ங்கறதுனால பயப்படணும்னு இல்லை. படிக்காதவர்களும் பயமுறுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். நீ தைரியமாகப் போய்ப் பாரு. கொஞ்ச நாள்லயே நானும் வந்துடறேன். ரெண்டாவது தடவை நாம வசதியாகப் போக முடியும்’னு சொன்னேன்.
க. நா. சுவிடம் கல்லூரியில் பேச வரும்படிச் சொன்னபோது, ‘கூட்டத்துக்கெல்லாம் வர்றேன். உங்க கூடவும் நிறைய நேரம் பேச முடியும் இல்லையா. மத்ததெல்லாம் இரண்டாம்பட்சமானதுதான்’ என்றார். கடைசியாக ஸ்காட் கிறித்துவக் கல்லூரி ஆங்கிலத்துறை சார்பாக ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு பண்ணினோம். அங்கிருந்த பேராசிரியர் க. நா. சுப்ரமணியம் என்ற பெயரைக் கேள்விப்பட்டதேயில்லை. தமிழ் இலக்கியத்தில் பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு அவருக்கு யார் பெயருமே தெரிந்திருக்கவில்லை. எனக்கு அப்போது எப்படியோ க. நா. சு, ஹிண்டு தினசரியில் மதிப்புரை எழுதும் விஷயம் நினைவுக்கு வந்தது. K.N. Subramaniam என்ற பெயரில் எழுதினார். நானே கிட்டத்தட்ட பத்து மதிப்புரைகள் படித்திருக்கிறேன். அதைச் சொன்னதும் ‘ஓ . . . K.N.S. ஆ . . . அதை முதல்லயே சொல்லக்கூடாதா? நன்றாகத் தெரியுமே. கண்டிப்பாகக் கூப்பிட்டுவிடலாம். பிரின்சிபாலுக்குக்கூட நன்றாகத் தெரியுமே’ என்றார். ஹிண்டு வில் எழுதுவதென்றால் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்று என்னைவிட க. நா. சுவைப் புகழ ஆரம்பித்து விட்டார். பி. ஏ., எம். ஏ. படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் தகவல் தெரிவித்து ஒரு நாள் நிச்சயித்து அதைக் க. நா. சுவுக்குத் தெரிவித்தோம்.
அவர் வருவதை உறுதி செய்ய மீண்டும் ஒரு கடிதம் எழுதினோம். கூட்டம் நடக்க இருக்கும் நாளன்று பேராசிரியர் பஸ் ஸ்டாண்டுக்குப் போய் அவரைக் காரில் அழைத்துக் கொண்டு வருவதாக முடிவு செய்யப்பட்டது. கல்லூரிக்குப் போனபோது ஒரு மாணவன், ‘K.N.S. வந்தாச்சு. அவரைப் பேராசிரியர் சாப்பிட அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்’ என்றான். கொஞ்ச நேரத்தில் அவர் வந்து சேர்ந்தார். வராண்டாவில் நின்று பேச ஆரம்பித்தார். ஒரு கூட்டத்துக்குப் பேச வந்திருக்கிறோம்; உள்ளே பேராசிரியர்கள், மாணவர்கள் நமக்காகக் காத்துக்கொண்டிருப்பார்கள்; தலைமை தாங்க வந்த ஒருவர் காத்துக்கொண்டிருப்பார் என்பதெல்லாவற்றையும் மறந்துவிட்டவர்போல கூட்டம் நடந்த திசையைப் பார்க்காமல் எதிர்த்திசையைப் பார்த்தபடி அவர்பாட்டுக்கு எங்களுடன் பேசிக்கொண்டேயிருந்தார். அவராகப் பேச்சை முடித்துவிட்டு வருவார் என்று மரியாதை காரணமாக அவர்கள் மேடையில் காத்துக்கொண்டிருந்தார்கள். இவரோ பேச்சை நிறுத்திவிட்டுப் போவதாகத் தெரியவில்லை. எனவே ஒரு பேராசிரியர் மெதுவாக வந்து, ‘கூட்டத்தை ஆரம்பிச்சுட லாமே . . . நேரம் ஆகிக்கொண்டிருக்கிறது. வர்ரீங்களா . . .’ என்றார். அப்புறம்தான் அவர் புறப்பட்டுப் போனார். ரொம்பத் தெரியும் என்று சொன்ன அந்தப் பேராசிரியர் க. நா. சுவின் பெயரை அன்று தப்பாக உச்சரித்தார். கே. என். எஸ். சுப்பிரமணியம் என்று பல தடவை சொன்னார். அது எனக்கு ரொம்ப ஏமாற்றமாகவும் கஷ்டமாகவும் இருந்தது. க. நா. சுவாவது எழுந்து தன் பெயரைத் திருத்துவார் என்று எதிர்பார்த்தோம். அவர் பாட்டுக்கு உட்கார்ந்துகொண்டிருந்தார். எப்படியும் சொல்லிட்டுப் போறார். நமக்கென்ன? என்பதுபோல் உட்கார்ந்துகொண்டிருந்தார். கீழேதான் உட்கார்ந்துகொண்டிருந்தார். பேசுவதற்கு முன்னால் மேடைக்குப் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அறிமுகம் முடிந்ததும் பேசக் கூப்பிட்டார்கள். மேடையில் போய் நின்றார். தமிழ்கூட அவருக்குப் பிரச்சினையாக இருக்கலாம். ஆங்கிலம் சரளமாகப் பேசுவார் என்ற கற்பனை எங்கள் மனதில் இருந்தது. ஆனால் அவரால் சரிவரப் பேச முடிந்திருக்கவில்லை. சுற்றிச் சுற்றி வந்தார். நிறைய ஆங்கில வாக்கியங்களை உருவாக்கவே முடியவில்லை. ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அவர் பேசும்போது பாதியில் நிறுத்தும் இடங்களில் நாங்கள்கூட மனதிற்குள் மீதி வாக்கியத்தைப் பூர்த்தி செய்துகொண்டோம். அந்த வாக்கியங்களைக் கூட அவரால் பேச முடியவில்லை. தமிழ்க் கலாச்சாரம், தமிழ்க் கல்லூரிப் பேராசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது பற்றிய விமர்சனபூர்வமான பேச்சுதான். ஆனால் அவை பேராசிரியர்களைச் சென்றடைய முடியாத விதத்தில் சொல்லும் முறை தடையாக இருந்தது.
கூட்டம் ஏற்பாடு செய்திருந்த ஆங்கிலப் பேராசிரியர் தலைமை தாங்க தமிழ்த்துறைத் தலைவரை அழைத்திருந்தார். ஆங்கிலப் பேராசிரியருக்குத் தெரிந்த அளவுக்குக்கூட தமிழ்த் துறைத்தலைவருக்கு க. நா. சுவைப் பற்றித் தெரியாது. ஆனால் க. நா. சு., தமிழ் இலக்கியம் பற்றி, தமிழ்க் கலாச்சாரம் பற்றி ஏதோ விமர்சனம் செய்கிறார் என்பதைப் புரிந்துகொண்டுவிட்டிருந்தார். பொதுவாக விருந்தினரைப் பேசக் கூப்பிட்டால் அவர்களைப் பாராட்டித்தான் பேசுவார்கள். யாரும் விமர்சனம் செய்ய மாட்டார்கள். ஆனால் தமிழ்த்துறைத் தலைவர் ரொம்பவும் உணர்ச்சி வசப்படக்கூடியவராக இருந்தார். எனவே எடுத்த எடுப்பிலேயே விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார். க. நா. சு. மேற்கத்திய சிந்தனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இவருடைய கருத்துக்களுடன் நான் உடன்பட முடியாது என்று சொன்னார். உடனே க. நா. சு. எழுந்து - அவர் அப்படிச் செய்வார் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்கவேயில்லை - ‘என்னைப் பாருங்கள். ஒரு பழங்காலத்து வேட்டியும் பழைய சட்டையும் அணிந்து கொண்டிருக்கிறேன். பேராசிரியரையும் பாருங்கள், சூட் போட்டுக்கொண்டிருக்கிறார், கோட் போட்டுக் கொண்டிருக்கிறார். இவர் சொல்லும் விஷயங்களும் இப்படித்தான் இருக்கும்’ என்று சொல்லிவிட்டு உட்கார்ந்துவிட்டார்.
கூட்டம் ஒருவழியாக முடிந்தது. எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு வெட்க உணர்ச்சி ஏற்பட்டிருந்தது. எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது என்பது க. நா. சுவுக்குத் தெரிந்து விட்டிருந்தது. ‘இதெல்லாம் இப்படித்தான் இருக்கும். அதுக்கென்ன’ என்றார். ‘நான் நன்றாகப் பேசவில்லையே என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். எனக்கு இவ்வளவுதான் சொல்ல இருக்கு. நான் இங்கிலீஷ் நன்றாகப் பேசக்கூடியவன் இல்லை’ என்றார். ‘அதெல்லாம் இல்லை. நீங்கள் சொன்னவை எவ்வளவு முக்கியமானவை’ என்றோம். எங்கள் வீட்டுக்கு வந்தார். நாலைந்து மணிநேரம் இருந்தார். அப்போது என் வீட்டில் ஏதோ ஒரு function. என்ன என்று ஞாபகம் இல்லை.
அவரிடம் ஒரு சின்னப் பெட்டி மட்டுமே இருந்தது. வேறெதுவும் கிடையாது. அவரிடம் இருக்கும் ஆடைகளும் குறைவு. அதைத் தூக்கிக்கொண்டு போய்விடுவார். அந்தப் பெட்டியை அறையிலேயே வைத்துவிட்டுப் போங்கள் என்று நாங்கள் சொல்லவும் முடியாது. அவர் திரும்பி வராமலேயே போய்விடுவார். போய்விட்டார் என்றால் அவரிடமிருந்து ஒரு கடுதாசிகூட வராது. அவருடைய சுபாவம் அப்படி. அவர் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பதற்குக்கூட ஒரு பெரிய ஆராய்ச்சி செய்ய வேண்டி வரும். இப்படிப்பட்டவர் எங்கே வராமல் போய்விடுவாரோ என்று மனதுக்குள் ஒரு பயம் இருந்து கொண்டேயிருக்கும். ஆனால், அங்கு இருந்தபோது சாயந்திரம் வருவேன் என்று சொல்லிவிட்டுப் போனால் அநேகமாக ராத்திரியாவது வந்து சேர்ந்துவிடுவார். ரொம்ப நேரம் பஸ் ஸ்டாண்டில் காத்துக்கொண்டிருப்போம். வரவில்லை என்றதும் சலித்துப் போய் லாட்ஜ்க்குப் போவோம். நான்காவது மாடியில் ஆள் நடமாட்டமில்லாத படிகளில் உட்கார்ந்துகொண்டிருப்போம். அவர் வருவார். அறையைத் திறந்துகொண்டு உள்ளே போனதுமே பேச ஆரம்பித்துவிடுவோம்.
எத்தனை மாதங்கள் நாகர்கோவிலில் இருந்தார் என்பது திட்டவட்டமாக ஞாபகம் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ஒரு வாரம், பத்து நாள் இருந்துவிட்டுப் போகிறேன் என்று சொன்னவர் குறைந்தது இரண்டு மாதத்திற்கு மேல் இருந்தார் என்பது மட்டும் நினைவிருக்கிறது. இதில் நடுவில் மூன்று நான்கு தடவை திருவனந்தபுரம் போய்விட்டு வந்திருந் தார்.
அவரை நிறைய இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஆசைப்பட்டோம். ஆனால், அவருக்கு அதில் ஆர்வம் இருக்கவில்லை. ஒரு தடவையோ, இரண்டு தடவையோ கன்னியாகுமரிக்குப் போயிருந்தோம். அன்று கன்னியாகுமரி உண்மையிலேயே அற்புதமான இடமாக இருந்தது. கடற்கரை ஓரமாகப் போய்க்கொண்டே இருந்தால் ஒரு மணல் குன்று வரும். அந்த மணல் குன்றிற்கு மேலே ஏறிப்போய் உட்கார்ந்து கொண்டால் ரொம்ப அருமையான காற்று வீசும். பெரும்பாலும் சாயந்திரம் அந்த இடத்தில் கூட்டமே இருக்காது. பெண்கள் எல்லாம் அந்த இடத்திற்கு வரமாட்டார்கள். முன் பக்கம் வந்து பார்த்துவிட்டுக் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பி விடுவார்கள். இப்போது அந்த விஷயங்கள் எல்லாம் பார்க்க முடியாமல் போய்விட்டது. அந்தக் குன்றே தரையோடு தரையாக ஆகிவிட்டது. கரைக்கும் கடலுக்கும் நடுவில் ஒரு பெரிய கல்சுவரை எழுப்பியிருக்கிறார்கள். அதைப் பார்ப்பதற்கு ரொம்பக் கொடுமையாக இருக்கிறது. கடல் அரிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக அறிவு பூர்வமாக யோசித்து அவர்கள் அதைக் கட்டியிருக்கலாம். அதன் மூலம் கடற்கரை அரிப்புக்கு ஆளாகாமல் காப்பாற்றப்படவும் செய்யலாம். ஆனால் கடல் சம்பந்தப்பட்ட ஒரு விகாசம், அதனுடைய அழகு, அடிவானம் வரையில் பார்வையைச் சுழலவிடும்போது ஏற்படும் உணர்வு இவற்றையெல்லாம் எப்படியோ அந்தக் கல்சுவர் நாசம் செய்து விடுகிறது. கல்சுவர் கட்டினதுக்கு அப்புறம் கன்னியாகுமரிக்கு நான் போகவே இல்லை. அதுக்கு முன்னால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் கன்னியாகுமரிக்குப் போவேன். உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ, உறவினர்கள் யாராவது வந்தாலோ போகாமல் இருந்திருப்பேனே தவிர வருடத்திற்குக் குறைந்தது ஐம்பது தடவையாவது போவேன். அலுப்பே இல்லாமல் போய்வருவேன்.
Top |


