| சி. சு. செல்லப்பா | பக்கம் 1 2 3 4 |
நான் சென்னைக்குப் போன சமயங்களில் ஒரு தடவை கூட
செல்லப்பாவைச் சந்திக்காமல் வந்தது கிடையாது. என்ன தான் இருந்தாலும் அவரைப் போய்ப் பார்த்துவிடுவேன். நிறைய நேரம் அவருடன் இருப்பேன். அவரது வீட்டுக்குப் போனதும் முதல் கேள்வி, ‘என்னிக்கு வந்தாய்?’ என்பதுதான்.
‘முந்தா நாள் வந்தேன்’ என்பேன் நான்.
‘க. நா. சுவைப் பார்த்தாச்சில்லையா’ என்பார் உடனே. இவர் மட்டுமல்ல பலருக்கும் இந்த வியாதி உண்டு. என் மனதில் தான் முக்கியமா, க. நா. சு. முக்கியமா என்பது அவருக்கு முக்கியப் பிரச்சினை.
‘நேத்திக்கு முழுக்க க. நா. சு. கூடத்தான் இருந்தேன்’ என்பேன்.
‘இன்னிக்கு என்ன அவர் ஊரில் இல்லையோ’ என்பார் செல்லப்பா.
‘இல்லை. இங்கேதான் இருக்கிறார். நான் உங்களைப் பார்க்க வேண்டும் என்று வந்தேன்’ என்பேன்.
இந்தக் கேள்விகளை அவர் கேட்காமல் இருந்ததே கிடையாது. இதெல்லாம் எங்கள் குடும்பத்தில் முதியவர்கள் கேட்டுக் கொள்கிற கேள்வி மாதிரி இருந்தது. ஒரு தடவைகூட க. நா. சு. இப்படிக் கேட்டதே கிடையாது. செல்லப்பாவின் கதைகள், செல்லப்பாவின் இலக்கியப் பார்வை, இலக்கிய விமர்சனம் பற்றி என் அண்ணாவின் வீட்டில் வைத்து இருவரும் பேசிக் கொள்ளுவார்கள். எழுத்து பத்திரிகைக்குள்ளேயே வாசகர்களுக்குத் தெரியும் விதமாகவே அவர்கள் இருவருக்கும் இடைவெளி ஏற்பட்டுவிட்டிருந்தது. க. நா. சு. உணர்ச்சிவசப்படும்போது ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்துவிடுவார். செல்லப்பாவுக்கு அதைவிட சத்தமாகத் தமிழில் கத்த முடியும். ஒரு தடவை க. நா. சு. சொன்னார், ‘எவ்வளவு சொன்னாலும் உனக்கு நான் சொல்வது புரியாது. புரியாவிட்டாலும் பரவாயில்லை. உன் னோட வழி உனக்கு. என்னோட வழி எனக்கு. உலகம் பூராவும் இப்படித்தான் இருக்கிறது. நீ உன் வழியில் என்னை இழுக்க முயற்சி செய்யாதே. நான் உன்னை என் வழிக்குக் கொண்டுவர முயற்சி செய்யவில்லை’ என்று சொல்லிவிட்டார். அவர் அப்படி விவாதத்தை முடித்தது செல்லப்பாவுக்குப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது. அப்படி அந்த வாசலை அடைத்துவிட்டால் மேற்கொண்டு சண்டையே போட்டுக் கொள்ள முடியாதே.
செல்லப்பாவுக்கும் க. நா. சுவுக்கும் இடையேயான உறவு நீடித்த காலப் பழக்கம் கொண்டது. சந்தர்ப்பச் சூழலில் அதில் ஒரு முடிச்சும் திருகலும் விழுந்துவிட்டது. இளம் எழுத்தாளர்களில் யார் யாருக்குக் க. நா. சுவைவிட தன்னிடம் விசுவாசம் இருக்கிறது என்பதைச் செல்லப்பா ஆராய்ந்துகொண்டேயிருந்தது எனக்கு உறுத்தலாக இருந்தது. சென்னையில் என் சுதந்திரம் பாதிக்கப்படுவது உறுத்தலாக இருந்தது. அதிக அளவு இந்த விசாரம் இல்லாமலே க. நா. சு. இருந்தார். சிலருக்கு நட்பைவிட விசுவாசம்தான் அதிகம் தேவைப்படுகிறது. செல்லப்பா மதுரைப் பக்கத்தைச் சேர்ந்தவர். க. நா. சுவோ தஞ்சாவூரைச் சேர்ந்தவர். மதுரைப் பக்கத்தில் பழமையை உதறிக்கொண்டு வந்தவர்கள் நிறையபேர்கள் இருக்கிறார்கள். தஞ்சாவூர் பக்கம் அந்த அளவுக்குக் கிடையாது. சங்கீதம், கலைகள் என்று பேசிக் கொண்டு ஜாதி அடையாளங்களைக் கொச்சையாகக் கொண்டாடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். க. நா. சு. அந்தப் பின்னணியிலிருந்துதான் வந்திருந்தார். ஆனால் பார்ப்பதற்கு செல்லப்பா தஞ்சாவூரிலிருந்து வந்தவர் போலவும் க. நா. சு. பம்பாயிலோ டெல்லியிலோ இருந்தவர்போலவும் தோன்றிக் கொண்டிருந்தது. தன் மேல் விமர்சனங்கள் உருவாகி வருவதற்குக் காரணம் க. நா. சுதான் என்று செல்லப்பா நம்பினார். க. நா. சு வுக்குச் செல்லப்பாவின் விமர்சனத்தில் நம்பிக்கையில்லை. சிறுகதை எழுத்தாளராகவும் அவரைப் பின்வரிசைக்குத் தள்ளி யிருந்தார் க. நா. சு. இவையெல்லாம் செல்லப்பாவுக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்தன. ஆனால் க. நா. சுவின் சாதகமான மதிப்பீட்டைப் பெற அவர் சமரசமும் எடுத்துக்கொள்ளவில்லை. க. நா. சு. பக்கம் ஒருவன் போனால் அவன் தன் பக்கம் திரும்ப மாட்டான் என்ற பயம் அவருக்கு இருந்தது என்றே நினைக்கிறேன். அவருக்கு விசுவாசமாகவும் சிலர் இருந்தார்கள், க. நா. சு. பக்கம் போக மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொண்டு.
நான் க. நா. சுவுடன் பழகி வந்தது செல்லப்பாவுக்குச் சோர்வைத் தருவதாக ஆகியிருந்தது. அந்தச் சமயத்தில்தான் தருமு சிவராமு எழுத்து வில் எழுத ஆரம்பிக்கிறார். மிக முக்கியமான எழுத்தாளராக உருவாகக்கூடியவன் எழுத்து வில் தான் ஆரம்பத்தில் எழுதினான் என்பது அவருக்கு மிகுந்த மனநிறைவையும் பெருமையையும் தருவதாக இருந்தது. திரிகோணமலையில் இருந்த சிவராமு அவருடன் கடிதத் தொடர்பு வைத்துக்கொண்டார்.
எப்போது சென்னைக்கு வந்தாலும் தருமு சிவராமு செல்லப்பா வீட்டில்தான் தங்குவார். செல்லப்பா எல்லோரையும் எப்படியாவது தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்துவிடுவார். அவர் வீட்டில் சாப்பிடாத எழுத்தாளரே அவருடைய நண்பர்களில் இருக்கமாட்டார்கள். சென்னைக்கு யாராவது வந்தால் வீட்டுக்கு அழைத்துச் சென்று, இரண்டு மூன்று கறிகள் விதவிதமாகச் செய்து, திருப்தியாகச் சாப்பாடு போட்டுத்தான் அனுப்புவார். அந்த எழுத்தாளர் பம்பாயிலிருந்து வந்திருந்தாலும் சரி, மதுரையிலிருந்து வந்திருந்தாலும் சரி, அவர்களை நன்கு கவனித்துக் கொள்வார். ஏ. கே. ராமானுஜம் செல்லப்பா வீட்டில் உணவருந்தியிருக்கிறார். ரொம்ப வற்புறுத்திக் கூட்டிக்கொண்டு போனார். இந்த ஆட்களில் ஒருவரைக்கூட க. நா. சு. தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றதே கிடையாது. அப்படி ஒரு பழக்கமே அவரிடம் கிடையாது. ஏனென்றால் யாராவது வந்தால் காப்பி போட்டுக் கொடுக்க முடியும் என்பதற்கான உத்தரவாதம் அவருக்கு இல்லை.
ஒருநாள் செல்லப்பா என்னிடம், ‘சிவராமுவை எழுத்து பத்திரிகையின் வாரிசாக ஆக்கப் போகிறேன்’ என்றார்.
‘என்ன சார் இது, பத்திரிகைக்கு வாரிசு உண்டா? ஒரு ராஜ்ஜியம் இருந்தா மன்னர் இருப்பார். அவருக்கு வாரிசு வரும். ஒரு பத்திரிகைக்கு எப்படி வாரிசு வரும்’ என்றேன்.
‘அப்படியில்லை. அவன் மகா கெட்டிக்காரன். பெரிய மேதை. அவனைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளும் என்று எனக்குத் தோன்றவில்லை. தமிழ்நாடு அவனைப் புறக்கணிக்கக்கூடும். தமிழ்ச் சமூகம் கூர்மையான உணர்வுகள் கொண்ட சமூகம் அல்ல. எங்களையே ஏற்றுக்கொள்ளவில்லையே. அப்புறம் அவனை எங்கே ஏற்றுக்கொள்ளப்போகிறது. அவன் தொடர்ந்து எக்கச்சக்கமாக எழுதக்கூடியவன். எனக்கு பத்து பக்கத்துக்குக் கடுதாசி போடுவான். அதுக்கு நான் பதில் போடுவதற்கு முன்னாலயே பத்து பக்கத்துக்கு இன்னொரு கடுதாசி வந்து சேர்ந்துவிடும். அவன் சுதந்திரமாக எழுதுவதற்கு ஒரு பத்திரிகை வேண்டும்’ என்றார்.
‘சரி, வாரிசாகப் போடுவதென்றால் எப்படிப் போடுவீர்கள்’ என்றேன்.
‘என் உயிலில் எழுதுவேன். என் காலத்துக்குப் பின்னால் எழுத்து பத்திரிகை சிவராமுவுக்குத்தான் சொந்தமானது. அதனுடைய ஆசிரியர் அவன்தான். அதனுடைய லாபமும் நஷ்டமும் அவனை மட்டுமே சார்ந்தது. என் குடும்பத்தில் யாரும் தலையிடக் கூடாது என்று உயிலில் எழுதி வைப்பேன்’ என்றார்.
நான் கேட்டேன், ‘சார், இதெல்லாம் கொஞ்சம் யோசித்துச் செய்ய வேண்டிய விஷயம் இல்லையா? சிவராமுவின் சுபாவம் இதெல்லாம் உங்களுக்குத் தெளிவாகத் தெரியுமா?’ என்றேன்.
அந்தக் காலத்திலேயே பலருக்கும் சிவராமுவிடம் அப்படிப் பொறுப்பை ஒப்படைப்பது பற்றி வேறு கருத்து இருந்தது. அவரை நிறைய எழுதச் சொல்லலாம். அதைப் புத்தகமாகக் கொண்டு வரலாம். அந்தப் புத்தகங்கள் பரவலாகக் கிடைக்க ஏற்பாடு செய்யலாம். ஆனால் எழுத்து என்ற பத்திரிகையை அதனுடன் சம்பந்தப்பட்ட சி. மணி, ந. முத்துசாமி, வைத்தீஸ் வரன், வெங்கட் சாமிநாதன் இருக்கக்கூடிய ஒரு பெரிய குழுவில், அந்தப் பத்திரிகையின் தன்மையை அறிந்து அதைக் கனவாக வளர்க்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய பலரும் அவர் பக்கத்திலேயே இருக்கும்போது, அவர் சிவராமுவைத் தேர்ந் தெடுப்பது என்பது கொஞ்சம்கூடப் புத்திசாலித்தனமில்லை. ஆனால் இவர் உயிலில் எழுதினாரா அதைப் பதிவு செய்தாரா அதெல்லாம் தெரியாது.
செல்லப்பாவிடம் ஒரு முறை நான், தொடர்ந்து தொடர்பு கொண்டு வரும்போது ஏதேனும் ஒரு கட்டத்தில் சிவராமுவை வாரிசாகப் போடாமல் இருந்தது நல்லதுக்குத்தான் என்று உங்களுக்குத் தோன்றலாம் என்றேன். அது எனக்கு இப்போதே வந்துவிட்டதே என்றார் உடனே. இனிமேல் அப்படி யோசிக்க மாட்டீர்களா என்று கேட்டேன். நான் என்ன முட்டாளா என்றார். அப்புறம் அவர் அது மாதிரி யோசிக்கவேயில்லை. ஆனால் சிவராமுவுக்கு அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்; அந்தப் பத்திரிகையில் எழுதித்தான் நாலுபேருக்குத் தெரியும்படி ஆனோம் என்ற எண்ணமெல்லாம் இருந்தது. ஆனால் செல்லப்பாவுக்கு சிவராமு மேலான விருப்பம் குறைந் ததும் அவரிடமிருந்து விலகிக்கொள்வதற்கான ஒரு கட்டாயம் ஏற்பட்டது. சிவராமு அவரை முறித்துக்கொண்டு போனார் என்பதை விட அவர் மேல் செல்லப்பாவுக்கு இருந்த நம்பிக்கை யையும் ஆர்வத்தையும் செல்லப்பா முற்றாக இழந்ததனால்தான் பிரிய நேர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
Top |


