| மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் | பக்கம் 1 2 3 |
நான் மணியைப் பார்த்தபடி என் அறைக்குள் உட்கார்ந்து கொண்டிருந்தேன். என்னுடைய பேச்சு ஒன்றரை வாக்கியம்தான். அதை முப்பதாவது தடவையாக மனதில் மீண்டும் ஒரு தடவை சொல்லிப் பார்த்துக்கொண்டேன். ஒவ்வொருவராக ஏகப்பட்ட பெண்கள் வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. புதுப் புதுப் பெயர்களாக காதில் விழுந்து கொண்டே இருந்தன. சோபியா, அலெக்ஸி, கெல்ஸி, சிட்னி, நிக்கேல், நயோமி, மிஷல். சமையலறை ஜன்னல் வழியாகப் பார்த்தபோது பலரும் கரையிலிருந்து கரணமடித்து விழுந்து நீச்சல் குளத்தை இரண்டு படுத்திக்கொண்டிருந்தார்கள். தலைகால் புரியாத சந்தோஷத்தில் கத்தினார்கள். ஈரத்தலையுடன் கரையில் டான்சும் நடந்தது.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பார்த்தபோது பார்பக்யு ஆரம்பமாகிவிட்டிருந்தது. பார்க்கவே விசித்திரமாக இருந்த அடுப்பு கபகபவென்று எரிய காரியங்கள் வேகமாக நடந்துகொண்டிருந்தன. சாப்பிட்ட இடத்தை எல்லோரும் சேர்ந்து சுத்தப்படுத்தினார்கள். சமையல் செய்து சாப்பிட்ட இடமாகவே அது தெரியவில்லை. அதன் பின் டெக் ஏணியில் சாடிக் குதித்தேறி கோணல் மாணலாக உட்கார்ந்து கொண்டார்கள்.
கிரேஸியின் அக்கா சோபியா டெக்கின் விளிம்பில் மர கைப்பிடி மீது உட்காந்து கொண்டிருந்தாள். சரி, அது அவள் விருப்பம். ஆனால் மேல் சட்டத்தைப் பிடித்துக் கொள்ளாமல் இரண்டு கைகளையும் விசிறியபடி பேசிக்கொண்டிருந்ததுதான் வயிற்றைக் கலக்கிற்று. என்னை அறியாமலேயே அவளை அடிக்கடி கவனித்துக் கொண்டிருந்தேன். பின் பக்கம் விழுந்துவிட்டால் உருண்டு குன்றின் அடிவாரத்திற்கேப் போய்ச் சேர்ந்து விடுவாள். திடீரென்று அந்தப் பெண் என்னிடம், என் சட்டை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா, கிரான்பா? என்று கேட்டாள். முன் பின் பேசியிராத பெண்ணிடம் எடுத்த எடுப்பிலேயே என்ன சகஜம். நான் அமெரிக்கப் பாணியில், இவ்வளவு அற்புதமான சட்டையை நான் வேறு எங்குமே பார்த்ததே இல்லை என்றேன். நீங்கள் அடிக்கடி கவனித்ததில் இருந்தே தெரிந்து கொண்டு விட்டேன், கிரான்பா என்று தலையை உயர்த்திப் பெரிதாகச் சிரித்துக்கொண்டாள்.
கம்பனியின் நோக்கத்தைப் பற்றி தனு சுமார் ஐந்து நிமிஷம் பேசினாள். நிஷாவின் பார்வை தனுவின் முகத்தின் மீது படிந்திருந்ததோடு அவளுடைய ஒவ்வொரு வாக்கியத்தையும் நிஷாவும் ஆமோதிப்பது போல் சுய நினைவின்றி அவளுடைய தலை அசைந்து கொண்டிருந்தது. நான் எழுந்திருந்து, கம்பனியைத் திறந்து வைக்கிறேன், தனுவும் நிஷியும் ஆரம்பிக்கும் இந்த கம்பனி மிகச் சிறப்பாக வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றேன். இதைச் சொல்லி முடித்ததும் எல்லாப் பெண்களும் எழுந்திருந்து கையைத் தட்ட ஆரம்பித்தார்கள். தனுவும் நிஷாவும்கூட கரவொலியில் கலந்து கொள்ளுவதைப் பார்த்ததும் நானும் கையைத் தட்டத் தொடங்கினேன். கைதட்டல் என் எதிர்பார்ப்புகளை மீறி நீண்டுகொண்டே போயிற்று. ஓசை தேய்ந்திறங்காமல் தாளகதியை எட்டிய போது பல யுகங்கள் அவை நீடித்து விடும் என்ற பிரமை மனதில் தோன்றியது.
சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாமா? என்று ஒரு பெண் கேட்டாள்.
தாராளமாக என்றாள் தனு.
எனக்கு தனு பிரச்னையில் மாட்டிக் கொள்ளக் கூடிய கட்டம் முதலிலேயே உருவாகி விட்டதே என்று தோன்றியது. பட்டுக்கொள்ளாமல் பதில் சொல்ல அவளுக்குத் தெரியும் வயதா?
மணிக்கு எவ்வளவு பணம்? என்ற அடிப்படையான கேள்வி முதலில் வந்தது.
ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு பன்னிரெண்டரை டாலர் என்றாள் தனு.
நாய், பூனை போன்றவற்றிற்கு உணவு அளிப்பது, தோட்டத்திற்கு தண்ணிர் பாய்ச்சுவது போன்ற பணிகளை கம்பனி கவனித்துக் கொள்ளும் என்று சொன்னாய். செல்லப்பிராணிகளையும் கவனித்துக் கொள்ளுமா? என்னிடம் ஒரு வெள்ளைப் பன்றி இருக்கிறது என்றாள் ஒரு பெண்.
கினிபிக், வெள்ளை எலி, சுண்டெலி, கிளி, முயல், ஹாம்ஸ்டர் போன்ற கூண்டில் வளர்ப்பவற்றையும் கம்பனி கவனித்துக்கொள்ளும். பாம்பு, பல்லி, இக்வானா போன்ற ஒரு சிலவற்றை கம்பனி இப்போதைக்கு எடுத்துக்கொள்ளாது. வினியோகிக்க இருக்கும் இந்த அறிக்கையில் எல்லாவற்றையும் விபரமாகச் சொல்லியிருக்கிறோம் என்றாள் தனு. ஒரு காகிதக் கட்டைத் தூக்கிக் காட்டினாள்.
பாம்புகளை கவனித்துக்கொள்வதில் என்ன பிரச்னை? என்று கேட்டாள் மற்றொரு பெண்.
எந்தப் பிரச்னையும் இல்லை. தகுதி வாய்ந்த நபர் இன்னும் அமையவில்லை. அத்துடன் மற்றொன்றும் நான் சொல்ல வேண்டும். கூண்டுப் பிராணிகளை கவனித்துக்கொள்ளத் தருகிறவர்கள் எங்கள் வீட்டில் கொண்டு வந்து அவற்றை, அவற்றின் உணவுகளோடு தரவேண்டும். வெளியூரில் இருந்து வந்ததும் அவர்கள் பொறுப்பில் பெற்றுக்கொண்டு போக வேண்டும் என்றாள்.
அக்காள் நன்றாகவே விஷயங்களை விளக்குகிறாள் என்ற பாராட்டுணர்வு நிஷாவின் முகத்தில் தெரிந்தது.
தனு சொல்ல விட்டுப் போன ஒரு விஷயம் நிஷியின் நினைவுக்கு வந்தது. அவள் அவசரமாக, செல்லப் பிராணிகளைக் கொண்டுத் தருகிறவர்கள் அவற்றின் பொம்மைகளையும் கையோடு தந்து விட வேண்டும் என்றாள்.
தனுவின் கை தன்னயறியாமலே நிஷியின் முதுகைத் தொட்டது. நிஷி என் முகத்தைப் பார்த்தாள்.
வெளியூர் போகிறவர்கள் எத்தனை நாட்களுக்கு முன்பாகத் தெரிவிக்க வேண்டும்? என்று ஒரு பெண் கேட்டாள். தனு ஒரு நிமிஷம் தயங்கினாள். அக்காவும் தங்கையும் விவாதித்து முடிவெடுக்காத விஷயம்போல் பட்டது. நிஷ், தனுவின் காதில் ஏதோ சொல்லிற்று.
குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்னர் என்றாள் தனு.
ஆமாம், குறைந்தது ஒரு வாரம் என்றும் நிஷியும் சேர்ந்து சொல்லிற்று.
கம்பனியை ஆரம்பித்த பின் ஒரு சில மாதங்கள் சான்டாக்ரூஸிலேயே இருந்தேன். தனுவும் நிஷியும் கம்பனியை மிக நன்றாக நடத்தினார்கள். சில சமயம் சண்டை போட்டுக்கொண்டு விடுவார்கள் இருவரும். நிஷ் முன் கோபக்காரி என்பதால், இனிமேல் உன்னிடம் பேசவே மாட்டேன் என்று சொல்லிவிட்டு புத்தகப் பையுடன் தனியாகப் போய் காரில் ஏறிக்கொள்வாள். தொழிலை கவனிக்க வேண்டிய நேரம் மாலை ஐந்தரை மணியிலிருந்து ஆறரை மணி வரையிலும். சரியாக தனு ஐந்தரை மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்து விடுவிடு என்று நடந்து போவாள். அவளுக்காக வெளி பெஞ்சில் காத்துக்கொண்டிருக்கும் நிஷா சோர்ந்து போன நடையில் அவள் பின்னால் போகும். இருவரும் ஒருவர் பக்கத்தில் ஒருவர் வந்ததும் தொழில் சம்பந்தமான விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிக் கொள்ளத் தொடங்குவார்கள். இது பற்றி நான் ஒரு நாள் தனுவிடம் பேசிய போது அவள் நேரான அர்த்தத்திலேயே அதை எடுத்துக் கொண்டு, கிரான்பா, ஒரு மணி நேரத்திற்கு இருபத்தைந்து டாலர் கம்பனி பில். வாடிக்கையாளர்கள் நலங்களை கவனிக்கவில்லை என்றால் கம்பனி மூழ்கிவிடும். இப்போதே என் சிநேகிதிகளில் பத்துப் பேருக்கேனும் இதே போல் ஒரு கம்பனியை ஆரம்பிக்கலாமா என்ற யோசனை இருக்கிறது என்றாள்.
உனக்குப் போட்டியாகவா? என்று நான் கேட்டேன்.
அப்படி நான் அதை எடுத்துக் கொள்ளவில்லை, கிரான்பா. யார் வாடிக்கையாளர்களின் நலங்களை பாதுகாக்கிறார்களோ அவர்கள் கம்பனி தானே வளரும் என்றாள்.


