Suraa முகப்பு | தொடர்புக்கு | Font Problems?
Sundaramsamy.com

Ninaivodai

ஜே.ஜே சில குறிப்புகள்    பக்கம் 1 2 3 4

பின்னுரை

ஜே.ஜே. - இருபத்தைந்து

கோட்டயம் முன்னேற்ற எழுத்தாளர் மாநாட்டில் தன்னுடைய ஆதர்ச எழுத்தாளன் ஜே.ஜே.யைப் பார்க்கச் சென்ற பாலு மற்றொரு எழுத்தாளரான திருச்சூர் கோபாலன் நாயரிடம் ஜே.ஜே.யின் எழுத்தை தான் எதிர் கொண்ட விதத்தைச் சொல்லும் பகுதி இவ்வாறு அமைகிறது:

 “சார், புரியாத எழுத்தில் இரண்டு விதம். ஒன்று அசிரத்தை ஏற்படுத்தக்கூடியது. மற்றொன்று ஆர்வம் ஏற்படுத்தக்கூடியது. ஜே.ஜே. இரண்டாவது வகையைச் சார்ந்தவன் என்பது என் அபிப்பிராயம்.”

 இருபத்து நான்காம் வயதில் ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை முழுமையாக வாசித்து முடித்ததும் தோன்றிய மனநிலை ஏறத்தாழ இதுவாகத்தான் இருந்தது. இத்தனைக்கும் தமிழில் அன்றுவரை வெளியாகியிருந்த பெரும்பாலான நவீனப் படைப்புகளோடு அறிமுகம் கொண்டிருக்கிறேன் என்ற இறுமாப்பும் இதே எழுத்தாளர் அதுவரை எழுதி வெளியான எல்லாவற்றையும் படித் திருக்கிறேன் என்ற தற்பெருமையும் அந்த மனநிலையில் ஆடிச் சரிந்தன. மிகவும் பழக்கப்பட்ட நிலப் பகுதியில் மூடுபனி கவிந்த பொழுதில் நிற்க நேர்ந்தது போன்ற துலக்கமின்மையை உணர்ந்தேன். நூல் வடிவத்தில் வெளிவருவதற்கு முன்பே சில பகுதிகள் வாசிக்கக் கிடைத்ததன் காரணமாகப் பெரிதும் எதிர்பார்த்திருந்த நாவலும் அதுவாகவே இருந்தது. மலர்மன்னன் வெளியீடாக வந்த ‘ரு’ காலாண்டு இதழில் ஜே.ஜே: சில குறிப்புகளின் ஆரம்ப அத்தியாயங்கள் அச்சேறியிருந்தன. அதை வாசித்துப் பெற்ற குதூகலப் பதற்றம் நாவலை மிக நேர்த்தியான புத்தகமாகக் கைவசப்படுத்தும்வரை தொடர்ந்திருந்தது. முதல் வாசிப்பில் ஈர்க்கக்கூடிய பிரமிப் பையும் புரிபடாத் தன்மையையும் அனுபவித்ததற்கான காரணங்களைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இடைவெளிவிட்டுப் பல முறை நாவலை வாசித்த பக்குவத்தில் வகைப்படுத்தினால் அவை பின்வரும் அம்சங்களைச் சார்ந்தவையாக இருக்கும்.

நாவல் என்பது கதையை முன்னிறுத்தி விரிவடையும் வடிவம் என்ற சம்பிரதாயமான பார்வைக்கு எதிரானதாக இருந்தது ஜே.ஜே: சில குறிப்புகள். இந்த வடிவ மீறல்தான் ஆரம்பப் பிரமிப்பை ஏற்படுத்தியது.

புனைகதை ஓர் உணர்ச்சிகரமான வடிவம் என்ற நடைமுறையை மறுக்கும் வகையில் அறிவார்ந்த விவா தத்துக்கான களமாக நாவல் திறந்து விடப்பட்டிருந்தது. அப்படித் திறந்துவிடப்பட்டிருந்த வெளியும்கூட ஒற்றைத் தளமுள்ளதாக இருக்கவில்லை; வெவ்வேறு தளங்களில் நடமாடுவதற்கான பரப்பைக் கொண்டிருந்தது. அவ்வாறு நடமாடும்போதே ஒரு தளம் சட்டென்று இன்னொரு தளமாக மாறிவிடும் ‘திட்டமிட்ட சதி'யும் அதில் இருந்தது. ஒரே சமயம் வசீகரமும் புதிருமான இந்தப் புனைவு முறை மிகப் புதிதாக உருவாகியிருந்தது. இந்த நோக்கில் தமிழில் வெளியான முதல் நவீனத்துவ முயற்சி ஜே.ஜே: சில குறிப்புகள்.

சமகாலத் தமிழ் வாசகனை நாவலின் நடையே ஈர்த்தது; வெருட்டியது. மொழி ஒரு தொடர்புக் கருவியாகக் கையாளப்பட்டுவந்த புனைகதைத் துறையில் அதன் பன்முகச் சாத்தியங்களைப் பரிசோதனை செய்த நாவல் இது. ஆவணங்களுக்கான தெளிவு, புனைகதைக்கான ஜாலம், கவிதையின் வேகம், தொனி மாற்றங்களின் நுட்பம் ஆகிய எல்லாமும் இழைந்த மொழியில் அமைந்த நாவல். ‘புறங்கழுத்தில் ஒன்றன்மேல் ஒன்றாக அடிகள் விழுவதுபோல’ வீச்சுக் கொண்டிருந்த நடை, நாவலை நகர்த்திச் செல்வதற்கான காரணி என்பதைவிட நாவலின் ஆதாரப் புள்ளியாகவே உருவங்கொண்டிருந்தது. அறிவார்ந்த தளத்தில் முன் நகரும் படைப்பு என்பதால் இந்த இயைபு வலுவானதாகவும் இருந்தது. புனைவு மொழி சார்ந்து வழக்கத்திலிருந்த இலக்கணம் இந்த நாவலில் தகர்ந்தது. நடை காரணமாகவே கவனம் பெற்று வாழ்வனுபவங்களைப் பரிசீலனை செய்யத் தூண்டிவிட்ட முதல் படைப்பாக ஜே.ஜே: சில குறிப்புகள் இருந்தது.

வாசக ஈர்ப்புக்கு ஆரம்பமாக இருந்தன இந்தக் கூறுகள், எனினும் நாவலை அந்தரங்கமானதாக ஏற்றுக் கொள்ளத் தனிப்பட்ட நியாயங்களும் எனக்கிருந்தன. அந்தக் காலப் பகுதியில் எனது வாசிப்புக்கும் மனச் சாய்வுக்கும் இணக்கமாக இருந்த பலவற்றோடும் தொடர்பு கொண்டனவாகவும் அந்த நியாயங்கள் இருந்தன. ஆல்பெர் காம்யுவின் எழுத்துக்கள் அன்று பெரும் அலையாக என் கருத்திலும் கவனத்திலும் மோதிக் கொண்டிருந்தன. ஜே.ஜே: சில குறிப்புகளின் முதல் வரியே காம்யுவை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தது, நாவலுடனான வாசக உறவை வலுப்படுத்திக்கொள்ளும் முனைப்பைக் கூடுதலாக்கியது. ஜோசப் ஜேம்ஸ் என்ற கற்பனைப் பாத்திரத்தின் உயிர்ச் சாயல் சி.ஜே. ஜோசப் என்ற மலையாள எழுத்தாளனின் அடையாளங்களைக் கொண்டிருந்ததைவிடக் காம்யுவின் தோற்றத்தைக் கொண்டிருப்பதாக நம்புவது அன்றைய மனநிலைக்கு உவப்பாக இருந்தது. ஜோசப் ஜேம்ஸ் - ஆல்பெர் காம்யு என்ற பெயர்களின் உச்சரிப்பு ஒற்றுமையில் மனம் மயக்கம் கொண்டது. காம்யுவின் பிரச்சினை மனிதச் சூழலின் நெருக்கடியை ஆராய்வது, அந்த ஆய்வுக்குச் சுதந்திரமான சிந்தனையைச் சார்ந்திருப்பது என்பதாகக் கருத்துக் கொண்டிருந்தேன். அந்தக் கருத்தின் தமிழ் வடிவம் அல்லது திராவிட வடிவமே ஜே.ஜே. என்ற நம்பிக்கையும் கவனத்தில் வேரோடியிருந்தது.

அதே கால அளவில் வாசித்து ஆவேசம் கொண்டி ருந்த இன்னொரு எழுத்தாளர் அருண் ஜோஷி. குறிப்பாக அவர் எழுதிய பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு என்ற நாவல். வாசிப்பின் பல கட்டங்களில் ஜோசப் ஜேம்ஸ§ம் பில்லி பிஸ்வாஸ§ம் பரஸ்பரம் சந்தித்துக் கொண்டார்கள். பில்லி என்கிற பிமல் பிஸ்வாஸ§க்கும் ஜோசப் ஜேம்ஷுக்கும் புனைகதைப் பாத்திரங்கள் என்ற வகையில் எந்தப் பந்தமும் கிடையாது. ஜே.ஜே. ஓர் எழுத்தாளன்; பில்லி அமெரிக்க வாழ் இந்தியன். அமெரிக்க வாழ்க்கையின் பகட்டு அவனை விரட்டுகிறது. அங்கிருந்து தலைமறைவாகி இந்தியாவுக்கு வந்து கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றுகிறான். குடும்பம், காதல், சமூகத்தின் கோளாறுகள் எல்லாம் அவனைக் கொந்தளிப்புக்குள்ளாக்குகின்றன. அமைப்புக்கும் சமூக நிறுவனங்களுக்கும் தனக்குமான உறவு பற்றி ஓயாத கேள்விகளுடன் உழலும் பில்லி கடைசியில் காணாமற் போகிறான். அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரிந்து கொள்ள முடியாமல் காவல் துறை வழக்கை மூடுகிறது. இந்த நாவலுடன் ஜே.ஜே: சில குறிப்புகளை ஒப்பிட முடியாது. ஆனால் பில்லி பிஸ்வாஸ் தனது கேள்விகளாக ஏற்றுத் துன்புறும் அனைத்தையும் ஜே.ஜே.யும் கொண்டி ருந்தான் என்று தோன்றியது. என்னுடைய ஒப்பீடு பொருத்தமற்றது. எனினும் தனது படைப்பின் நோக்கமாக அருண் ஜோஷி 3 சுட்டிக்காட்டிய வாசகம் ஜோசப் ஜேம்ஸ் என்ற எழுத்தாளனுக்குப் பொருந்தக் கூடியதாகவேபட்டது. ‘மனித மனம் என்ற புதிரான கீழுலகை ஆராய்வதே என் விருப்பம்’ என்ற அருண் ஜோஷியின் வாக்குமூலம் ஜே.ஜே.வுக்கும் இணக்கமானது என்பதே என் வாசிப்பின் நியாயம்.


 
Top

 


Powered By Minveli © sundararamaswamy.com All Rights Reserved