| சி. சு. செல்லப்பா | பக்கம் 1 2 3 4 |
பின்னால் பல பரிசுகளை அவர் வாங்க மறுத்தார். எதையெல்லாம் மறுத்தார் என்பது சரியாக ஞாபகமில்லை. தஞ்சாவூர் பல்கலைக்கழகத்திலிருந்து பரிசுத்தொகை தந்தபோது அதை மறுத்துவிட்டார். அமெரிக்கத் தமிழர்கள் ‘விளக்கு’ பரிசு தந்த போதுகூட அதை அவர் மறுத்துவிடுவாரோ என்று அவர்கள் பயந்தார்கள். அதுபோலவே அவரும் பரிசுப் பணமாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். என் புத்தகங்களை வேண்டுமானால் வெளியிடுங்கள் என்றார். அதனால் புத்தகத்தை அச்சேற்ற உதவினார்கள். ஒரு ஆள் நமக்குப் பணத்தைக் கொடுக்க முன் வருகிறார் என்றால் அதை ஏற்றுக்கொள்வதை அகௌரவமாக அவர் நினைத்தார்.
பத்திரிகை நடத்த ஆரம்பித்தபோது - ரொம்பப் பிரமாதமாக நடத்தினார் - முதலில் அவருக்கு விமர்சனத்தில் அவ்வளவு பழக்கம் கிடையாது. பெரிய பெரிய நூல் நிலையங்களுக்குப் போய், பணம் கொடுத்து சந்தாதாரராக ஆகிக்கொள்ளும் வசதிகள் எல்லாம் அவருக்கு இருக்கவில்லை. பிரிட்டிஷ் லைப்ரரி, அமெரிக்கன் லைப்ரரிகளில் அதிகச் செலவு இல்லாமல் புத்தகங்களை எடுத்துக்கொள்ள முடியும். அந்த நூல் நிலையத்தைக் கவர்ச்சிகரமாக அவர்கள் நடத்திக்கொண்டிருந்த காலத்தில் அந்த இரண்டு நூல் நிலையத்துக்கும் மாறி மாறிப் போய் விமர்சனம் சம்பந்தமான புத்தகங்களை ஒன்று விடாமல் படித்துவந்தார். நான் எப்போது போய்ப் பார்த்தாலும் விமர்சனம் சம்பந்தமான புத்தகங்கள்தான் அவர் கையில் இருக்கும். அந்தச் சமயத்தில் நாவலோ சிறுகதைகளோ அவர் படித்து நான் பார்த்ததில்லை. விமர்சனம் சம்பந்தமாக அவர் அப்படிப் படித்து வந்தவற்றின் பாதிப்பை எழுத்துவில் வெளிவந்த கட்டுரைகளில் பார்க்க முடிந்தது.
புதுக்கவிதை எழுதுபவர்களுக்கு மரபிலக்கணம் தெரியாது, அதனால்தான் அவர்கள் புதுக்கவிதை எழுதுகிறார்கள் என்று பலர் சொன்னார்கள். ரகுநாதன், அழகிரிசாமி, கைலாசபதி, நா. பார்த்தசாரதி எனப் பலரும் சொல்லியிருக்கிறார்கள். சென்னையில் ஒரு கூட்டம் நடந்தது. நான் அழகிரிசாமி எல்லாரும் அதில் கலந்துகொண்டோம். அன்று நான் புதுக்கவிதையை ஆதரித்துப் பேசினேன். அழகிரிசாமியும் நா. பாவும் புதுக்கவிதையை உரித்தெடுத்துவிட்டார்கள். அழகிரிசாமிக்கு அபாரமான நகைச்சுவை உணர்வு உண்டு. நா. பாவுக்குப் பழைய இலக்கியத்தில் நல்ல படிப்பு. சபையைப் பூராவும் வளைத்துக் கட்டிவிட்டார்கள். நான் முதன்முதலாகச் சென்னையில் பேசுகிறேன் என்பதினாலும் பல எழுத்தாளர்களை அதற்கு முன்பே சந்தித்திருந்தேன் என்பதினாலும் பல முக்கியமான எழுத்தாளர்கள் அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள். செல்லப்பா சொன்னார், நமக்கு யாப்பு படிப்பதில் என்ன பிரச்சினை வந்துவிடப்போகிறது. க. நா. சுவுக்கு யாப்பு படிக்கறது என்பது என்ன பெரிய பிரச்சினையா? என்னென்னவோ நாவல்கள், கதைகள் எல்லாம் படித்துவிட முடிகிறதே அவரால். அவராகவே வேண்டாம் என்று யாப்பைப் படிக்காமல் இருக்கிறார். இலக்கணம், யாப்பு என்பது ஏதோ கடினமான விஷயம் மாதிரியும் இவர்கள் மூளைக்குள் நுழைய முடியாது என்பதுபோலவும் சொல்லிக் கொண்டு வருகிறார்களே. அற்புதமான கதை, நாவல் எழுத முடிந்தவனுக்கு யாப்பு படிப்பதில் என்ன பிரச்சினை வந்து விடப்போகிறது என்று அவர் கோபித்துக்கொள்வார்.
அப்போது அவர் மனதில் ஒரு எண்ணம் உருவானது. அதாவது தமிழ் இலக்கணத்தில் எப்படியும் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று. அப்படியே ஆகவும் செய்தார். அதன் பின் கட்டுரைகளில் சவால் விட ஆரம்பித்தார். நா. பா. போன்றோரெல்லாம் சிறுவயதிலிருந்தே இலக்கணம் படித்துவந்திருந்தார்கள். செல்லப்பாவோ திடீரென்று புகுந்து படிக்க வேண்டியிருந்தது. ஆனால் படித்துவிட்டார். இலக்கணத்தைப் பேசி அவர்களால் பயமுறுத்த முடிவதைப் போல இவராலும் பேசிப் பயமுறுத்த முடியும் அளவுக்குப் படித்து முடித்துவிட்டார். அப்படி ஒரு குணம் அவரிடம் இருந்தது.
அதுபோல் அவரிடமிருந்த இன்னொரு முக்கியமான விஷயம் அவரைப் போல் ஒரு சிக்கனமான ஆளை நீங்கள் பார்க்கவே முடியாது. காந்தி ரொம்பச் சிக்கனம் என்று சொல்வார்கள். அந்த அளவுக்குச் சிக்கனமானவர் செல்லப்பா. ஒரு நயா பைசா கூடச் செலவழிக்காமல்தான் காரியங்களை முடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். இரண்டு பைசா செலவழிக்க வேண்டி வந்தால் ஒன்றரை பைசாவுக்குள் அதைச் செய்து முடிக்க முடியுமா என்று பேரம் பேசுவார். அவருக்கேற்ற மாதிரி அவர் மேல் ரொம்ப மரியாதை கொண்ட ஒரு அச்சக உரிமையாளர் அவருக்கு நண்பராக இருந்தார். புத்தகத்தை அடித்துக் கொடுத்து விடுவார். இவரால் எப்போது காசு தர முடிகிறதோ அப்போது தந்தால் போதும் என்று ஏற்பாடு. ஆனால் ஒரு நயா பைசா கூட ஏமாற்றமாட்டார் என்பது உரிமையாளருக்குத் தெரியும். வீட்டையோ வயலையோ விற்றாவது பாக்கியை அடைத்து விட்டுத்தான் செத்துப்போவார் என்ற நம்பிக்கை செல்லப்பா மேல் அவருக்கு இருந்தது. அதோடு அது போன்றதொரு சிறிய பத்திரிகையை அச்சடித்துத் தருவது என்பது அவருக்குப் பெரிய விஷயமே இல்லை.
அதன்பின் இதழைத் தைக்க வேண்டுமா, ‘பின்’ போட வேண்டுமா என்றொரு பெரிய பிரச்சினை எழுந்தது. பல ஆராய்ச்சிகள் செய்து தைப்பதுதான் ‘பின்’ போடுவதை விட 3 பைசாவோ என்னமோ லாபமாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து தைப்பது என்று முடிவெடுத்தார். அவரே தைப்பார். நான் பார்த்திருக்கிறேன். குழந்தைகள் பீடி சுற்றும் போது வேகவேகமாகச் சுற்றுவார்களே அது போல் கிடுகிடுவென வேகமாகத் தைப்பார். அதோடு அவர் மனைவிக்கும் தைக்கக் கற்றுக்கொடுத்திருந்தார். இருவரும் உட்கார்ந்து கிடுகிடுவெனத் தைப்பார்கள். கைப்பட முகவரி எழுதுவார்கள். பிறருக்குக் காசு கொடுப்பது என்பது காகிதத்துக்கும் ஸ்டாம்புக்கும் அச்சகத்துக்கும் மட்டும்தான். இதைத்தவிர ஒரு நயா பைசா செலவழிக்காமல் இருக்கப் பார்ப்பார்.
அப்புறம் இன்னொரு நாள் ஒரு விஷயம் நடந்தது. ப்ரௌன் பேப்பர் சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட அளவில் வருகிறது. பல ஆராய்ச்சிகள் செய்துதான் அந்தப் பேப்பரைக் கண்டுபிடித்திருந்தார். விலை குறைவாக இருக்கிறது. முழு முகவரியையும் எழுத முடிகிறது. குறிப்பிட்ட நபருக்குச் சரியாகப் போய்ச்
சேர்ந்துவிடும். பேப்பர் இங்க் ஊறாமல் இருக்கிறது என்பது போன்ற பல விஷயங்களை மூளைக்குள் போட்டு அலசி ஆராய்ந்துதான் அந்த ப்ரௌன் தாளையே தேர்ந்தெடுத்திருந்தார். பத்திரிகை சின்னதுதானே. அதற்குத் தகுந்தாற்போல் இந்த ப்ரௌன் பேப்பரை வெட்டி மடித்து ஒரு கவர் அவரே தயாரித்தார். வெளிநாட்டுக்கெல்லாம் கவரில்தானே அனுப்ப வேண்டியிருந்தது. குறிப்பிட்ட ப்ரௌன் பேப்பரில் மூன்று கவர்கள் தயாரிக்க முடிந்திருந்தது. ஏதோ ஒரு நிமிடத்தில் தூங்கிக்கொண்டிருக்கும்போதோ எப்போதோ அவருக்கு ஒரு யோசனை தோன்றியிருக்கிறது. அதாவது மூன்று கவர் தயாரிக்கும் பேப்பரில் அளவை மாற்றி இப்படித் திருப்பி அப்படித் திருப்பி வைத்தால் நான்கு கவர்கள் தயாரித்துவிட முடியும் என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. ஏற்கெனவே மடித்து ஒட்டும் பகுதி என்பது ஒரு சென்டி மீட்டர் அளவுக்குத்தான் இருந்தது. அதை மடித்து ஒட்ட அவரால் மட்டுமே முடியும். இந்நிலையில் தொடர்ந்து பல தடவைகள் முயன்று பார்த்து நாலு கவர்களாக ஆக்கிவிட்டார். அவருக்கு ரொம்பச் சந்தோஷம். மிகப் பெரிய வெற்றி அது.
இதெல்லாம் ஒரு பத்திரிகை ஆசிரியர் சாதாரணமாகச் செய்யவே முடியாத ஒரு காரியம். இப்படிச் செய்தால்தான் காரியம் சிறப்பாக நடக்கும். அதிகப்பணம் வந்தாலோ, சிக்கனமின்றிச் செய்தாலோ பத்திரிகை நடத்தவே முடியாது என்று அவர் திடமாக நம்பினார். எனக்கு அந்த விஷயத்தில் அப்போது அவ்வளவு மரியாதை இருக்கவில்லை. ஆனால் வயதாக ஆக அதன் முக்கியத்துவம் தெரியவருகிறது. இப்போது அவருடைய எதிர்மறையான விஷயங்கள் மறைந்து போய் அவருடைய சாதகமான அம்சங்கள் என் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருக்கின்றன.


