Suraa முகப்பு | தொடர்புக்கு | Font Problems?
Sundaramsamy.com

Ninaivodai

சி. சு. செல்லப்பா பக்கம் 1 2 3 4

சிறு பத்திரிகை நடத்தும் பலருக்கு அரசாங்கத்திலிருந்து என்னென்ன சலுகைகள் தரப்பட்டுள்ளன என்பது தெரியாது. ரொம்பப் பணத்தைச் சிறுபத்திரிகைக்காரர்கள் வீணாக்கியிருக்கிறார்கள். பெருந்தொகையாக இருக்காது. ஏனெனில் முதலீடே ஆயிரம் இரண்டாயிரம் என்றுதானே இருக்கும். அதனால் பெருந்தொகை நஷ்டம் இருக்காது. ஆனால் கண்டபடி ஸ்டாம்ப் ஒட்டுவார்கள். இரண்டு பைசா செலவு பண்ண வேண்டிய இடத்தில் இரண்டு ரூபாய் செலவு பண்ணுவார்கள். இப்போது கையெழுத்துப் பிரதிகளை கவரில் போட்டு கொரியரில் அனுப்பி வைக்கிறார்கள். அதற்கான அவசியமே கிடையாது. ஒரு நாள் முன்னதாக வந்து சேர்கிறது என்பது என்னவோ உண்மைதான். செல்லப்பா புக் போஸ்டில்தான் அனுப்புவார். எனக்கு அனுப்பின எல்லாக் கடிதங்களும் போஸ்ட் கார்டில் அனுப்பினவை தான். இன்லெண்ட், கவரை உபயோகப்படுத்தினதே கிடையாது. யாருக்கு எழுதினாலும் போஸ்ட் கார்டில்தான் எழுதுவார். இது மாதிரி எல்லா விஷயத்திலும் சிக்கனப்படுத்திக் காரியங்களைச் செய்து வந்தார். இப்போது நம்மிடம் அந்தப் பழக்கமே இல்லை. போய்விட்டது. அதன் பிறகு எழுத்து பத்திரிகை காலாண்டிதழானது. பின் நின்றும் போனது.

செல்லப்பா சுத்தமாகப் பிழை திருத்துவார். ஒரு சிறிய பிழை இருந்தால்கூட வருத்தப்படுவார். ஒரு பைசாகூட வீணாக்கக் கூடாது என்று கணக்குப் பார்ப்பவர் ஒரு தடவை ஒரு மோசமான பிழை வந்துவிட்டது என்பதற்காக ஒரு பக்கத்தையே அழிக்கச் சொல்லிவிட்டார். அச்சடிப்பவர்கள், ‘வேண்டாம். அதெல்லாம் பெரிய விஷயமே அல்ல. எவ்வளவோ பிழைகளுடன் அச்சடிக்கப்படுகின்றன. உங்களுக்குத் திருப்பி அடிப்பதால் ரூ 13.50 நஷ்டம் ஏற்படும்’ என்றெல்லாம் சொன்னார்கள். அதெல்லாம் பெரிய விஷயமில்லை. நீ அழித்துத் திருப்பி அச்சடி என்று சொல்லிவிட்டார். அது மாதிரியான பிழைகளை எல்லாம் கௌரவப் பிரச்சினையாகப் பார்ப்பார் அவர். அவரது கடைசி நாவல் - எத்தனை பக்கங்கள்? ஆயிரத்துக்கு மேல் இருந்திருக்குமே - அது மாதிரி அவரிடம் பல நாவல்கள் இருந்தன என்று சொன்னார்கள். அவரது வயதுக்குக் கொஞ்ச நேரம் குனிந்து உட்கார்ந்து எழுதுவதே கஷ்டமான காரியம். ஒரு எழுத்தாளனுக்கு வேண்டிய எந்த வசதியும் அவருக்குக் கிடையாது. ஒரு மின்விசிறியை வைத்துக்கொள்வது, ஒரு நல்ல விளக்கைப் போட்டுக்கொண்டு எழுதுவது, நல்ல உணவைச் சாப்பிடுவது, மதியம் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்வது என ஒரு வசதியும் அவருக்குக் கிடையாது. ஒரே பைத்தியம். எழுத வேண்டுமென்ற வெறி. அவ்வளவுதான். இதெல்லாம் மிகப் பெரிய குணங்கள். எழுதியவற்றின் தரம் எப்படி இருக்கிறது என்பது இரண்டாம் பட்சமான காரியம்தான்.

அதுபோல் அவர் செய்திருக்கும் மொழிபெயர்ப்புகள். அதைப் படித்துப் பார்த்தால் அவை ரொம்பவும் கரடுமுரடாக இருக்கும். அவருக்கு மொழிபெயர்ப்பை எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் திட்டமான ஒரு யோசனை இருக்கிறது. மூல மொழியின் நெளிவு சுளிவுகள், அந்தச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சரியான சொற்களைக் கண்டுபிடித்துப் போடுவார். பிற மொழியின் நுட்பங்களை அப்படியே தமிழுக்குக் கொண்டுவர முனைவார். மொழிபெயர்ப்பு வழவழவென்று இருக்க வேண்டும் என்பதற்காக மூல மொழியின் அர்த்தங்களை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்கக் கூடாது. இதுமாதிரியான தீர்மானங்களைக் கொண்டு பல நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். சில சமயங்களில் அந்த மொழிபெயர்ப்புகளை வாசித்துக் காட்டுவார். ‘சார், கரடுமுரடா இருக்கே’ என்று நான் சொன்னால் எனக்கு மொழிபெயர்ப்பதற்கு என்று ஒரு கொள்கை இருக்கிறது. கடைசி வரையிலும் அதன்படிதான் நான் மொழிபெயர்ப்பேன். அப்படிச் செய்வதன் மூலம்தான் ஒரு மொழியை வளர்க்க முடியும். தழுவி எழுதியோ சரளமாகப் படிக்கும்படி மொழிபெயர்ப்பதினாலோ ஒரு மொழியை வளர்க்க முடியாது. தமிழைப் பல தளங்களுக்குக் கொண்டுபோக வேண்டியிருக்கிறது என்பார். அது எனக்கு விவேகமான பார்வை என்றுதான் தோன்றியது. ஒரு பாராவை மொழிபெயர்த்துவிட்டு ஆங்கில மூலத்தில் பாரா எவ்வளவு அங்குலம் இருக்கிறது, மொழிபெயர்ப்பு எவ்வளவு அங்குலம் கூடுதலாகயிருக்கிறது என்று ஸ்கேலால் அளந்து பார்ப்பார். அதிலிருந்து அவர் கண்டுபிடித்தது என்னவென்றால் ஆங்கில பாரா ஆறு அங்குலம் இருந்தது என்றால் தமிழ் பாரா ஒன்பது அங்குலம் ஆகிவிடும் என்பதுதான். இதே கணக்குதான் என்று நான் சொல்லவில்லை. இதைப் போன்ற ஒரு கணக்கு.

நான் செல்லப்பாபோல் மொழிபெயர்க்கவில்லை. அதுபோல் மொழிபெயர்க்க முடியாமல் போய்விடுகிறது. வாசகர்களுக்குப் புரியாமல் போய்விடுமோ என்ற கவலை வந்துசேர்ந்துவிடுகிறது. எனவே அதைச் செம்மைப்படுத்த முயற்சி செய்கிறேன். அதே சமயம் ரொம்பவும் செம்மைப்படுத்தவும் மாட்டேன். இதே நம்பிக்கை க. நா. சுவுக்கும் உண்டு. ராமலிங்கம் பிள்ளை என்று ஒருவர் தகழியின் ‘ரெண்டிடங்கழி’யை மொழிபெயர்த்திருக்கிறார். அதே காலகட்டத்தில் ‘செம்மீனை’ நான் மொழிபெயர்த்திருந்தேன். ராமலிங்கம்பிள்ளையின் மொழிபெயர்ப்பைப் பார்த்தால் அது மலையாள மொழியா, தமிழ் மொழியா என்ற சந்தேகம் உருவாகிவிடும். ஆனால் அவர் ரொம்பப் பெரிய படிப்பாளி. அவர் உருவாக்கின அகராதிகள், ஆங்கிலம் -ஆங்கிலம் - மலையாளம், கேரளாவில் லட்சக்கணக்காக விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன. க. நா. சு. ‘இலக்கிய வட்டம்’ இதழில் இந்த இரு மொழிபெயர்ப்புகளையும் மதிப்புரை செய்திருந்தார். அதில் ராமலிங்கம் பிள்ளையின் மொழிபெயர்ப்பு முக்கியமானது, என்னுடைய மொழிபெயர்ப்பு இரண்டாம்பட்சமானது என்று சொல்லியிருந்தார். அவருக்கும் செல்லப்பாவுக்கும் இருக்கும் பொதுவான கருத்து இது என்று நான் தெரிந்து கொண்டேன். க. நா. சுவுக்கும் செல்லப்பாவுக்கும் மூலத்தைச் சார்ந்து அதற்கு நெருக்கமாக உருவாக்கப்படும் மொழிபெயர்ப்பு தான் தமிழை வளர்க்கப் பயன்படும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் செல்லப்பாதான் அதை நடைமுறையில் கடைப்பிடித்தார். க. நா. சு. தான் மொழிபெயர்த்த எல்லாப் புத்தகங்களிலும் குறிப்பிட்ட கோட்பாட்டை, அதாவது மூலத்தை நெருங்க முயற்சி செய்வதன் மூலம் தமிழ் மொழிபெயர்ப்பு சிக்கலாக இருந்தாலும் அப்படித்தான் செய்ய வேண்டும் என்று கோட்பாட்டைக் கடைப்பிடிக்கவேயில்லை. மதிப்புரையில்தான் அந்தக் கோட்பாட்டைக் குறிப்பிட்டிருந்தாரே தவிர, நடைமுறையில் அவர் அதைப் பின்பற்றவில்லை. அவர் மொழிபெயர்த்த நாவல்களை, சிறுகதைகளைச் சரளமாகப் படிக்கும்படிதான் மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பதில் செல்லப்பாவுக்கு அவரது நம்பிக்கைக்கும் செயல்பாடுகளுக்கும் இடையில் ஒரு முரண்பாடு இல்லை. க. நா. சுவுக்கு அவை இரண்டுக்கும் இடையில் ஒரு முரண்பாடு இருக்கிறது.
(தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்)

 
Top

 


Powered By Minveli © sundararamaswamy.com All Rights Reserved