| மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் | பக்கம் 1 2 3 |
|
பொருளடக்கம்
மயில் பையை வைத்துவிட்டுப் போன மாமி தனுவும் நிஷாவும் களிப்பு நண்பர் ஜி. எம். ஒரு ஸ்டோரியின் கதை கூடி வந்த கணங்கள் கதவுகளும் ஜன்னல்களும் மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் அந்த ஐந்து நிமிடங்கள் ஈசல்கள் கிட்னி |
|
தனுவும் நிஷாவும்
தாங்கள் ஆரம்பிக்க இருக்கும் புது கம்பனியை நான்தான் திறந்து வைக்க வேண்டுமென்று திடீரென்று தனுவும், குட்டி நிஷி என்ற செல்லப் பெயரில் அழைக்கப்படும் நிஷாவும் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் கிரான்பா என்றுதான் என்னை அழைப்பார்கள். தமிழோ இங்கிலீஷோ தாத்தா என்று அழைப்பதை விட எனக்குப் பிடித்திருந்தது. தாத்தா என்று அழைக்கிற போது எனக்கு பொக்கை வாய் - உண்மையில் அப்படியில்லை - இருப்பது போன்ற எண்ணம், கிரான்பா என்று அழைக்கிறபோது ஏற்படுவது இல்லை.
தனுவுக்கு பன்னிரெண்டு வயது. குட்டி நிஷிக்கு ஏழு வயது. கம்பனியா? நான் திறந்து வைத்ததே இல்லையே என்று சொன்னேன். நமக்கு ஆகாத விஷயத்திற்குள் மாட்டிக் கொள்ளக் கூடாது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த குழந்தைகள். எப்படி எல்லாம் மூளைகள் வேலை செய்யுமோ? தனுவும் நிஷியும் இங்கிதமாகச் சிரித்தார்கள். அதன் பொருளை, என்னைப் பற்றி அவர்கள் மனதில் இருந்த அபிப்பிராயத்தை வைத்து ஊகிக்க முடிந்தது. அமெரிக்காவிலேயே கௌரவமான பணிக்கு அழைத்தால் இப்படிப் பதில் சொல்கிறவர்களும் இருப்பார்களா?
குட்டி நிஷ் அரை நிஜாரில் முக்கால் பங்கு வெளியே துருத்திக்கொண்டிருந்த பெரிய டிராயிங் தாளின் சுருளை மேஜை மீது விரித்து ஓரங்களைப் பிடித்துக் கொண்டாள். நான் குனிந்து பார்த்தேன். அவளுடைய கைவண்ணம்தான். வழக்கம் போல் அரூப ஓவியம். அவள் எந்த ஜீவராசிகளை வரைந்தாலும் சரி அவற்றிற்கெல்லாம் பாரபட்சமில்லாமல் சிறகுகளைப் போட்டு விடுவாள். முயல், எலி, மான், கட்டெறும்பு, நாய், பூனை எல்லாவற்றிற்கும். மரம் செடி கொடிகளின் சிறகுகளில்தான் இலைகள் முளைத்திருக்கும். சிறகுகளில் பழங்களும் தொங்கும். இவள் வரைப்பதற்கே அவசியம் இல்லாமல் பறவைகள் சிறகுகளுடன் இருப்பதில் அவளுக்கு ஏமாற்றமோ என்னவோ. இவளுடைய பங்காக அவற்றின் சிறகுகளைக் கண்டபடி பெரியதாக்கி விடுவாள். குருவிகள், கழுகுகளை விட பெரிய சிறகுகளை வைத்துக்கொண்டிருக்கும்.
டிராயிங் தாளின் நாலு ஓரங்களிலும் பல தாவரங்களும் பல ஜீவராசிகளும் சிறகுகளின் களேபரத்தில் மூழ்கிக் கிடக்க, மையத்தில், Plants and Pets என்று நவீன கோணல் எழுத்துக்கள் பெரிதாகத் தெரிந்தன. பங்குதாரர்கள்: தனு ராம்; நிஷா ராம் என்றிருந்தது. தனுவின் பெயருக்கு முன் அவளுடைய புகைப்படமும், நிஷாவின் பெயருக்கு முன் அவளுடைய புகைப்படமும் ஒட்டப்பட்டிருந்தன. கம்பெனியைத் திறந்து வைக்கிறவர் பெயர் காலியாக விடப்பட்டிருந்தது. தனு அவளுடைய பான்ட் பாக்கெட்டிலிருந்து என் புகைப் படத்தை எடுத்து, மென்மையாகச் சிரித்தபடி, ஓட்டிக்கொள்ளவா, கிரான்பா? என்று கேட்டாள். குழந்தைகளின் ஆசை. இரண்டு பெயரின் வயதைக் கூட்டினாலும்கூட பத்தொன்பதுதான். என்ன தன்னம்பிக்கை! என்ன தைரியம்! மனசு தழுதழுத்தது. சரி என்று என் வாயே சொல்லி விட்டது. இருவரும் உணர்ச்சி வசப்பட்டு என்னை அணைத்துக் கொண்டார்கள்.
காரியங்கள் மடமடவென்று நடந்து கொண்டிருந்தன. அழைப்பிதழ் ஒவ்வொன்றையும் சிறிய ஓவியங்களின் நடுவில் எழுதித்தான் சிநேகிதிகள் எல்லோருக்கும் தர வேண்டுமே தவிர கணினியில் அச்சுப் போட்டுத் தரக் கூடாது என்பது அவர்கள் தீர்மானம். படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்க வேண்டும் என்று குட்டி நிஷியிடம் சொல்லத் தேவை இல்லை. இரண்டு படங்கள் ஒரே மாதிரியாக வேண்டும் என்று சொன்னால்தான் அவளுக்குப் பிரச்னையே.
குழந்தைகளுக்கு நேரம் மிகக் குறைவு. பள்ளிக்கு அதிகாலையில் போய்விட்டு பின்மாலையில் களைப்பில் சுருண்டு போய் வருவார்கள். அதன் பின் வீட்டுப்பாடச் சுமைகள். தவிர வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு இடங்களுக்கு விளையாடச் செல்ல வேண்டும். ஸாக்கர், கூடைப் பந்து, நீச்சல், கராத்தே என்று வரிசையாக. தனுவுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் வயலின். குட்டிக்கு வாரத்தில் மூன்று நாட்கள் பியானோ. எப்படித்தான் ஈடு கொடுக்கிறார்களோ. அவர்கள் ஒவ்வொரு வாரமும் செய்ய வேண்டிய பணிகளின் பட்டியலை குளிர்சாதனைப் பெட்டியில் ஒட்டி வைத்திருப்பதைப் படித்தாலே எனக்கு தலை சுற்றும். நல்ல வேளை. இந்தியாவில் பிறந்து வளர்ந்ததால் சாயம் வெளுக்காமல் எழுபத்திரெண்டு வயது வரையிலும் சமாளித்துக் கொண்டு வந்துவிட்டேன். எப்போதாவது குளிர்சாதனப் பெட்டியைப் பார்த்து, ஸாக்கர் 5 மணிக்கு. நேரமாகி விட்டது. ஓடு, ஓடு என்று குட்டியை விரட்டும் போது என் மனசே வெட்கம் கலந்து சிரிக்கும்.
அது ஹைவேயை விட்டு ஒதுங்கியிருந்த தனி வளைவு. ஒரு குன்றும் அதைச் சுற்றியிருந்த பிரம்மாண்டமான சரிவுகளில் மரக்காடுகளும். ஆங்காங்கு வீடுகள். மொத்தம் பதினெட்டு. அதற்கு மேல் கட்ட கவுண்டி உரிமை அளிக்காது. அவ்வளவு பேரும் வெள்ளை அமெரிக்கர்கள். நாங்கள் மட்டும்தான் கறுப்பு இந்தியர்கள்.
தனுவும் குட்டியும் வீட்டுக்காரர்களின் சங்கக் கட்டடத்தின் அறிக்கைப் பலகையில் பெரிய ஓவிய அழைப்பிதழை பின் பண்ணியிருந்தார்கள். நான் காலைநடை போகிறபோது கட்டிடத்தின் வராண்டாவில் ஏறி என் புகைப்படத்தைப் பார்ப்பேன். அமெரிக்க நீலக்கண்களுக்கு என் கறுப்பு மூஞ்சி எப்படிக் காட்சி அளிக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பேன். சிம்பன்சியை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் இவர்களுக்கு என் முகத்தை ஏற்றுக்கொள்ள எந்தத் தடையும் இராது என்றுதான் எனக்குத் தோன்றியது. அத்துடன் நான் லொடக்கு இந்தியக் கிழவனும அல்ல. வளைவினுள் ஏகப் புகழ்பெற்றிருந்த தனுவுக்கும் நிஷிக்கும் கிரான்பா. தைலாவின் அப்பா. தைலா ஒருத்திதான் அந்த வளைவினுள்ளிருந்து பணிக்குப் போகிறவள். பிற பெண்கள், வீட்டு நிர்வாகத்தைத்தான் தேர்ந்தெடுத் திருந்தார்கள். டாக்டரான தைலாவின் நட்புக்கு அவர்கள் மனங்களில் மிகுந்த மதிப்பு இருந்தது. யார் வீட்டில் உடல் பிரச்னை என்றாலும் அவசரத்திற்கு அவளிடம் ஒரு ஆலோசனை கேட்கலாம். அதற்கு மேலும் நெருக்கடி என்றால் தங்கள் வீட்டிற்கு உரிமையுடன் அழைத்துச் செல்லலாம். மேலும் தைலாவின் வீடுதான் குன்றின் ஆக உச்சியில் இருந்தது. நிலநடுக்கத்தில் அந்த வீடு சிதிலம் அடைந்தபோது அதன் பழைய உரிமையாளர் அந்த வீட்டை ராம் - தைலா தலையில் கட்டிவிட்டுப் போய்விட்டார். அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அந்த வீட்டைக் கட்டி எழுப்பிக் கொண்டார்கள். இப்போது பதினேழு குடும்பத்தினருக்கும் மனதிற்குள் அந்த வீடுதான் வேண்டும். மீண்டும் நிலநடுக்கம் வந்து வீடு தங்கள் தலையில் சரிந்தாலும் பாதகமில்லை. அது தவிர தைலா வீட்டில் மூன்று கார்களும் இருந்தன. அவளுக்கு லெக்ஸஸ். ராமிற்கு நாவிகேட்டர். குழந்தைகளுக்கு காக க்ரைஸர் வான். கார்கள் எல்லாமே தெருவில் உருள்பவைதான். அமெரிக்காவில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குக்கூட இவை கார்கள் மட்டுமல்ல என்பது தெரியும்.
தனுவும் நிஷாவும் தங்கள் வீட்டு நீச்சல் குளத்தின் கரையில் வைத்துத்தான் கம்பனியின் திறப்பு விழாக் கூட்டம் என்று சொன்னார்கள். கம்பனியைத் திறந்து வைக்கப் போகிறவன் என்ற அளவில் என்னிடம் சில யோசனை கேட்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. ஒரு வார்தைகூடக் கேட்கவில்லை. தைலாவிடமும் கேட்கவில்லை. ராமிடமும் கேட்கவில்லை. அவர்களுக்குள் விவாதித்து முடிவெடுத்துக் காரியம் செய்து கொண்டிருந்தார்கள். சூரியாஸ்தமனம் இரவு ஒன்பது மணி வாக்கில் ஆகிக்கெண்டிருந்ததால் எட்டு மணிக்குத் திறப்பு விழா. ஆனால் அவர்களுடைய சிநேகிதிகள் எல்லோரும் மாலை ஐந்து மணிக்கே வந்து விடுவார்கள்.
முதலில் நீச்சல் குளத்தில் அட்டகாசமான குளியல். அதன் பின் குளத்தின் கரையிலேயே எல்லோருக்குமாக எல்லோரும் சேர்ந்து உணவு தயாரித்தல். அதற்கு பார்பக்யு என்றார்கள் குழந்தைகள். அந்த சொல்லின் ஓசைக்காகவாவது ஒரு துண்டு இறைச்சியை தின்று பார்க்கலாமா என்று எனக்குத் தோன்றியது. என் சாகஸம் பற்றி குழந்தைகளுக்குத் தெரியாதா என்ன? உங்களுக்கு வெஜ் தனியாக என்று முதலிலேயே சொல்லி ஆசுவாசப்படுத்தி விட்டார்கள்.
டெக்கில் வைத்துத்தான் கூட்டம் என்றும், நான் எட்டு மணிக்கு வந்தால் போதும் என்றும் தனுவும் நிஷாவும் சொன்னார்கள். நான் டை கட்டிக்கொள்ள வேண்டியிருக்குமா? என்று கேட்டேன். இருவருக்கும் வந்த சிரிப்பை அடக்கத் தெரியவில்லை. வழக்கம் போல் வேஷ்டி கட்டிக்கொண்டு வந்தால் போதும், கிரான்பா என்றாள் தனு. அவர்களைச் சிரிக்க வைக்க நான் ஹாஸ்யம் எதுவும் சொல்லத் தேவையில்லை. வாயைத் திறந்து பேசினாலே போதும் என்றாகி விட்டிருந்தது.
சிநேகிதிகள் வர வர ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டு வேலைகளில் ஈடுபட்டார்கள். நாற்காலிகளை டெக்கில் கொண்டு வந்து போட்டார்கள். என் நாற்காலி சற்று கௌரவமானதாக இருக்கும் என்று நினைத்தேன். அப்படி எதுவும் இல்லை. அவற்றை வரிசைப் படுத்திப் போடாததும் எனக்குக் குறையாக இருந்தது. சொன்னால் சிரிப்பார்களோ என்ற எண்ணத்தில் நான் ஒன்றும் சொல்லவில்லை.


