| ஜீவா | பக்கம் 1 2 3 |
என் மாமாவுக்குச் சிறு வயதிலேயே ஒரு பத்து வருடங்கள் ஜீவாவுடன் நல்ல பழக்கம் இருந்தது. கல்கி,
திரு. வி. க. போன்றோரின் பெயர்களெல்லாம் என் மாமாவின் வாயில் அடிபடுவதற்கு முன்பு அடிபடும் பெயர் ப. ஜீவானந்தம் என்பது. அவரை ஜீவா என்று எங்கள் ஊரில் யாரும் அந்தக் காலத்தில் சொல்லமாட்டார்கள். ஜீவானந்தம் என்றுதான் அந்தக் காலத்தில் சொல்லுவார்கள். ஜீவா என்று யாராவது சொன்னால் யாரைச் சொல்கிறீர்கள் என்றுதான் கேட்பார்கள். ரொம்பப் பின்னால்தான் ஜீவா என்ற செல்லப்பெயர் அவருக்கு வந்து சேர்ந்தது. நாகர்கோவிலில் எந்த கூட்டத்துக்கான நோட்டீஸிலும் சரி, யாராவது இரண்டு பேர் பேசுகிறார்கள் என்றால் அவர்களில் ஒருவர் ஜீவானந்தமாகத்தான் இருப்பார்.
நான் என் மாமாவிடம் ஒருநாள் ஜீவானந்தத்தின் மீட்டிங்குக்கு அழைத்துச் செல்லுங்களேன் என்று கேட்டேன். என் மாமா என் அம்மாவிடம் கேட்டார் இவனைக் கூட்டிக்கொண்டு போகவா என்று. ‘சரி, கூட்டிக்கொண்டு போ எட்டு மணிக்கெல்லாம் கொண்டு வந்து விட்டுவிடு’ என்றாள் அம்மா.
கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன் ஜீவாவுடன் ஒரு குழு வந்தது. அவர்களுடன் இவரும் வந்தார். கூட்டம் ஆரம்பமானது. முதலில் இரண்டு மூன்று பேர் பேசினார்கள். அதன் பிறகு ஜீவா பேசினார். எனக்கு அவர் பேச்சு சுத்தமாகப் புரியவில்லை. ரொம்ப எளிமையான பாஷையில்தான் அவர் பேசினார். அவர் பேசுவதைக் கேட்டு கூட்டத்தினர் கை தட்டினார்கள். சிரித்தார்கள். பார்வையாளர்களைத் தன் பக்கம் அணைத்துக்கொண்டு பேசுகிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது.
ஜீவாவைப் பார்க்க என் மாமா அழைத்துக்கொண்டு போனார். ஹோட்டல் பையன்கள் இரண்டு முக்காலிகளை எங்களுக்குக் கொண்டுவந்து போட்டான். நாங்கள் உட்கார்ந்து கொண்டோம். அந்த நாட்களில் ஜீவாவை அநேகமாக ஒவ்வொரு நாளும் மாமா பார்த்து வந்தார். எனவே அவர் என்னிடம் சொன்னார், ‘நான் வெளியே போய்விட்டு சிறிது நேரம் கழித்து வருகிறேன். நீ பயப்பட வேண்டாம். அவருடன் பேசிக்கொண்டிரு’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
ஜீவாவிடம் இன்னொரு குணம் இருந்தது. முன்னாலேயே தெரிந்திருக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது. யாரிடம் பழகினாலும் நன்கு தெரிந்த ஒருவருடன் பழகுவதுபோலவே பேசுவார். அவர் முன்னால் நாம் சங்கோஜப்பட்டுக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருக்க முடியாது. எந்த சங்கோஜியையும் சிறிது நேரத்தில் வாயைக் கிண்டிப் பேச வைத்துவிடுவார்.
அப்போதெல்லாம் அவர் ஒரு தடவை கூட என்னிடம் கம்யூனிசம் பற்றிப் பேசினதே கிடையாது. விஞ்ஞானம் பற்றிப் பேசுவார். நமது நாட்டில் விஞ்ஞான முன்னேற்றம் போதிய அளவு இல்லை. ஒரு சமூகத்தில் விஞ்ஞானம் வளர்ச்சியடைந்தால்தான் அந்த சமுதாயம் உயரும். மேல் நாட்டில் எல்லாம் விஞ்ஞானம் ரொம்ப வளர்ச்சி அடைந்திருக்கிறது. நம் நாட்டிலும் அப்படியான முன்னேற்றம் வரவேண்டும் என்பார். அந்தக் காலகட்டத்தில் பலருக்கு அப்படியான எண்ணம் இருந்தது. விஞ்ஞான முன்னேற்றத்தின் மூலம்தான் இந்தியா நல்ல நிலைக்கு வரும் என்று பலர் நம்பினார்கள். பல இடதுசாரிகள் அப்படி நம்பினார்கள். காந்தி முதலானோருக்கு அதில் சில சந்தேகங்கள் இருந்திருக்கலாம். நேரு போன்றோருக்கு விஞ்ஞான வளர்ச்சியில் ரொம்ப ஆர்வம் இருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பலர் நேருவின் பார்வையை மதித்தார்கள். பின்னால்தான் இந்தியக் கம்யூனிஸ்ட்களிடம் மட்டுமல்ல, பிற கட்சிகளிலும் வந்த இளைய தலைமுறையினரிடம் காந்தியின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றன. அவர்மீது அவர்களுக்கு விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் இந்திய வாழ்க்கையைப் பொறுத்தவரை காந்தியின் அணுகுமுறை கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டியதுதான் என்று அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.
ஒரு உதாரணம் ராம் மனோகர் லோகியா. மற்றொரு உதாரணம் இ. எம். எஸ். அவர் காந்தி பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். காந்தியின் கொள்கையிலிருந்து மாறுபட்டது தான் இ. எம். எஸ்ஸின் பார்வை. அதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் காந்தி மேல் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். அத்துடன் மூட நம்பிக்கைக்கு எதிராகவும் அடிக்கடிப் பேசுவார் ஜீவா. காங்கிரஸ் பற்றிப் பேசும்போது காங்கிரஸின் அரசியல் செயல்பாடுகள் பற்றி அதிகம் பேசாமல் நேரு பற்றி அதிகம் பேசுவார். விஞ்ஞான விஷயங்கள் பற்றிப் பேசுவார். நேருவின் புத்தகங்கள் பற்றிச் சொல்வார். நான் அப்போது அந்தப் புத்தகங்களைக் கண்ணால்கூடப் பார்த்திருக்கவில்லை. அதுபோல் அவருக்கு முக்கியமாகப் பட்ட இன்னொரு விஷயம் மனிதர்களின் உடல் ஆரோக்கியம் பற்றியது. சாதாரணமாக எந்த ஒரு அரசியல் தலைவரும் அது பற்றி அக்கறையோடு கேட்டு நான் பார்த்தது கிடையாது. யார் வந்தாலும் கேட்பார், ‘உடற்பயிற்சி செய்வதுண்டா? ஓடுவதுண்டா? நடப்பதுண்டா? என்னென்ன சாப்பிடுவாய்’ என்றெல்லாம் கேட்பார். நன்றாகச் சாப்பிட வேண்டும்; நன்றாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்; நன்றாக உழைக்க வேண்டும் என்பார். தோழர்கள் ஆரோக்கியத்தை அசட்டை செய்வதைக் கண்டிப்பார்; சில சமயம் கேலி செய்வார்.
ஜீவா திருமணம் செய்துகொள்ளாமல் இருந்ததால் அவருக்குச் சமையல் செய்து தர யாரும் இருக்கவில்லை. யார் வீட்டிற்காவது அவர் போனால் உணவு தயாரிப்பவர்களிடம் இன்னின்ன உணவைச் செய்யுங்கள் என்று சொல்லுவார். அதன் பிறகு இன்னொரு விஷயமும் என்னிடம் அடிக்கடி சொல்லுவார், ‘காலையில் சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டும். எழுந்ததும் ஒரு மணி நேரம் ஓட வேண்டும்’ என்பார். ‘ரோட்டில் ஓடும்போது எல்லோரும் சிரிப்பார்களே என்றெல்லாம் கவலைப்படக் கூடாது. எந்த ஒரு நல்ல காரியத்தைப் பார்த்தாலும் இவர்கள் இப்படித்தான் சிரிப்பார்கள். அவர்கள் சிரித்துக் கொள்ளட்டும் என்று நீ உன் வேலையைச் செய்துகொண்டு வர வேண்டும்’ என்பார். புத்தகங்கள் பற்றிப் பேசுவார். அவரைச் சந்தித்த நாட்களில் ஒருநாள் கூட அவர் பாரதியைப் பற்றி என்னிடம் சொல்லாமல் இருந்தது கிடையாது. ஏதாவது ஒரு விஷயத்தினுள் பாரதியைப் புகுத்திவிடுவார். பாரதி பற்றிப் பேசும்போது ரொம்ப ஆவேசமாகப் பேசுவார். பாரதியாரின் பல பாடல்கள் அவருக்கு மனப்பாடமாகத் தெரிந்திருந்தது. முக்கியமாக அவருக்கு விருப்பமான பாடல்கள் எல்லாமே அவருக்கு மனப்பாடமாகத் தெரிந்திருந்தது.
சொல்லும்போது ஏதோ நாற்பதாயிரம் ஐம்பதாயிரம் பேர் கூடியிருக்கிற சபையில் எல்லோருக்கும் கேட்க வேண்டும் என்பதற்காகச் சத்தம் போட்டுச் சொல்வார்களே - ஒலி பெருக்கிகள் இல்லாத காலம் - அதுபோல் பேசுவார். அவருக்குப் பேசுவதைவிட முழங்குவதுதான் பிடிக்கும். எப்படியும் எனக்கு பாரதிமேல் ஈடுபாடு வர வைத்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதன் பிறகு எனக்கு உடல் ஆரோக்கியம் இருக்க வேண்டும். நோய் நொடியில்லாமல் இருக்க வேண்டும். எனவே அது பற்றியெல்லாம் என்னிடம் சொல்ல வேண்டும் என்று அவர் மனதில் ஒரு தீர்மானம் இருந்தது. விளையாடவே முடியாதவனாகியிருந்தேன் நான். அது அவருக்குத் தெரிந்திருந்தது. ஆரம்பத்தில் எனக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்திருக்கிறது; அதன்பின் நோய்வாய்ப்பட்டதும் என்னுடைய பார்வையே மாறிவிட்டது என்று அவர் நினைத்தார். சோம்பேறிகளின் பழக்கவழக்கங்கள் என்மீது படிந்துவிட்டதாக நினைத்தார். திரும்பவும் நான் அதைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். முட்டாள்தனமாக தானாகவே உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்காமல் டாக்டரிடம் கேட்டுக்கொண்டு செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்றும் சொல்வார்.
ஒரு தடவை எங்கள் ஊரில் இருக்கும் கோர்ட் ரோடு வழியாகப் போய்க்கொண்டிருந்தேன். போகும் வழியில் குட்டி ஹால் ஒன்று இருந்தது. ஒரு பெரிய வீட்டின் முன் பக்கத்தில் கொஞ்சம் பேர் கூட்டமாக நின்றுகொண்டிருந்தார்கள். ஜீவானந்தம் வரப் போகிறார் என்றார்கள். எதுக்கு என்று கேட்டேன். பாரதிபற்றிப் பேசப்போகிறார் என்றார்கள். பொதுவாகக் கூட்டங்கள் முனிசிபல் மைதானத்தில்தான் நடக்கும். அன்றுகூட அங்கு நடக்கவிருந்த ஒரு கூட்டத்தில் பேசுவதற்காகத் தான் அவர் வந்திருந்தார். அந்தக் கூட்டம் இரவு ஏழு
மணிக்கோ, எட்டு மணிக்கோ ஆரம்பமாக இருந்தது. அவர் இங்கு வந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் பாரதி பற்றிப் பேச கோர்ட் ரோடில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். இங்கு பேசிவிட்டு முனிசிபல் மைதானத்துக்குப் போய் அங்கும் பேசுவதாக இருந்தது. கோர்ட் ரோடு ஹாலில் அந்தக் கூட்டம் மாலை ஐந்தரை மணி வாக்கில் ஆரம்பமானது. அந்த ஹால் முழுமையாக நிறைந்துவிட்டிருந்தது. மொத்தம் ஐம்பது பேர் இருப்பார்கள். நான் போய்த் தரையில் அமர்ந்துகொண்டேன். கொஞ்ச நேரத்தில் ஜீவா வந்தார். அவருடன் வேறு தலைவர்கள் யாரும் வரவில்லை. அவர் மட்டும் தனியாக வந்திருந்தார். ஒரு முக்காலி போட்டிருந்தார்கள். அதில் அமர்ந்து கொண்டார். சற்று நேரத்தில் ஒருவர் முன்னால் வந்து நீங்கள் பேசலாம் என்றார். ஜீவா பேச ஆரம்பித்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார். ரொம்ப அற்புதமான பேச்சு. உற்சாகமும் கும்மாளமும் சந்தோஷமும் அவரைப் போட்டு அப்படி அலைக் கழித்தது. எங்கள் ஊரில் இருந்த இலக்கிய, சமூக விஷயங்களில் ஆர்வம் கொண்ட அவ்வளவு பேரின் முகத்தையும் அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அவர்கள் தரும் உற்சாகமான எதிர்வினை அவரை மேலும் உற்சாகப்படுத்தியது. எங்கள் ஊரில் இருந்த எல்லா கட்சிக்காரர்களுக்கும் காங்கிரஸ்காரராக இருந்தாலும் சரி, தி. க. க்காரராக இருந்தாலும் சரி, தி. மு. க. க்காரராக இருந்தாலும் சரி எல்லாருக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும். அவர்களுடன் தனிப்பட்ட முறையில் மிகவும் நல்ல உறவு வைத்துக் கொள்வார். அவர்களுக்குப் பிற கம்யூனிஸ்ட்களை அந்த அளவுக்குப் பிடிக்காது.
எப்போதாவது கட்சிக்கு எதிரான விமர்சனங்கள் வரும்போது அந்த விமர்சனங்களை அவரே தொகுத்து வலுவாகச் சொல்லுவார். அப்படிச் சொல்லும்போது கட்சி மாறிவிட்டாரோ என்ற சந்தேகம் வந்துவிடும். அதற்குப் பின் ஒவ்வொரு வாதத்திற்கும் பதில் சொல்லி அந்த வாதங்களை முறியடித்துக்கொண்டே போவார். தேசியக் கட்சியான காங்கிரஸை எப்படி எதிர்க்கலாம்? ஏன் ஒரு பாலத்தில் ரயிலைக் கவிழ்த்தார்கள்? பலரும் ரொம்ப மிகைப்படுத்திப் பல விஷயங்களைச் சொல்கிறார்கள். ஒரு பெரிய மக்கள் சக்தி ஒன்று சேர்ந்து வரும்போது எல்லோரும் ஒரே மாதிரி செயல்படுவார்கள் என்று சொல்ல முடியாது. சின்னச் சின்ன தவறுகள் செய்துவிடுவார்கள். மக்கள் உணர்ச்சிவசப்பட்டு செயலாற்றத் தொடங்கும்போது அவர்களைக் கட்டுப்படுத்துவது கடினம் என்பார். இப்படி எல்லாவற்றுக்கும் ஒரு பதில் அவர் வைத்திருப்பார். அந்த பதில்களில் அறிவு வாதியின் மெத்தப் படித்த தன்மையில்லாமல் ஒருவித நாடோடித் தன்மை இருக்கும். அப்புறம் தங்குதடையற்ற தன்மை, சொற்கள் அருவிபோல் வந்து கொட்டும் அழகு, மொழிமீது இருக்கும் கட்டுப்பாடு என அவருக்குப் பல திறமைகள் இருந்தன.
இவர் இங்கு இருக்கும் போது வழக்கமாக இரண்டு மூன்று ஹோட்டல்களில்தான் சாப்பிடுவார். கூட்டம் நடக்கும் நாட்களில் அவரை அங்கு அழைத்துக் கொண்டு போவார்கள். நாங்களும் அவர் கூடவே போவோம். அவர் உள்ளே போய்ச் சாப்பிடுவார். நாங்கள் இருபது இருபத்தைந்து பேர் வெளியில் காத்துக்கொண்டு நிற்போம். அவருடன் கூட இருக்கும் சின்னப் பையன் வந்து செல்லமாகச் சொல்லுவான், ‘அவர் ஒவ்வொரு ஐட்டமாகக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டு முடிப்பதற்குள் ஒரு மணி நேரம் ஆகுமே. நீங்கள் வேண்டுமானால் மைதானத்துக்குப் போய்க்கொள்ளலாமே’ என்பான். அது உண்மைதான். அவர் சாப்பிட்டு முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். அப்படி அதிகமாகச் சாப்பிட்டது பின்னாளில் அவருக்கு நீரழிவு நோய் வரக் காரணமாக இருந்திருக்கலாம்.
Top |


