| ஜீவா | பக்கம் 1 2 3 |
நண்பர்களிடமிருந்து புத்தகங்கள் வாங்கிக்கொள்ளுவார். அவருக்குப் பிடித்தமான புத்தகம் என்றால் திரும்பப்பெறுவது இலேசில் நடக்கக்கூடிய காரியமாக இராது. பாரதியின் புத்தகம் எதுவாக இருந்தாலும் அவர் வாங்கிக்கொண்டு போய்விடுவார். ஏதாவது ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாரதியை விமர்சித்து ஏதாவது வெளியிட்டிருப்பார்கள். அதை வாங்கிப் படித்துவிட்டு கூட்டங்களில் அவர்களுடைய விமர்சனத்துக்குப் பதில் சொல்லுவார். பயங்கரமாகக் கிண்டலடிப்பார் பாரதியை விமர்சித்திருப்பவர்களை. தமிழக அரசு வெளியிட்ட பாரதி நூல்கள் மூன்று தொகுதிகள் என்னிடமிருந்து வாங்கிக் கொண்டு போனார். நான் அவருக்குப் பல புத்தகங்கள் தந்திருக்கிறேன். எதையுமே திரும்பப் பெற்றதில்லை. இது இவரிடமே இருக்கட்டும் என்று நினைத்துக்கொண்டுவிடுவேன். ஆனால் பாரதி புத்தகங்களை மட்டும் ஏனோ தர மனம் வரவில்லை. இரண்டு மூன்று தடவை திருப்பித் தரும்படி கேட்டேன். ‘தர்றேனே. அடுத்த தடவை வரும்போது தர்றேன்’ என்று சொல்லிவந்தார். அதன்பிறகு ஜீவாவுக்கு வேண்டிய ஒரு நண்பர் - அவர் எனக்கும் நெருக்கமான நண்பராக இருந்தார் - ‘நீங்கள் இனிமேல் அந்தப் புத்தகம் பற்றி அவரிடம் கேட்க வேண்டாம்’ என்று சொன்னார். சரியென்று விட்டுவிட்டேன்.
அவர் படித்தவற்றில் அவருடைய முற்போக்கான மனோபாவத்துக்கு முரண்பாடான ஒன்றாக எனக்குத் தோன்றியது காண்டேகரின் நாவல்களை அவர் விரும்பிப் படித்ததுதான். வேறு சிறுகதைகள், நாவல்கள் எல்லாம் அவர் படிப்பதை நான் பார்த்ததில்லை. காண்டேகர் பயன்படுத்திய உவமைகள், புரட்சிகரமான வசனங்கள் இவற்றை அடிக்கடி ஜீவா மேற்கோள் காட்டுவார்.
ஜீவாவின் புத்தகம் சம்பந்தப்பட்ட ஈடுபாடு மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்றுதான். அதே சமயம் புத்தக அறிவை விட அனுபவ அறிவு மிகவும் முக்கியமானது என்ற கருத்தில், எனக்குத் தெரிந்து, கம்யூனிஸ்ட் கட்சியில் அதிக அளவு அக்கறை கொண்டிருந்தது ஜீவாதான். மற்றவர்கள் எல்லாருக்குமே எல்லா அறிவையும் புத்தகத்திற்குள்ளிருந்தே பெற்றுவிட முடியும் என்ற அபிப்ராயம்தான் இருந்தது. மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ், ஸ்டாலின் இவர்களுடைய புத்தகங்களைப் படித்தாலே போதும். அந்தத் தத்துவம் பற்றி வேறு எதுவும் படிக்க வேண்டியதில்லை. அதுபோல் இலக்கியம் என்றால் கார்க்கி. கார்க்கியின் படைப்புகளைப் படித்துவிட்டால் இலக்கியத்தில் மேற்கொண்டு வேறு எதுவும் படிக்க வேண்டியதில்லை.
ஜீவா எங்காவது கிராமத்துக்குப் போனால் கடைத்திண்ணையில் உட்கார்ந்துகொண்டு அங்கிருக்கும் வயசானவர்களுடன் பேச ஆரம்பித்துவிடுவார். டீக்கடை பெஞ்சு அவருக்கு மிகவும் பிடிக்கும்.
எங்கள் ஊரில் துட்டி கேட்பது, அதாவது இறந்தவர் பற்றித் துக்கம் கேட்பது என்று ஒரு விஷயம் உண்டு. இவருக்கு யார் யார் இறந்துபோய் விட்டார்கள் என்பது பற்றி விவரம் தெரிந்ததும், துக்கம் விசாரித்துவரப் போய்விடுவார். இறந்துபோனவர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகக் கூட நடந்துகொண்டிருப்பவராக இருப்பார். காங்கிரஸ்காரராக இருப்பார். அதையெல்லாம் பொருட்படுத்த மாட்டார். இவர் ஏதாவது ஒரு ஊரில் ஒரு வாரம் இருந்தார் என்றால் குறைந்தது ஐந்தாறு துட்டிக்காவது போய்வந்துவிடுவார். ஒருவர் இறந்துபோய் பத்து மாசம் ஆகியிருக்கும். இன்னொருவர் இறந்து ஒன்றரை வருஷம் ஆகியிருக்கும். இருந்தாலும் இவர் போய் விசாரித்துவிட்டுவருவார்.
பெரியாருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேற்றுமையில் முக்கியமானது இது. சுரண்டலைத் தாக்குவார். எத்தனையோ மூடப் பழக்கவழக்கங்கள் இருக்கின்றன; காலப்போக்கில் நாம் அவற்றை அவர்களிடமிருந்து மாற்றிவிடலாம். இப்போது அது பற்றிய மோதலை உருவாக்க வேண்டியதில்லை. இப்போது அவர்கள் நன்கு சாப்பிட வேண்டும். நோய் வந்தால் நல்ல சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். சொந்தமான பூமி இருக்க வேண்டும். சொந்தமான வீடு இருக்க வேண்டும் என்றுதான் அவர் சொல்லிக் கொண்டே போவார். இது அல்ல கம்யூனிசம் என்று சொல்லக் கூடிய கம்யூனிஸ்ட்கள் இருந்தார்கள். இவர் கம்யூனிசத்தை ரொம்ப எளிமைப்படுத்துகிறார் என்று சொல்லக் கூடிய கம்யூனிஸ்ட்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஜீவா நம்பிய கம்யூனிசம் அதுதான். அந்த விஷயம் கலாச்சார ரீதியாகவே ஜீவாவுக்கும் மற்ற தோழர்களுக்கும் இடையில் ஒரு வேறுபாட்டைத் தோற்றுவித்திருந்தது. அவர் ஓயாமல் ஜனங்களைப் பார்த்துப் போய்க் கொண்டே இருந்தார். இவர்கள் ஓயாமல் நிறுவனத்தைப் பார்த்துப் போய்க் கொண்டேயிருந்தார்கள். எப்படி ஆட்களைக் கட்சிக்குள் சேர்ப்பது, கூட்டங்கள் நடத்துவது, மாநாடுகள் நடத்துவது, ஊர்வலம் போவது, ஊர்வலங்களில் அதிக ஆட்களை எப்படிப் பங்கெடுக்கச் செய்வது . . . இது போன்றவற்றில் அவருக்குக் கவனம் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அதைவிட அவர் வேறு விஷயங்களுக்குத்தான் முக்கியத்துவம் தந்தார்.
மேடைகளில் கம்பராமாயணம் பற்றி அவர் பேசும்போது காங்கிரஸ்காரர்களுக்கு, இலக்கியக்காரர்களுக்கு, தமிழ்ப் புலவர்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். கட்சிக்காரர்களுக்கு அது பிடிக்கவில்லை. கம்பர் பெரிதாக என்ன எழுதியிருக்கிறார்? அது இராமாயணம்தானே என்று சொல்வார்கள். ஜீவாவின் கருத்து என்னவென்றால், இராமாயணம், மகாபாரதம் இவை யாருடைய தனிச் சொத்தும் கிடையாது. ஜனங்களின் சொத்து. அவற்றிலிருந்து ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்திக் கொண்டு சமூக மாற்றத்தைத் தேடுவதுதான் எல்லா இலக்கிய கர்த்தாக்களின் குணமும் என்பதை உறுதிப்படுத்திவிட முடியும் என்று அவர் நம்பினார். கம்பரும் சொல்லியிருக்கிறார் என்ற எண்ணத்திற்கு மக்களைக் கொண்டுவந்துவிடுவார். அவரது கருத்து என்னவென்றால் எப்போது ஒருவன் உயர்ந்த கலைஞனாக இருக்கிறானோ அப்போது அவனிடம் சமூகச் சிந்தனை சார்ந்த பார்வையும் இருக்கும். அது அவனுக்கு அந்நியமான தல்ல. அது செயற்கையாக அவனுக்கு வர வேண்டிய ஒன்றல்ல. அவனிடம் அது இயல்பாகவே இருக்கிறது. நமது பழைய உதாரணங்களைக் கொண்டு இந்த விஷயங்களை மக்களுக்குச் சொல்லித்தர வேண்டும் என்ற எண்ணம்தான் அவரிடம் இருந்தது. அவரது அந்தக் கருத்துகளுக்குக் கட்சியிடமிருந்து போதிய ஆதரவு கிடைத்தது என்று சொல்ல முடியாது.
ஜீவாவுக்கு எனக்குத் தெரிந்து இரண்டு பலவீனங்கள் இருந்தன. ஒன்று உணவு. எங்கள் ஊரில் கோபாலபிள்ளை என்றொரு டாக்டர் இருந்தார். அவர் ஜீவாவைக் கூப்பிடுவார், ‘வாருங்கள். உங்களுக்குப் பரிசோதனை செய்து என்னென்ன உணவு உண்ண வேண்டும் என்பது பற்றியெல்லாம் சொல்கிறேன்’ என்பார். ஜீவா மருத்துவமனைக்குப் போனதும் டாக்டர்கள் அவருக்குத் தனி அக்கறை எடுத்து நன்கு கவனிப்பார்கள். அவருக்கு சிகிச்சை செய்வதை அவர்கள் ரொம்ப சந்தோஷத்துடன் செய்வார்கள். அவரிடமிருந்து எந்தப் பிரதிபலனையும் எதிர் பார்க்கமாட்டார்கள். அவர்கள் சொல்வார்கள், நீங்கள் இனிப்பு அதிகம் சாப்பிடக்கூடாது என்று. இவரும் குழந்தைபோல் மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு கேட்டுக்கொள்வார். பக்கத்திலிருந்து பார்க்கும் நமக்கு அன்றிலிருந்து எல்லாத்தையும் விட்டுவிடுவார் என்றுகூடத் தோன்றும். ஆனால் அன்று மாலையே வழக்கமாக என்ன சாப்பிட்டுவருவாரோ அதைச் சாப்பிட ஆரம்பித்துவிடுவார். எல்லாவற்றையும் விஞ்ஞான பூர்வமாகப் பார்க்கும் அவருக்கு, டாக்டர்கள் சொல்வது சரி என்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவருக்கு உணவு சார்ந்த கட்டுப்பாடு மட்டும் முடிந்திருக்கவில்லை. அதே சமயம் இந்த உணவுகளை அவர் தேடியெல்லாம் போகமாட் டார். அவ்வப்போது கிடைப்பதைச் சாப்பிட்டுக்கொள்வார். பிடித்தமான உணவு கிடைத்தால் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவார். அதுதான் அவருடைய குணம்.
இதுபோல் அவரிடம் இருந்த இன்னொரு பலவீனம் பெண்கள் சம்பந்தமானது. இதையெல்லாம் நான் ஆராயப் போகவே இல்லை. எனக்கு அது ஒரு குறையாகத் தோன்றவே இல்லை. தோழர்கள் இதை ஒரு குறையாகச் சொல்வார்கள். ஒருவன் பிரம்மச்சாரியாக இருக்கவேண்டும் என்று எதிர் பார்ப்பதுதான் அறிவுகெட்டதனம் என்பது என் எண்ணம். கல்யாணம் பண்ணிக் கொண்டு பத்து குழந்தைகள் பெற்றுக் கொண்டிருக்கும் ஒருவர் இவரைப் பார்த்துக் குறை சொல்வது அயோக்கியத்தனம் என்றுதான் சொல்லவேண்டும். இந்தியாவில் இதற்கு அதிக அளவுக்கு முக்கியத்துவம் தருவதற்குக் காரணம் ஆன்மிக குருகுல வழிமுறை சார்ந்த விஷயங்கள்தான்.
எங்கள் ஊரில் ஒரு விஷயம் . . . ஜீவாவுக்கு எங்கு போனாலும் காசு செலவழிக்கவே முடியாது. அவர் தந்தால் யாரும் வாங்கிக் கொள்ளமாட்டார்கள். ஒரு லாலா மிட்டாய் கடையில் போய் ஏதாவது வாங்கிச் சாப்பிடுவார். இவருக்கு அவரைத் தெரிந்திருக்காது. ஆனால் அந்தக் கடைக்காரருக்கு ஜீவாவைத் தெரிந்திருக்கும். வேண்டாம் என்று சொல்லிவிடுவார். சென்னையில், வேறு ஊர்களில் எப்படி என்று எனக்குத் தெரியாது. நடந்துபோகும்போது ஒரு கடையைப் பார்ப்பார். நாலைந்துபேர் கடையில் ஏதாவது வாங்கிக்கொண்டிருக்கிறார்கள், வியாபாரம் நடந்துகொண்டிருக்கிறது என்றால் அவர் பாட்டுக்குப் போய் விடுவார். இல்லையென்றால்தான் உள்ளே நுழைவார்.
ஜீவா முத்துவிடம் போய் சும்மா பேசிக்கொண்டிருப்பார். முத்துவின் ஒரு மகள் நர்ஸாக இருந்தாள். அவள் எங்கள் அம்மாவுக்கு ஊசி போட வருவாள். என் அம்மாவுக்கு அவள் செல்லக் குழந்தைபோல் ஆகியிருந்தாள். டாக்டருக்கு போன் பண்ணும்போது என் அம்மா ‘தாயியை அனுப்புங்கள்’ என்று தான் சொல்லுவாள். டாக்டரும் வேறு யாரையும் அனுப்பாமல் அவளைத்தான் அனுப்புவார். அவளுக்கு ஒரு அரை மணி நேரம்தான் எங்கள் வீட்டில் வேலையிருக்கும். ஆனால் அவள் மூன்று மணிநேரம் இருந்து பேசிவிட்டுப் போவாள். அவள் பேரில் ஒரு நெருக்கமான உறவு வந்துவிட்டிருந்தது எங்கள் குடும்பத்தினருக்கு.
அந்தக் கடையில் ஜீவா பேசிக்கொண்டிருக்கும்போது முத்து அவரது தலையைப் பார்ப்பார். ‘டயம் ஆயாச்சு’ என்பார் ஜீவாவைப் பார்த்து. உடனே ஜீவா தலையைக் கோதிப் பார்ப்பார். ‘கொஞ்சம் கழியட்டுமே’ என்பார். ‘வேண்டாம் இப்போ வந்திருக்கிறீர்கள். வேலையை முடிச்சிடுவோம். நாளைக்குக் கோவில்பட்டிக்கு எங்கையாவது கூட்டத்துக்குப் போய்விடுவீர்கள்’ என்று அதட்டுவார். ஜீவா உடனே போய் உட்கார்ந்து கொள்ளுவார். முடி வெட்டும்போது அவர்கள் பேச்சுக் கொடுத்தபடியே வெட்டுவார்கள். அவர்களுக்கு ஊர்க் கதைகள், வம்புகள் அவ்வளவும் தெரிந்திருக்கும். குமுத த்தில் கிசுகிசு போடுகிறானே, அது மாதிரி யார் யாருக்கு என்னென்ன கிசுகிசுக்கள் பிடிக்கும் என்பது தெரிந்து அதற்குத் தகுந்தாற்போல் பேசுவார்கள். அதற்கு எவ்வளவோ உதாரணங்கள் சொல்லலாம்.
அவர்தான் எனக்குத் தேவி பிரசாத் சட்டோபாத்தியாவின் ‘லோகாயதா’ என்ற புத்தகத்தைப் படிக்கத் தந்தார். அந்த விலையுயர்ந்த புத்தகத்தை அவர் திரும்பப் பெற்றுக்கொள்வதில் சிரத்தை காட்டவில்லை. பல வருடங்கள் அந்தப் புத்தகம் என்னிடமே இருந்தது. அவர் மறைவுக்குச் சில வருடங்களுக்கு முன்தான் நான் அதை ஒரு நண்பரிடம் கொடுத்தனுப்பினேன். ‘தொலைந்துவிட்டது என்று இருந்தேன். அவரிடமா இருந்தது?’ என்றிருக்கிறார் வானமாமலை. இவையெல்லாம் எனக்கு அவர் மேல் பாராட்டுணர்ச்சியை ஏற்படுத்தியவை. ஆனால் என்னைப் பற்றி இந்த மாதிரி ஒரு காரியம் செய்தார்.
ஜீவா சொன்னார், ‘ரொம்பத் தப்புப் பண்ணிட்டானே. என்ன செய்ய முடியும் ராமசாமி . . . படிப்பாளிகளெல்லாம் இப்படி அல்லவா இருக்கிறார்கள்.’ அதுதானே அவரோட பாணி. நம்ம சைடிலிருந்துதானே முதலில் ஆரம்பிப்பார். ‘ஒண்ணுந்தெரியாதவனுக்கு சொல்லித் தரலாம். படிப்பாளிக்குச் சொல்லித்தர முடியுமா’ என்று ஆரம்பித்தார். இரண்டு மூன்று தடவை சந்தித்தோம். கட்சியில் நான் இல்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த பிறகு, எல்லாரும் என்னைக் கைவிட்ட பிறகு அவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. வழக்கமாகக் கட்சி ஆள் ஒருத்தர்தான் கொண்டுவருவார். அந்த முறை வேறு ஒருவர் கொண்டுவந்திருந்தார். நாளைக்கு காலையில் டிராவலர்ஸ் பங்களாவுக்கு வந்து பாரு என்று எழுதியிருந்தார். மனசுக்கு அப்போது வருத்தமும் சந்தோஷமும் தாங்க முடியாத அளவுக்கு ஏற்பட்டது.


