| ரகுநாதன் : காலத்தில் கரையாத அத்தியாயம் | பக்கம் 1 2 3 |
1923ல் பிறந்த ரகுநாதன்
2001ல், வருடத்தின் கடைசி நாளில் மறைந்தார். அப்போது
அவருக்கு வயது 78.
ஐம்பது ஆண்டுகள் ரகுநாதனின் நண்பனாக இருக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட முதல் எழுத்தாளரே அவர்தான். ‘இலக்கிய விமர்சனம்’ நூலில் தன் கருத்துகளை மிகக் கறாராக அவர் முன் வைத்திருந்தது; மனத்தை வசீகரித்த சொல்லாட்சி; கவித்துவம் மிகுந்த நடை ஆகியவை என்னைக் கிறங்கடித்திருந்தன. அத்துடன் அவர் தம் சிறுகதைகளுக்குத் தேர்வு செய்யும் கருக்கள் அளித்த அதிர்ச்சி அவர்மீது ஈர்ப்பை ஏற்படுத்தின. (‘ஆனைத்தீ’ என்ற கதையைப் படித்துவிட்டு அடைந்த பரபரப்பை இன்றும் உணர முடிகிறது.) அவருடைய பல்துறை சார்ந்த அறிவு பொறாமையைத் தூண்டிற்று. இவையெல்லாம் புதுமைப்பித்தனின் ஆவி அவரிடம் மட்டுமே குடிகொண்டிருப்பதைத்தான் எனக்கு உறுதிப்படுத்திற்று. நேரில் சந்தித்தபின் எங்கள் உறவு நெருங்கி வந்தது. ரகுநாதன் உறவுகள் சார்ந்து உணர்ச்சியை வெளிப்படுத்திக்கொள்ளக்கூடியவரோ கலகலப்பாகப் பேசக்கூடியவரோ அல்ல. இருப்பினும் அவர் என்மீது காட்டிய நேசம் அன்றைய என் நெல்லை நண்பர்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தன.
ஒரு மாத இதழ் தொடங்கும் அளவுக்கு மூலதனமோ பிற வசதிகளோ அன்று அவருக்கு இல்லை. இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு களம் அமைக்க வேண்டும் என்ற ஆசையில்தான் அவர் ‘சாந்தி’யைத் தொடங்கினார். முதன்முதலாவதாக அந்தப் பத்திரிகையில் எழுதிய எழுத்தாளர்கள் பலர். அவர்கள் தம் எழுத்து வாழ்க்கைக்கு நம்பிக்கை பெற்றது ரகுநாதனின் மூலமும் ‘சாந்தி’யின் மூலமும்தான்.
ரகுநாதனின் இலக்கிய வாழ்வை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று: 1940லிருந்து 50 வரையிலும் அவரைத் தத்தளிக்கச் செய்த காலம். இரண்டு: 50க்கு மேல் மார்க்சியத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு அவர் படைப்பில் ஆழ்ந்திருந்த உறுதியான காலம். இந்தக் காலத்தில்தான் இடதுசாரி இலக்கியவாதிகளைப் பாதித்த ‘பஞ்சும் பசியும்’ நாவல் வெளிவந்தது. மூன்று: 1970க்கு மேல் அவர் ஆராய்ச்சியிலும் இலக்கிய விமர்சனத்திலும் அதிக ஊக்கத்துடன் வெளிப்பட்ட காலம்.
நாற்பதுகளில் அவர் எழுதியவற்றில் மிக முக்கியமான புத்தகம் ‘இலக்கிய விமர்சனம்’ மட்டுமே. பிற புத்தகங்களான ‘புயல்’, ‘முதலிரவு’, ‘ஆணா?பெண்ணா?’, ‘கன்னிகா’ போன்றவை வாழ்க் கைச் சோதனைகள் அளித்த தத்தளிப்பின் விளைவு என்று சொல்லலாம். இப்புத்தகங்களுக்கு இன்று இலக்கிய மதிப்பு இல்லை.
அவர் எழுதிய சிறுகதைகள், கவிதைகள் வாசகனைத் தீவிர உணர்ச்சிக்கு ஆட்படுத்தியவை. செய்த மொழிபெயர்ப்புகள் மிக நேர்மையானவை. இவற்றிலெல்லாம் அவரது படைப்பாற்றல் வெளிப்படுகிறது.
அவருடைய பொற்காலம் அவர் தீவிரமாக ஆராய்ச்சியிலும் இலக்கிய விமர்சனத்திலும் இறங்கிய காலம்தான்.
மூன்று படைப்பாளிகளிடம் அவர் உயிர்ப்பிணைப்புக் கொண்டிருந்தார். கம்பன், பாரதி, புதுமைப்பித்தன்.
‘இளங்கோ அடிகள் யார்?’ என்ற தலைப்பில் வெளிவந்த விரிவான ஆராய்ச்சியும், பாரதியைப் பற்றி வெளிவந்த பல நூல்களும், புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாறும், அவரைப் பற்றி எழுதிய பிற கட்டுரைகளும் புதிய பார்வைக்கும் புலமை ஆற்றலுக்கும் எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன. கம்பனைப் பற்றி எழுத வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறாமல் போயிற்று. இந்தக் கலைஞர்கள்மீது அவர் கொண்டிருந்த மனப் பிணைப்பில்தான் அவரது படைப்பு நாளம் கடைசி வரையிலும் துடித்துக்கொண்டிருந்தது.
எதைப் பற்றிச் சொன்னாலும் தான் சொல்பவை இதுவரையிலும் சொல்லப்படாதவையாக இருக்க வேண்டும் என்பதில் ரகுநாதனுக்கு மிகுந்த வெறி இருந்தது. இந்த வெறி சார்ந்த குறிக்கோளை அடைய மிகக் கடுமையாக அவர் உழைக்க வேண்டியிருந்தது. தன் செயல் மூலம் தான் பெறக்கூடிய லாபம், புகழ், அங்கீகாரம் ஆகியவற்றை என்றுமே அவர் கணக்கிலெடுத்துக் கொண்டதில்லை. தன்னால் முன்வைக்கப்படும் கருத்துகளின் கூர்மை, ஆற்றல், அவை நிகழ்த்தும் சமூக மாற்றம் ஆகியவையே அவர் முன் நின்றிருந்தன. இதில் சமரசமற்று காட்டிய பிடிவாதம் மூலம் அவர் எதிர்கொள்ள நேர்ந்த இழப்புகள் கணிசமானவை. இருப்பினும் தன் குறிக்கோள் சார்ந்த முடிவை அவர் கடைசி வரையிலும் தளர்த்திக்கொள்ளவே இல்லை.
இளங்கோவையோ, பாரதியையோ, புதுமைப்பித்தனையோ முன்னிட்டுப் பேசும்போது, அவர்கள் தரப்பு, கோலாகலமான வெற்றியை அடைய வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் சார்ந்து அவர் தன்னை ஏவிவிட்டுக் கொள்கிறார். அந்த வெற்றிக்குத் துணை நிற்கும் சகல தடையங்களையும் ஒன்றுவிடாமல் கண்டெடுத்து, அவற்றைத் தன் பார்வையில் விளக்கி, ஒரு மையத்தில் குவித்து, தன் படைப்பு நாயகனின் கழுத்தில் மாலைகளாக விழும்படி செய்கிறார். இதில் அவர் வெளிப்படுத்தும் ஒரு வழக்கறிஞருக்குரிய அசாதாரணமான ஆற்றலின் மூலம் ஆராய்ச்சிக்குரிய சமன்நிலை சிறிது பாதிக்கப்பட்டுவிடுகிறது என்ற மதிப்பீடும் உள்ளது.
சமூக மாற்றத்திலும் மதிப்பீடுகளிலும் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். சமத்துவத்தைக் கனவு கண்டவர். அக்கனவு கூடிவர குறுக்கே நிற்கும் அதீத கற்பனைகளை முற்றாக அகற்றி யதார்த்தப் பார்வையைத் தழுவிக்கொண்டவர். அவர் கனவு கண்ட பொற்காலம் மண்ணில் இறங்கிவர ஒரு நூற்றாண்டோ அல்லது பல நூற்றாண்டுகளோ ஆகலாம். ஆனால் என்றேனும் அக்கனவு இந்த மண்ணில் நிறைவேறினால் அதற்கு ரகுநாதன் ஆற்றிய பங்கு மிக முக்கியமான ஒரு அத்தியாயமாக இருக்கும்.
இந்தியா டுடே, ஜன. 16-31, 2002


