Suraa முகப்பு | தொடர்புக்கு | Font Problems?
Sundaramsamy.com

Ninaivodai

மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்    பக்கம் 1 2 3

மாலை நடை போகிறபோது எனக்கு குழந்தைகள் செய்யும் காரியத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். ஆனால் அவர்கள் கண்ணில் படுவது சுலபமாகவே இருக்கவில்லை. எந்த வீட்டைத் திறந்து எந்தப் பூனைக்கு அல்லது நாய்க்கு உணவு ஊட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்.

வெளியூரிலிருந்து வீடு திரும்புகிறவர்கள் தவறாமல் தனுவையும் நிஷாவையும் போனில் அழைத்து அவர்களைப் பாராட்டுவார்கள். அவர்கள் அம்மாவிடமும் தனியாகப் பாராட்டுவார்கள். ஒரு நாள் மிகுந்த வசதி படைத்த லோரா என்பவர் - வக்கீலாகக் கணவனுடன் சேர்ந்து தொழில் நடத்தி, குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காக தொழிலை முற்றாக விட்டவர் - தைலாவை அழைத்து, உன் பெண்கள் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா, தைலா? ஒரு நாள் பள்ளியிலிருந்து டிராபிக் ஜாமினால் வீடு திரும்பப் பிந்தி விட்டதால் டைகருக்கு அரை மணி நேரம் பிந்தி உணவு தரவேண்டியதாகி விட்டதாம். அதற்காக அவர்களாகவே பில்லில் ஐந்து டாலர்கள் குறைத்துப் போட்டிருக்கிறார்கள். என்ன பொறுப்பு! உணர்ச்சிவசப்பட்டதில் எனக்கு அழுகையே வந்து விட்டது, தைலா என்று சொல்லியிருக்கிறார்.

தனுவும் நிஷாவும், தோட்டங்களில் ஸ்ப்ரிங்கலரைத் திறந்து விட்டு செடிகளை நனைப்பதையும், சில வீடுகளில் ரப்பர் குழாய் வழியாகத் தண்ணீர் பாய்ச்சுவதையும் இரண்டொரு தடவை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் கண்ணில் பட்டால் முகத்தைத் திருப்பாமல் இடது கையை லேசாகத் தூக்கி ஒரு ‘ஹை’ மட்டும்தான் எனக்கு. அதற்கு மேல் பேச்சுக் கிடையாது.

வளைவிலேயே உருவத்திலும் மூர்க்கத்தனத்திலும் பெயர் பெற்ற நாயாக இருந்தது, டெரீஸா வீட்டு பாஞ்சா. தனு பாஞ்சாவை கவனித்து விட்டு வரும் ஒவ்வொரு நாளும் ஒன்றிரண்டு விஷயங்களாவது என்னிடம் சொல்வாள். ஒரு ஜெர்ஸிப் பசுவின் கன்றுக் குட்டியின் உயரத்தில் இருக்கும் அது என்றார் ராம். அதற்குத் தனியான அவுட் ஹெளஸ் இருந்தது. ஹீட்டரும் ஏர்கண்டிஷனரும் இருந்தன. அதற்கு உஷ்ணம் ஆகவே ஆகாது. அரை முழத்திற்கு தொங்கும் நாக்கிலிருந்து வெளியே வழியும் எச்சில் அறையை முழுக்க ஈரமாக்கி விடும். ஆஸ்த்மா நோயாளியைப் போல் மூச்சு இரைக்கும். ஆனால் எவ்வளவு கொடுமையான குளிரும் அதற்குப் பிடிக்கும். குளிர் பூஜ்யத்திற்குக் கீழே போனால் மட்டும் டை இல்லாமல் கம்பளி கோட்டு போட்டுக் கொண்டிருக்கும். சங்கிலியில் கட்டிப் போட்டு தோலாலான வாய்க்கூடையையும் அணிவித்திருந்தார்கள். சங்கிலியை அறுத்துக் கொண்டு காற்று வாங்கக் கிளம்பிற்று என்றால் எதிர்ப்படும் முதல் மனிதரைக் குதறுகிற குதறலில் மண்டையோடு மட்டும்தான் மிச்சமிருக்கும். இதெல்லாம் தெரிந்த போது இனிமேல் வாக்கிங்கை டெக்கிலேயே வைத்துக் கொள்ளலாமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

அந்த நாட்களில் தனு நிஷாவைப் பற்றி ராமிடம் ஒரு புகார் சொன்னாள். நீங்கள் சொல்லுங்கள் டாடி. நிஷ் ஒவ்வொரு நாளும் பாஞ்சாவை முத்தமிடுகிறாள். நிஷாவும் பக்கத்தில் நின்று கொண்டிருந்தது. ராம் நிஷியைப் பார்த்து, நாளன்றுக்கு எத்தனை முத்தம்? என்று கேட்டார். ஐந்து அல்லது ஆறு, அதற்கு மேல் இல்லை என்றாள் நிஷா. பாஞ்சா இவளிடம் அதிக முத்தம் கேட்கிறது டாடி என்றாள் தனு. கொடுத்துப் பழக்கியிருக்கிறாள் என்றாள். ராம், நிஷியின் முகத்தைக் கூர்ந்து கவனித்தார். அதிகம் பேசுவதில் நம்பிக்கை இல்லாத நிஷி இமைகளைக் கொட்டாமல் மௌனமாக நின்றாள். முகத்தைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இவளைப் பார்த்ததும் பாஞ்சா மேலே பார்த்து மின்விசிறியைப் போடச் சொல்கிறது, என்று தொடர்ந்து முடுக்கினாள் தனு. ராமின் உள்சிரிப்பு முகத்தில் தெரிந்தது. இந்த வாரக் கடைசியில் எல்லோரும் உட்கார்ந்து பேசி நாம் ஒரு முடிவுக்கு வரலாம் என்றார் அவர்.

அன்று தனுவுக்குக் காய்ச்சல். எந்த உடல் கஷ்டத்தையும் வெளியே சொல்லும் பழக்கமே இல்லாத அவள் சோபாவில் சுருண்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

பாஞ்சாவுக்கு உணவு தர கிரான்பாவை அழைத்துக் கொண்டு போ. தனியாகப் போகக் கூடாது என்று நிஷிடம் சொல்லிவிட்டு காரில் ஏறி மருத்துவ மனைக்குப் போய்விட்டாள் தைலா. என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். என்னுடைய துரதிருஷ்டம் அவளுக்குக் கேட்கத் தோன்றவில்லை.

மாலையில் நிஷ் முன்னே போக நான் பின்னால் போய்க் கொண்டிருந்தேன். நிஷ் மிகத் தைரியமான பெண். அவளை நம்பி சிங்கத்தின் கூண்டுக்குள் கூடப் போகலாம் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். பாஞ்சாவைச் சந்திக்க இன்னும் ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டியிருந்த நேரத்திலேயே, அதன் குரைப்புக் கேட்கத் தொடங்கிற்று. நான் வருகிறேன் என்பது பாஞ்சாவுக்குத் தெரிந்து விட்டது என்றாள் நிஷ். கம்மிங் பாஞ்சா, கம்மிங் என்றாள் நிஷ் தனக்குத் தானே. பாஞ்சாவிற்குக் கேட்பது போல் தொடர்ந்து பேசிக் கொண்டே போனாள். தனுவைப் பார்க்க முடியாததால் ரொம்பவும் வருத்தப்படும் கிரான்பா என்றாள்.

நிஷ் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததும் அவள் காலில் விழுந்து கொஞ்சத் தொடங்கிற்று பாஞ்சா. நான் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். நிஷா தியானம் செய்ய உட்காருவது போல் பாஞ்சா முன்னால் அமர்ந்து கொண்டாள். பாஞ்சா நிஷியின் காதை நக்கத் தொடங்கிற்று. வலது காதை நக்கிவிட்டு இடது காதை நக்க ஆரம்பித்தது. நிஷி அதன் கழுத்தை ஆவேசமாகக் கட்டிக்கொண்டு அதன் நெற்றியில் முத்தங்கள் சொரிந்தாள்.

நான் ஜன்னலிலிருந்து கதவின் பக்கம் வந்து எட்டிப் பார்த்தேன்.

நிஷ் சுவரோரம் இருந்த பெரிய அலமாரியை மலக்கத் திறந்து போட்டிருந்தாள். ஏகப்பட்ட டப்பாக்கள். பெரிது பெரிதாக. கண்ணாடிப் புட்டிகள். அலமாரியைத் திறந்ததும் பாஞ்சா சங்கிலியை அறுத்துவிடும் அளவுக்கு அதற்கு சாத்தியமான விட்டத்திற்குள் மாறி மாறிக் குதிக்கத் தொடங்கிற்று. பேபி, ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் எனக்கு கெட்ட கோபம் வரும் என்று செல்லக் கோபத்தில் சொன்னாள் நிஷ். பாஞ்சா முன் காலை நீட்டிப் படுத்துக் கொண்டு அழுவது போல் குரல் எழுப்பிற்று. நிஷ் என்னைப் பார்த்து சின்னக் குழந்தை என்றாள். குழந்தையா? என்று நான் கேட்டேன். குழந்தைதான். இன்னும் எட்டு மாதம் கூட ஆகவில்லை என்றாள். எனக்கு ஒரு மனிதக் குழந்தை தவழ்ந்து தவழ்ந்து வந்து எழுந்து உட்கார முயல்வது போல் ஒரு சித்திரம் மனதில் வந்து போயிற்று.

அந்த வருடம் நான் சற்று முன்கூட்டியே சாந்தா க்ரூஸில் இருந்து ஊருக்கு வந்து விட்டேன். ஒரு நாள் தைலா போனில் அழைத்தபோது அவளிடம் பேசிய பின் தனுவிடம் பேசினேன். நிஷியும் லைனில் இருந்தாள்.

கம்பனி எப்படி நடக்கிறது அம்மா? என்று கேட்டேன்.

மிக நன்றாக நடக்கிறது கிரான்பா என்றாள் தனு.

முதல் ஆறு மாதத்தில் நல்ல லாபமா?

நல்ல லாபம், கிரான்பா என்று இருவருமே உரக்கச் சொன்னார்கள்.

தனு, என்னையும் ஒரு பார்டனராக சேர்த்துக் கொள்ள முடியுமா அம்மா? என்று நான் கேட்டேன்.

சில வினாடிகள் மௌனம்.

உங்கள் சேவையைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இன்னும் கம்பனிக்கு வரவில்லை, கிரான்பா என்றாள் தனு.

சரியம்மா, உங்கள் விருப்பம்.

கிரான்பா, கம்பனி கணக்கில் உங்கள் பெயரில் பன்னிரெண்டரை டாலர் வரவாக இருக்கிறது என்றாள் தனு.

அது ஏன்?

பாஞ்சாவுக்கு உணவு கொடுக்க ஒரு நாள் எனக்குப் பதில் நீங்கள் போனீர்கள், நினைவிருக்கிறா கிரான்பா? ஒரு மணி நேரத்திற்கு பன்னிரெண்டரை டாலர்கள்.

கொஞ்சம் சேர்த்துப் போடக்கூடாதா, அம்மா?

இருவரும் ஒரே நேரத்தில் சிரிக்கும் சத்தம் கேட்டது.

மிகக் கௌரவமான சம்பளம் அது, கிரான்பா என்றாள் தனு.

சரி, உங்கள் இஷ்டம் அம்மா என்றேன் நான்.

ஆகஸ்டு 2003 கலிஃபோர்னியா

 

 
Top


Powered By Minveli © sundararamaswamy.com All Rights Reserved