Suraa முகப்பு | தொடர்புக்கு | Font Problems?
Sundaramsamy.com

Ninaivodai

ஜே.ஜே சில குறிப்புகள்   பக்கம் 1 2 3 4

ஜோசஃப் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5ஆம் தேதி, தனது 39ஆவது வயதில், ஆல்பெர் காம்யு விபத்தில் மாண்டதற்கு மறுநாள் இறந்தான். இன்று இருந்திருந் தாலுங்கூட அவனுக்கு 57 வயதுதான் ஆகியிருக்கும். மேதாவிலாசத்துக்கும் அற்பாயுளுக்கும் அப்படி என்ன தான் நமக்கு எட்டாதபடி ரகசிய உறவோ? அதிலும் இந்த நாற்பதையட்டிய வயதுகள், விசேஷமாக வறுமை பிடுங்கும் இந்தியாவில், எழுத்தாளர்களுக்குச் சோதனையாகவே இருந்திருக்கின்றன. தமிழிலும் பாரதி, புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், கு. அழகிரிசாமி, மு. தளையசிங்கம் என்று எத்தனை இழப்புகள். இந்த வரிசையில் ஜே. ஜேயை நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஜே. ஜே. தமிழ் எழுத்தாளனா, அவன் மறைவு எப்படி நமக்கு இழப்பாகும் என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படக் கூடும். ஜே. ஜேயின் உயிர், திராவிட உயிர் என்றாலுங்கூட, தமிழ் உயிர் அல்ல என்பது உண்மைதான். இருந்தாலும் அவன் எழுத்தாளன். தன் உள்ளளியைக் காண எழுத்தை ஆண்டவன். மிக முக்கியமான விஷயமல்லவா இது? அபூர்வம் அல்லவா?

இவ்வாறு உலகமெங்கும் எவன் எவன் தன் உள்ளளியைக் காண எழுத்தையோ, கலைகளையோ அல்லது தத்துவத்தையோ, விஞ்ஞானத்தையோ அல்லது மதத் தையோ (இக்காலத்தில் நான் எப்படி அரசியலைச் சேர்க்க முடியும்?) ஆண்டானோ அவன் எல்லாம் நம்மைச் சார்ந்தவன். நம் மொழிக்கு உடனடியாக அவன் மாற்றப்பட்டு நம் உடம்பின் உறுப்பாகிவிட வேண்டும். இவ்விணைப்பையும் பரவசத்துடன் உணர்ந்து மேற்கொண்டு நாம் சிந்திக்க வேண்டும். நமக்குச் சிந்திக்கத் தெரியும் என்றால். முடியும் என்றால்.

இதற்கு நேர்மாறாக, மாயக் காம உறுப்புகளை மாட்டிக் கொண்டு அவ்வுறுப்புகளை ஓயாமல் நம்மேல் உரசிக்கொண் டிருக்கும் அற்பங்கள் தமிழில் எழுதுகின்றன என்பதால் நமதாகிவிடுமா? சீதபேதியில் தமிழ்ச் சீதபேதி என்றும், வேசைத் தனத்தில் தமிழ் வேசைத்தனம் என்றும் உண்டா? இப்போது 1978இல் இது பற்றிய நம் சிந்தனைகள் தெளிவாக இல்லை. ஒப்புக்கொள்கிறேன். குழம்பியும் மயக்கங்கள் நிறைந்தனவாக வும் இருக்கின்றன. வாஸ்தவம்தான். ஆனால் இந்த நூற்றாண் டின் இறுதியில் அல்லது அடுத்த நூற்றாண்டின் முதல் பத்துக்குள் நடக்கப் போவது வேறு. அன்று ஒரு தவளைகூடக் கிணற்றுக்குள் இருக்க முடியாது. இது எனக்கு வெகு நிச்சயமாகத் தெரிகிறது. அன்று பிடிவாதமாக வெளியே வராதவை உயிர் மூச்சற்று அழிந்துபோகும். இது இயற்கையின் நிர்த்தாட்சண்யமான விதி. மூப்பு, போதை, மயக்கங்கள், சரித்திரத்தை விருப்பம் போல் கற்பனை செய்து மகிழும் மனப் புணர்ச்சியின்பம் - இவற்றிற்கு நிரந்தரம் இல்லை.

1990க்குப் பின் வரும் வருடங்களில் இந்தியாவில் பெரும் கீழ்மேல் மாற்றம் நிகழும் என ஜே. ஜே. எழுதியுள்ளதை நம்பி நான் இதைக் கூறவில்லை. ‘ஜே. ஜேயின் கொந்தளிப்புத் தத்துவ’த்தை என்னால் சரிவரப் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. இந்தியத் தத்துவத்தின் உள்ளளிகளையும் மேற்கத்தியத் தத்துவத்தின் தருக்க நிலைகளையும் தனது அங்கங்களாக மாற்றிக்கொண்டு ஜே. ஜே. நடக்க முயன்றான் என்று கூறப்படு கிறது. ஒருவிதத்தில் அவன் தீர்க்கதரிசி. ஒருவிதத்தில் அவன் தருக்க ஞானி. தீர்க்கதரிசனம் எனக்குப் பரவசமூட்டக்கூடியது. உள்ளளி தோய்ந்த வாக்குகள் என் நரம்பில் புது ரத்தத்தைப் பாய்ச்சுகின்றன. தருக்க ஞானம், நிரூபணங்கள், வியாக்கியானங் கள், மேற்கத்தியத் தத்துவக் கட்டுமானங்கள் இவற்றின் பெரும் குன்றான சரிவுகள் என் மூளையைச் சோர்வடையச்செய்துவிடு கின்றன. பின்தொடர முடியாது போய்விடுகிறது. ஒரு இடம் வந்ததும் ஜே. ஜேயும் என்னைத் தாண்டிச் சென்றுவிட்டான். நாய் போல் மூச்சிரைக்க, சில எட்டுகள் மேலும் ஓடி நின்று விட்டேன்.

இன்று ஜே. ஜே. அவன் மண்ணிலேயே மறுபரிசீலனைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறான். அவனுடைய தருக்க நிலைகள் பெரும் கேள்விகளுக்கு உள்ளாகிவிட்டன. அவனைக் கடுமை யாக விமர்சித்து, தத்துவப் பீடத்திலிருந்து தீர்க்கதரிசியின் இருட்குகைக்கு ஒதுக்கிவிட்ட எம். கே. அய்யப்பன்*கூட, ‘அவனது உள்ளளி இருளில் மிருகங்களின் கண்கள் போல் பரவசம் ஊட்டக்கூடியது’ என்று எழுத நேர்ந்தது.

ஆனால் இருபதாம் நூற்றாண்டில் நம் மண்ணில் நிகழவிருக்கும் மாற்றத்தைப் பற்றி நான் கூறுவது ஜே. ஜேயை அனுசரித்து அல்ல. என் மூளையின் கைவிளக்கில் தெரிவதே. விவரங் களின்றி இப்படிச் சொல்வது சரியல்ல என்பதை உணர்கிறேன். ஆனால் இங்கு என் நோக்கம் ஜே. ஜேயைப் பற்றிச் சில குறிப்புகளை முன்வைப்பதுதான். என் தத்துவக் கீற்றுகளை வெளிப்படுத்துவது அல்ல.

சிந்திக்கும் மனிதனுக்கு ஒரு பாஷைதான் உண்டு. உண்மையின் பாஷை அது. ஜே. ஜே. அதைத் தேடியவன். தேடி அலைந்தவன். மரணப்படுக்கையில் சற்று மனத் தெளிவிழந்த நிலையில், ‘என் வீட்டு வாசலை யாரோ வெளியே தாழிட்டுவிட்டுப் போய்விட்டார்கள். யார் அது? யார் அது?’ என்று ஜே. ஜே. அரற்றிக்கொண்டிருந்தானாம். அவனது தேடல் எந்த இடத்திற் கும் அவனைக் கொண்டு போய்ச் சேர்க்காததன் குறியீட்டு நிலையாக அவனுடைய ‘எதிரிகள்’ இதற்கு விளக்கம் தந்தார்கள். அவர்களுக்கு உள்ளூர சந்தோஷம். இதற்குப் பதிலளித்த -சமீப காலங்களில் ஜே. ஜேயின் பார்வையிலிருந்து நகர்ந்து போயிருந்தாலும்கூட அவன்மீது பெரும் மதிப்பு வைத்திருக்கும் - சுபத்திரம்மாத் தங்கச்சி, ‘வெளி வாசலை யாரோ பூட்டிவிட்டார் கள் என்பதை ஜே. ஜே. கண்டுகொண்டான். அது வரையிலும் அவன் பயணம் தொடர்ந்திருந்தது. எருமைகளோ கழுத்துச் சங்கிலியுடன், அவையே கழித்த சாணிமீது சரிந்து, உதிரி வைக்கோலை அரை மயக்கத்தில் அசைபோட்டுக்கொண்டு கிடக்கின்றன’ என்று எழுதி, ‘நான் எருமைகள் என இங்கு குறிப்பிடுவது எருமைகளை அல்ல’ என்றும் சேர்த்திருந்தாள். (முதுபெரும் எழுத்தாளர் என். இக்கண்ட வாரியர், குமிழியிடும் பாராட்டுணர்வுடன், சுபத்திரம்மாத் தங்கச்சியை விமர்சித்து அவளுடைய கல்லூரி நாட்களில் எழுதிய பத்திரிகைக் கடிதத்தில், ‘பார்க்கப் பார்க்கப் பெண் போலவே காட்சியளிக்கக் கூடியவள் அவள்’ என்று எழுதியிருந்தது என் நினைவுக்கு வருகிறது.)

ஜே. ஜே. மறைந்து பதினெட்டு வருடங்களுக்குப்பின், தமிழ் வாசகர்களுக்கு அவனை அறிமுகப்படுத்தி இக்குறிப்புகளை எழுதுகிறேன். இதற்கு அறிவுலக நியாயங்கள், மானசீக உறவுகள் இரண்டுமே உள்ளன. இரண்டையும் என் வாசகர்கள் முன் வைக்க நான் கடமைப்பட்டவன்.

(நாவலின் ஒரு பகுதி)
* முளங்காடு கிருஷ்ண வைத்தியர் அய்யப்பன் : இன்றையத் தத்துவவாதிகளில் முதன்மையானவராகக் கருதப்படுகிறவர். தற்கால அரசியல் கட்சிகளின் நிலை களையும் காந்தியச் சிந்தனைகளையும் மிகக் கடுமையாக விமர்சிக்கும் மார்க்சியவாதி. இந்துமதச் சிந்தனையோட்டங்களின் பரம வைரி. பாராளுமன்ற ஜனநாயகத்தில் முற்றாக நம்பிக்கையற்றவர். அஹிம்சைப் புரட்சி என்பது அடக்கும் வர்க்கத்தின் விசித்திரக் கற்பனை என்றும், சாத்வீகப் புரட்சி சரித்திரம் அறியாத ஒன்று எனவும் வாதாடிவருகிறவர். பிரம்மச்சாரி. ஜே. ஜேக்கும் இவருக்கும் நெருங்கிய நட்பும், ஜே. ஜேயின் முதல் கட்டத்தில் இருவருக்கும் கருத்து ஒற்றுமையும் இருந்தன.

தனது வைதீகக் கிருஸ்துவப் பின்னணி இவரால்தான் தகர்க்கப்பட்டது எனவும், உலகச் சிந்தனையாளர்களை இவர்தான் தனக்கு அறிமுகம் செய்துதந்தார் எனவும் ஜே. ஜே. நன்றியுணர்ச்சியுடன் தனது நாட்குறிப்பில் குறித்திருக்கிறான்.

நாட்குறிப்பிலிருந்து, அய்யப்பனிடம் கொண்ட கருத்து வேற்றுமைக்குப் பின் எழுதப்பட்டது என நம்பப்படும் பகுதி: “நேற்றையப் புரட்சிவாதியை இன்றையப் புரட்சிவாதி தாண்டிப்போகிறான். இறுதிப் புரட்சிவாதியாகத் தன்னைக் கற்பனை செய்து கொள்கிறவன் மதவாதி. மனிதன் உயிர் ராசியைச் சார்ந்தவன் மட்டுமல்ல. மனிதன் வித்தியாசமான உயிர் ராசி. அவன் அடங்கமாட்டான். திருப்திப்படமாட்டான். ஓய மாட்டான்.” ‘வசந்தம் வராத வருடங்கள்’ (திருமதி சாராம்மா ஜே. ஜே. அனுமதித்துள்ள சிறிய பகுதி மட்டுமே அச்சேறியுள்ளது. தலைப்பு, பதிப்புக் குழு சூட்டியது.)

 
Top

 


Powered By Minveli © sundararamaswamy.com All Rights Reserved