| சி. சு. செல்லப்பா | பக்கம் 1 2 3 4 |
பின்னால் பல வருடங்கள் கழித்து பத்துப் பதினைந்து நாட்கள் என் வீட்டில் வந்து அவர் தங்கியிருக்கிறார். புத்தக வியாபாரம் நடக்கும் சமயத்தில். அப்போது என் மனைவியிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பார். என் குழந்தைகள் எல்லாரும் நன்கு வளர்ந்துவிட்டிருந்தார்கள். அவர்களுடன் நிறைய பொழுதைப் போக்குவார். தைலா என்று நினைக்கிறேன் - அவர் புஸ்தகம் விற்கப் போனபோது ஒரு தடவை அவளும் கூடவே புறப்பட்டுப் போய்விட்டாள். சாயங்காலம்தான் திரும்பிவந்தாள். ரொம்ப மரியாதையோடு நானும் கமலாவும் அவரைக் கவனித்து எல்லாம் செய்தோம். அப்போது சண்டை சச்சரவு எதுவும் கிடையாது என்பது மட்டுமல்ல, ஒரு அர்த்தத்தில் மிகுந்த நெருக்கமும் ஏற்பட்டிருந்தது.
என்னுடன் தங்கியிருந்தபோது அவருக்கு எங்கள் குடும்பத்தோடு மிகவும் நெருக்கம் ஏற்பட்டது. நான் எனக்குத் தெரிந்த கல்லூரிப் பேராசிரியர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருடைய புத்தக விற்பனைக்கு என்னால் இயன்ற காரியங்களைச் செய்தேன். தமிழ்த்துறையில் பயிலும் மாணவர்கள் மத்தியில் அவரைப் பேச வைக்க வேண்டும் என்று பல கல்லூரிப் பேராசிரியர்களிடம் கேட்டுக்கொண்டேன். எனக்கு நிறையப் பேராசிரியர்கள் நண்பர்களாக இருந்தது எனக்கே சந்தோஷத்தைத் தந்த சமயம் அது. வையாபுரிப்பிள்ளை, ஜேசுதாசன் என்று அந்தக் காலத்திலிருந்தே எனக்குப் பேராசிரியர்களுடன் ஒரு தொடர்பு இருந்துவந்திருக்கிறது. பேராசிரியர்களிடம் தொடர்புகொண்டு பேசியிருப்பதையெல்லாம் செல்லப்பாவிடம் நான் வேண்டுமென்றே சொல்லவில்லை. என்ன காரியம் நிறைவேறும், எது நிறைவேறாது என்பது எனக்குத் தெரியாது. அவர்களுக்குப் பல யோசனைகள் இருக்கும். செல்லப்பா பற்றி மனதுக்குள் என்ன நினைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.
பொதுவாக எல்லாக் கல்லூரிகளிலும் அவரைக் கௌரவமாகத்தான் நடத்தினார்கள். ஆனால் எந்தெந்தக் கல்லூரிக்கு நான் சொல்லிப் போனாரோ, அந்தக் கல்லூரிகளில் அவருக்கு விசேஷ கவனம் கிடைத்தது. அவர் எதிர்பார்த்தபடி புத்தகங்களை அவர்கள் வாங்கவில்லை என்ற குறை இருந்ததே தவிர, மற்றபடி அவருக்கு மனநிறைவாகத்தான் இருந்தது. அவர் பேசாத கல்லூரியே கிடையாது என்று சொல்லுமளவுக்குப் பேசினார். தமிழ்த் துறையில் எம். ஏ. படிக்கும் மாணவர்களுக்குப் புதுக்கவிதை பற்றி, சிறுகதை பற்றி, தமிழ் இலக்கியம் பற்றித் தெரிந்துகொள்ள இப்போது உயிருடன் இருக்கக்கூடியவர்களில் மிகப்பெரிய அதாரிட்டி செல்லப்பாதான் என்று என்னிடம் பல பேராசிரியர்கள் சொன்னார்கள். அவர் மூலம் நேரடியாகவே இந்த விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்று எல்லாப் பேராசிரியர்களும் அவரைப்பற்றி உயர்வாகச் சொன்னார்கள்.
செல்லப்பா இங்கிருந்தபோது நாங்கள் எவ்வளவு நெருக்க மானோம் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். அவர் என்னிடம், ‘ராமசாமி, நான் ஒரு யோசனை சொல்கிறேன். அதுபற்றி இப்போதே ஒன்றும் முடிவு எடுக்க வேண்டாம். யோசித்துப் பாரு. நான் உன்னை வற்புறுத்துவதாக நினைத்துக் கொள்ளவேண்டாம். நானும் நீயும் சேர்ந்து ஒரு பத்திரிகை நடத்தலாமா? நீ இங்கிருக்கிறாய், நான் சென்னையில் இருக்கிறேனே என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். எனக்கு எழுதுவதற்கு ஒரு பத்திரிகை இல்லை. உனக்கும் எழுதறதுக்கு ஒரு பத்திரிகை இல்லை. உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை நீ எழுதிக்கொள்ளலாம். எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை நான் எழுதிக்கொள்கிறேன். க. நா. சு. வேண்டுமானால் கூட எழுதட்டும்’ என்றார். க. நா. சு. வேண்டுமானால்கூட எழுதிக்கொள்ளலாம் என்று சொன்னால் உலகத்தில் யார் வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம் என்று சொன்னதாக எண்ணம் அவருக்கு. ‘இன்னொன்று, இந்தப் பத்திரிகைக்கு பொறுப்பு எடுத்துக் கொண்டால் உனக்கு ரொம்பப் பணம் செலவழிந்தது என்றெல்லாம் வரவே வராது. உன்னிடம் பணம் இருப்பதால் நீ கொஞ்சம் அதிகமாகப் போட வேண்டியிருக்கும். சந்தா சேர்ப்பதில், வெளியில் அந்தப் பத்திரிகைக்கு நல்ல பெயர் சேர்ப்பதில் எல்லாம் நான் பெரிய பங்கு வகிக்க முடியும்’ என்றார். ‘சார், நமக்குள்ளே ஒத்துப் போகணுமே; அது பெரிய பிரச்சினை இல்லையா’ என்றேன். அதுக்கு அவர் நாம போட்டுக் கொண்ட சண்டையெல்லாம் சண்டையே இல்லை. வீட்டில் அண்ணா தம்பி போட்டுக்கொள்ளும் சண்டை மாதிரிதான். அது ஒண்ணும் சீரியசான சண்டை இல்லை. பெண்டாட்டிகூட எவ்வளவு சண்டை போட்டிருக்கிறேன். அதுக்காக அவள் என் பெண்டாட்டி இல்லை என்றாகி விடுமா? சொத்தை வேறு யாருக்காவது எழுதிவைத்துவிட்டுப் போய்விடுவேனா என்ன? என் அம்மாவிடம் எவ்வளவு சண்டை போட்டிருக்கிறேன். அது மாதிரிதான் நாம் போட்டுக்கொண்ட சண்டையும்’ என்று சொன்னார். ‘சரி யோசித்துப் பார்க்கிறேன்’ என்றேன். பின் புறப்பட்டுப் போய்விட்டார். அவர் மனதுக்குள் நான் இந்தப் பத்திரிகையை ஆரம்பிக்கமாட்டேன் என்பது தெரிந்திருந்தது. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் அந்த அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டிருந்தது எங்களிடையே. அது ஒரு முக்கியமான விஷயம்தான்.
பழைய விஷயங்களை எல்லாம் விட்டுவிட்டுப் புதிதாக ஒன்றை ஆரம்பிக்கும் ஆவேசம் அவரிடம் இருந்தது. இன்னொரு முக்கியமான விஷயம் அவர் ரொம்பச் சுறுசுறுப்பானவர். ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க முடியாது அவரால். க. நா. சுவெல்லாம் ரொம்ப வசதி இருந்தால் நாற்காலியை விட்டு எழுந்திருக்கவே மாட்டார். இப்போதும் நாற்காலியில் உட்கார்ந்து படித்துக் கொண்டேதான் இருந்தார். உட்கார்ந்து உட்கார்ந்து படித்து வந்ததால் அவரது முதுகு வளைந்துவிட்டிருந்தது. தலையை நிமிர்த்தவே மாட்டார். ரோட்டில் நடக்கும்போதுகூட அப்படித் தான் நடப்பார். உத்தமமான ஆண்கள் பெண்களின் பாதங்களை மட்டும்தான் பார்ப்பார்கள் என்று சொல்லுவார்களே, அது போல் இவரும் பெண்களின் பாதங்களையும் ஆண்களின் பாதங்களையும் மட்டுமே பார்த்ததுபோல்தான் இருப்பார். ஏன் சார் இப்படி நடக்கிறீர்கள் என்று கேட்டால், ‘உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டே இருக்கிறேன் இல்லையா அதனால்தான்’ என்பார். நாற்காலியில் உட்கார்ந்து குனிந்தபடியே படித்ததால் அப்படி ஆகியிருக்கிறது என்றால் நீங்களே யோசித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். அவருக்கு வசதியாகச் சாய்ந்து கொண்டு படிப்பதற்கு ஏற்ற நாற்காலி இருக்கவில்லை.
செல்லப்பா ஏவிவிட்ட ஒரு பூதம் மாதிரிதான். எங்கிருந்து இவ்வளவு சக்தி வருகிறது, யார் இயக்குகிறார்கள் என்று கண்டுபிடிக்கவே முடியாது. அவர் சாப்பாடெல்லாம் ரொம்பச் சாதாரணமானதுதான். சத்தான உணவு என்கிறார்களே, அவர் சத்தான உணவு சாப்பிட்டு நான் பார்த்ததே கிடையாது. அவரது பொருளாதாரம் அப்படித்தான் இருந்தது. ஆனால் அதற்குள் இருந்தே எப்படி இவ்வளவு பலத்தை அவர் திரட்டிக் கொண்டார் என்பதெல்லாம் ஆச்சரியமான விஷயம். சென்னைக்கு யார் வந்தாலும் சரி அவருக்கு அந்த நபருடன் பழக்கம் இருந்திருக்குமென்றால் அந்த நபரை அவரே போய்ப் பார்த்து விடுவார். நான் ஒரு தடவை தி. நகரில் என் அக்கா வீட்டுக்குப் போயிருந்தேன். என் அக்காவுக்கு டைபாய்டு ஜுரம் வந்து ரொம்ப மோசமான நிலையில் இருந்தாள். யாரோ செல்லப்பாவிடம், ‘ராமசாமி வந்திருக்கிறார். அக்கா வீட்டில் தங்கியிருக்கிறார்’ என்ற விஷயத்தைச் சொல்லிவிட்டிருக்கிறார்கள். நேராக வீட்டிற்கு வந்துவிட்டார். எனக்கு ரொம்பக் கூச்சமாக ஆகிவிட்டது. வந்ததும் அக்காவுக்கு உடம்புக்கு எப்படி இருக்கிறது என்று கேட்டார். போய்ப் பார்க்கலாமா என்றார். தாராளமாகப் போய்ப் பாருங்கள் என்றேன். அவளிடம் போய் உடம்புக்கு என்ன என்று கேட்டார். வீட்டில் கேன்வாஸ் போட்ட ஈஸி சேர் இருந்தது. அதில் படுத்துக்கொண்டார். சத்தமாகப் பேச ஆரம்பித்தார். இதெல்லாம் க. நா. சுவுக்குத் தெரியவே தெரியாது. க. நா. சு. ஒரு வீட்டுக்கு வந்தால் அந்த வீட்டில் நடக்கும் ஒரு விஷயமும் அவருக்குத் தெரியாது. என் அப்பா பற்றி என்னிடம் எதுவுமே அவர் கேட்டது கிடையாது.
அவர் பல பெரிய பத்திரிகைகளில் பணிபுரிந்துவந்திருக்கிறார். தினமணி கதிரில் உதவி ஆசிரியராக இருந்திருக்கிறார். அப்போது துமிலன் எடிட்டராக இருந்தார். அப்போது செல்லப் பாவுக்கு க. நா. சுவுடன் நெருக்கமான நட்பு இருந்ததால் கிட்டத்தட்ட க. நா. சுவின் பல கதைகள் கதிரில் வெளியாயின. வாராவாரம் வெளியானது. அந்தக் கதைகளில் ஒன்றுகூட தமிழ்ச் சிறுகதையாக வாசகர்களுக்குத் தோன்றவே செய்யாது.
வில்லியம் பாக்னரின் கதை ஒன்றை மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார் செல்லப்பா. இரண்டு வாரமாக வந்திருந்தது. அது மாதிரி செல்லப்பா பல விஷயங்கள் செய்திருக்கிறார். க. நா. சு. ஆரம்பித்த இரண்டு பத்திரிகைகளிலும் செல்லப்பா முக்கியப் பங்கு
வகித்திருக்கிறார். க. நா. சுவுக்கு ப்ருஃப் பார்க்கவே தெரியாது. ப்ருஃப் பார்த்தால் ஒரிஜினலில் இருப்பதை விட பிழைகள் கூடுதலாகிவிடும். அவரால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் செல்லப்பா அழகாகப் பிழை திருத்துவார். எழுத்து நடத்தியபின் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு விஷயங்கள் கற்றுக்கொள்பவராக இருந்தார். முதலில் 25 இதழோ 30 இதழோதான் நடத்துவேன். அதன்பின் இதழை நிறுத்திவிடுவேன் என்றுதான் சொல்லியிருந்தார். ஆனால் அதுபாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தது.பெரிய அளவில் சந்தா இல்லா விட்டாலும் சமூகத்தில் அத்தகைய முயற்சிகளின் பேரில் ஆர்வம் உள்ள ஆட்கள் நிறைய பேர் உருவாகியிருந்தார்கள். தொடர்ந்து நடத்தியாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. முதலில் அந்தப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபோது அவர் கையில் ஒரு நயா பைசாகூடக் கிடையாது. அவர் மனைவியின் நகைகளை அடகு வைத்துப் பத்திரிகையைத் தொடங்கினார். அவரது மனைவிக்கு உள்ளூர வருத்தம். ஏதோ கொஞ்சம் நகைகள்தான் இருந்தன. அதையும் வாங்கிக்கொண்டு போய்விட்டார் என்று. அவர் வெளியே கொண்டுபோன சாமான்கள் திரும்பி வீட்டுக்கு வந்ததாகச் சரித்திரமே கிடையாது. ‘சார் இப்படிச் செய்யணுமா. நகைகளை அடகு வைத்து பத்திரிகை நடத்த வேண்டுமா’ என்று கேட்டதற்கு, ‘அடகுதானே வைச்சிருக்கேன். பணத்தைக் கொடுத்து மீட்டுவிடலாமே’ என்பார். ‘அப்படி முடியலைன்னா நகை கையை விட்டுப் போயிடுமே’ என்றேன். அதுக்கு அவர், ‘இந்த எழுத்து இருக்கிறதில்லையா அது தொடர்ந்து நடந்தாக வேண்டும். நீ அதுக்கு வேணா ஒரு வழி சொல்லேன். நீ இப்போ ஒரு ஐயாயிரம் ரூபாய் தாயேன். அந்த நகைகளை மீட்டு அவளிடம் தந்துவிடுகிறேன்’ என்றார். ஆனால் ஒரு விஷயம். நான் ரூபாய் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ள மாட்டார். அநியாயமான சுயகௌரவம் அவருக்கு உண்டு. நாம் வறுமையில் வாடிச் செத்துப்போனாலும் போகலாம்; அடுத்தவரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பதில் அபாரமான வைராக்கியம் அவருக்கு இருந்தது.


