| ஜீவா | பக்கம் 1 2 3 |
ஜீவாவைக் கடைசியாக எந்த வருஷம் பார்த்தேன் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் அநேகமாக அவரது மறைவுக்கு சற்று முன்பாகத்தான் பார்த்திருந்தேன். ஏனெனில் நான் பார்த்த போது அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. உடல்நிலை பலவீனமான பிறகு அவர் ரஷ்யாவுக்குப் போய் வந்திருந்தார் சிகிச்சைக்காக. அங்கு போய் வந்த பிறகு அவரது உடல்நிலை சற்று தேறியிருந்ததாகத் தோழர்கள் சொன்னார்கள். இவையெல்லாம் மங்கலாகத்தான் நினைவிருக்கின்றன.
அந்தச் சமயத்தில் நான் அவரை எழும்பூர் ரயில் நிலையத்தில் வைத்துப் பார்த்தேன். அப்போது அவருக்குக் காது ரொம்ப மந்தமாகியிருந்தது. ஹியரிங் எய்ட் வைத்துக்கொண்டிருந்தார். அப்படியும் நாம் பேசுவது சரியாகக் கேட்காது. பேசுவதைக் கேட்க நெருங்கி வந்து நம் மீது சாய்ந்துகொண்டுவிடுவார். ‘உடம்பு ரொம்ப பலகீனமாயிருக்கே’ என்றேன். முந்தைய உடல் கட்டு தொய்ந்து போயிருந்ததைப் பார்க்க வருத்தமாக இருந்தது. வஜ்ரம் போலிருந்த உடல். ‘பல வேலைகள் வந்துவிடுகின்றன. இனிமேல் கவனமாக இருந்து improve பண்ண வேண்டும்’ என்றார். நிறைய சைகைகளால் பேசினார். வாக்கியங்களை முழுமைப்படுத்தாமல் பாவங்களிலும் சைகைகளினாலும் பேசினார். ‘என்னுடன் வாயேன்’ என்றார்.
ஆட்டோவில் போனோம். கூட ஒருவரும் இருந்தார். எங்கே போகிறோம் என்பது எனக்குத் தெரியாது. கடற்கரை சாலை இருக்கிறதே அது வழியாகப் போனோம். குயீன் மேரிஸ் காலேஜ், ஆல் இந்தியா ரேடியோ வழியாகப் போனது ஆட்டோ. இரண்டு பக்கமும் அப்போதுதான் முதல் முறையாகப் பார்ப்பது போல் ஆச்சரியத்துடன் பார்த்து வந்தார். அவர் எப்போதுமே அப்படித்தான். பஸ்ஸில் போகும்போது பல தடவை வந்து போன இடமாக இருந்தாலும் முதல் தடவையாகப் பார்ப்பது போல் இரண்டு பக்கமும் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டே தான் வருவார். கொஞ்ச தூரம் போனதும் ஒரு சந்து வந்தது. அதன் வழியாக ஒரு வீட்டிற்குப் போனோம். கூட இருந்த நபர் வீட்டிற்குள் போனார். அது அவரது வீடாக இருந்திருக்கலாம். வராண்டாவில் உட்கார வசதிகள் இருந்தது. என்னிடம் பேசிவிட்டு வேறு இடத்துக்கு அவர் போகப்போகிறார். உட்கார்ந்து பேச வேண்டும் இல்லையா? அதற்காக அந்த வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போயிருந்தார்.
அன்று நான் கொஞ்சம் வருத்தப்பட்டுப் பேசினேன். அதற்கு முன்பு நான் அப்படிப் பேசினதே கிடையாது. அவர் சொன்னார், ‘உன்னோட எழுத்துகள்பற்றி நான் அதிகமாகப் படித்ததில்லை. அநேக நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் மனதில் நீ ஒரு கம்யூனிஸ்ட் எதிரி என்பது ஆழமாகப் பதிந்துபோய் விட்டிருக்கிறது. எனக்குப் படிக்க நேரம் இருப்பதில்லை. நான் உன் கதைகளைப் படித்ததில்லை என்பதால் அது குறித்து என்னால் அவர்களிடம் எதுவும் சொல்ல முடியவில்லை’ என்றார்.
அப்போது நான் சொன்னேன் :
‘எனக்கு அப்படி ஒரு உணர்வு கிடையாது. பிறர் என்னைப் பற்றி என்ன சொன்னாலும் எனக்கென்று என்னைப் பற்றி ஒரு அபிப்ராயம் இருக்கிறது. மார்க்சியத்தைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது என்ற ஒப்புதல் வாக்குமூலம் என் எழுத்துக்களிலேயே இருக்கிறது. உண்மையிலேயே நான் அப்படி ஒப்புதல் வாக்குமூலம் தருவது போல் எழுதுவதே மார்க்சியம் பற்றித் தெரியாமலேயே தெரிந்தது போல் சொல்லிக் கொண்டு வருகிறார்களே அவர்களுக்கான பதில்தான்.
என்னைவிடவும் மார்க்சியம் பற்றிக் குறைவாகத் தெரிந்து வைத்திருப்பவர்கள் கட்சியில் இருக்கிறார்கள். ஆனால் தங்களுக்கு அதிக அளவுக்குத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துத்தான் சொல்கிறேன், எனக்கு அவ்வளவாகத் தெரியாது என்று. அதே சமயம் எனக்குத் தெரிந்து நான் ஒரு பிற்போக்கான கதைகூட எழுதினது கிடையாது. ஆனால், உங்கள் எழுத்தாளர்கள் பிற்போக்கான கதைகளை எழுதிவருகிறார்கள். முற்போக்கான கதாபாத்திரம், முற்போக்கான முடிவு இவை மட்டுமே ஒரு கதையை முற்போக்கானதாக ஆக்கிவிட முடியாது. கதைக்குள்ளே எண்ணற்ற மனோபாவம் கசிகிறது. மேல் சதை, வெளியில் தெரியக்கூடிய பகுதிகள் முற்போக்கானதாக இருப்பதால் மட்டுமே ஒரு கதை முற்போக்கானதாக ஆகிவிட முடியாது. பல கதைகளில் ரொமான்டிக்கான மனோபாவம் அதிகமாக இருக்கிறது. நிலப் பிரபுத்துவ சிந்தனைகள் அதிகமாக இருக்கின்றன.
நான் தமிழ் வாழ்க்கையைப் பற்றித்தான் அதிகமாகச் சொல்கிறேன். மேடைகளில் பேசும்போதும் சரி, கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுதும்போதும் சரி, மொழிபெயர்ப்புகள் செய்யும்போதும் சரி, நண்பர்களிடம் பேசும்போதும் சரி, தமிழ் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் செய்கிறேன். என் எழுத்துகள் ஐநூறு வருடங்கள் தாண்டி வாழ வேண்டும், ஆயிரம் வருடங்கள் வாழ வேண்டும் என்பதெல்லாம் என்னுடைய பிரதான நோக்கமே அல்ல. அப்படி நடந்தால் நல்லது. ஆனால், அவை என் பிரதான நோக்கமல்ல. என்னோட நோக்கம் என் திறமைகளைப் பறைசாற்றுவதைவிட தமிழ்ச் சமூகத்தை எப்படி மாற்றலாம் என்பதுதான். அதை வெவ்வேறு தளத்தில் சொல்லிவருகிறேன். என்னைப் பொறுத்தவரையில் நானும் ஒரு முற்போக்கு எழுத்தாளன்தான். அதில் எந்தவித சந்தேகமும் எனக்குக் கிடையாது.’
ஜீவா உடனே பெரிசாகச் சிரித்தார். ‘உனக்கு அந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கும் என்றால் அது ரொம்ப நல்ல விஷயம் ஆயிற்றே. இப்போது இப்படிப் பேசுகிறார்கள். பின்னால் காலம் உன்னை ஒத்துக்கொள்ளட்டுமே. ஒரு உண்மையை அப்படி அழித்துவிட முடியுமா? அந்த அளவுக்கு உனக்கு
நம்பிக்கை இருக்குமானால் அதை நீ தொடர்ந்து செய்யலாம். உனக்குச் சில அனுபவங்கள் கட்சியினருடன் நடந்திருக்கிறது. அதனால் உன்னுடைய மனோபாவங்கள் ரொம்பவும் விரிவடைந்துதான் போயிருக்கிறது. நீ ஒன்றும் பின்வாங்கிவிடவில்லை என்றுதான் நீ நினைக்கிறாய் என்றால், நீ முக்கியமான முற்போக்கு எழுத்தாளன் என்று நீறீணீவீனீ பண்ணுகிறாய் என்றால், உனக்கு அந்த அளவுக்கு நம்பிக்கை உன் மேல் இருப்பதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது’ என்றார். ‘யார் உனக்கு எதிராக என்ன சொன்னாலும் உனக்குச் சரியென்றுபடுவதைச் செய்துவருவது என்பது பெரிய விஷயம் இல்லையா’ என்றார்.
அப்புறம் நான் கிளம்பினேன். ‘எங்கே போகிறாய்? நான் உன்னைக் கொண்டுவிட்டுவிடுகிறேன்’ என்றார். ‘நான் இப்படியே கடற்கரை வழியாக நடந்து போய்க் கொள்கிறேன். இப்படியே போனால் ஒரு சர்ச் வரும். கொஞ்ச தூரம் போனதும் ஒரு நல்ல ஹோட்டல் வரும். அங்கு சாப்பிட்டுவிட்டு அப்படியே நடந்து மயிலாப்பூர் குளத்துக்குப் போய்விடுவேன். அங்கிருந்து எனக்கு நிறைய பஸ்கள் கிடைக்கும்’ என்று சொல்லி விட்டுப் புறப்பட்டேன். அதன் பிறகு அவரைச் சந்தித்துப் பேசிய ஞாபகம் இல்லை. அதுதான் கடைசி சந்திப்பு என்று மனதில் இருக்கிறது.
(தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்)
Top |


