Suraa முகப்பு | தொடர்புக்கு | Font Problems?
Sundaramsamy.com

Ninaivodai

சாகித்திய அக்காதெமிப் பரிசும் தமிழ்ச் சூழலும்  பக்கம் 1 2 3

 சர்ச்சைகளை உருவாக்குவதில் ஆசையும் திறமையும் கொண்ட, ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர் குஷ்வந்த் சிங் சாகித்திய அக்காதெமி சரிவர இயங்காததால் அதைக் கலைத்துவிடலாம் என்று கூறியிருக்கிறார். இப்போது தமிழ் எழுத்தாளர்கள் மத்தியிலும் அக்காதெமி பற்றி சர்ச்சைகள் எழுந்துள்ளன. அக்காதெமியைக் கலைத்துவிடலாம் என்று சில எழுத்தாளர்களும் அதன் குறைகளை அகற்றிச் சரிவர இயங்க வைக்க வேண்டும் என்று வேறு சில எழுத்தாளர்களும் கூறியிருக்கிறார்கள். நான் இந்த இரண்டாவது பார்வையில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அக்காதெமியில் என்ன குறைகள்? அவற்றை அகற்றுவது எப்படி?

சாகித்திய அக்காதெமி என்னென்ன குறிக்கோள்களை முன் வைத்து இயங்கிக்கொண்டிருக்கிறது? அதன் செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு? இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு இவை சமமாகப் பங்கிடப்படுகிறதா? அது தன் குறிக்கோளையும் குறிக்கோள் சார்ந்த நடவடிக்கைகளையும் இலக்கிய வாசகன் அறியும்படி பகிரங்கமாக வைத்துக்கொண்டிருக்கிறதா? அது ஒளிவு மறைவற்ற ஒரு செயல்முறையைப் பின்பற்றுகிறதா? ஒவ்வொரு ஆண்டும் தரப்படும் பரிசு எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது? அதற்கான ஒழுங்குகள் என்ன? விதிமுறைகள் என்ன? இவற்றைப் பற்றிய நடைமுறைகளையும் செயல்பாடுகளையும் தமிழ் வாசகர்கள் அறியும் வகையில் சாகித்திய அக்காதெமி ஏதேனும் செய்திக் கட்டுரைகளையோ துண்டுப் பிரசுரங்களையோ வெளியிட்டிருக்கிறதா? சாகித்திய அக்காதெமி பரிசு பெற்ற எழுத்தாளர்களுக்கேனும் பரிசு தங்களுக்கு வந்து சேர்ந்ததில் கடைப்பிடிக்கப்பட்ட முறை பற்றி சரிவரத் தெரியுமா? தெரிந்தவர்கள் அந்த அபூர்வ அறிவைத் தமிழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வருவார்களா? வழிமுறைகளைப் பற்றிப் பரவலாகத் தெரியும் போதுதான் குறைகளை அகற்றுவதற்கான யோசனைகளை வாசகர்களிடம் எதிர்பார்க்க முடியும்.

சாகித்திய அக்காதெமிக்குப் பரிசளிப்பதைத் தவிர வேறு பல பணிகளும் பொறுப்புகளும் இருக்கின்றன.

  1. பரிசு பெற்ற படைப்புகளையும் மிகச் சிறந்த படைப்புகளையும் - அவை பரிசு பெறாதவை என்றாலுங்கூட - பிற மொழிகளில் மொழிபெயர்த்தல்.
  2. ஒரு மொழியைச் சேர்ந்த முக்கிய படைப்பாளியின் வாழ்க்கை வரலாற்றை இந்திய மொழிகளில் கொண்டு வருதல்
  3. . பெரும் இலக்கியத் தொண்டாற்றியுள்ள ஆளுமைகளைக் கௌரவப்படுத்துதல்.
  4. மொழிபெயர்ப்புகளை ஊக்குவித்தல்.
  5. எழுத்தாளர் - வாசகர் சந்திப்புக்கு ஒழுங்கு செய்தல், இலக்கியப் பட்டறைகள் நடத்துதல்.
  6. இலக்கிய இதழ்கள், புத்தகங்கள் வெளியிடுதல் என்றெல்லாம் பல பணிகள் இருக்கின்றன.

இவை பற்றித் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஏதும் அக்கறை உண்டா? இத்தனை பணிகளும் பொறுப்புகளும் கொண்ட சாகித்திய அக்காதெமியைத் தமிழ் எழுத்தாளர்கள் அவர்களுடைய ஆசை சார்ந்து, ஆண்டாண்டு பரிசு வழங்கும் ஒரு நிறுவனமாகக் குறுக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். போட்டா போட்டியில் அந்தப் பார்வை இப்போது மேலும் குறுகியிருக்கிறது. அதன் பிற செயல்பாடுகள் எதைப் பற்றியும் அவர்களுக்கு அக்கறை இல்லை. நேற்றும் இன்றும் பரிசு பெற்ற படைப்புகள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டனவா என்பதை அறிய விருப்பம் கொள்ளும் எந்த எழுத்தாளனையும் நான் இதுவரையிலும் சந்தித்ததில்லை. பிற மொழியில் வெளிவந்த அகில இந்தியப் புகழ்பெற்ற ஒரு மேம்பட்ட படைப்பை ஏன் சாகித்திய அக்காதெமி தமிழில் மொழிபெயர்த்துத் தரவில்லை என்று வினா எழுப்பும் வாசகனையோ எழுத்தாளனையோ நான் பார்த்ததில்லை.

தமிழ் எழுத்தாளனின் சாகித்திய அக்காதெமி சார்ந்த ஆசை அலை அடிப்புகளை உருவகப்படுத்திச் சில வாக்கியங்களை உருவாக்கினால் அவை பின்வருமாறு அமையக்கூடும். 1. இந்த ஆண்டேனும் நான் பரிசு பெறுவேனா? பரிசு பெறாமலேயே இறந்துபோய்விடும் துர்ப்பாக்கியத்திற்கு ஆளாகிவிடுவேனோ? 2. நான் பரிசு பெற்றுவிட்டேன். இனி என் நண்பர்கள் குழு பரிசு பெறச் சிறிது உழைக்க வேண்டும். 3. நான் விரும்பும் எழுத்தாளன் பரிசு பெறாமல் போவதைப் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் நான் விரும்பாத எழுத்தாளன் பரிசு பெறுவதைச் சகித்துக்கொள்ள முடியாது. 4. என் படைப்புகளைச் சில மூளை மேதாவிகள் ஏற்றுக்கொள்வதில்லை. சாகித்திய அக்காதெமி பரிசு பெற்றுவிட்டால் அவர்களை நான் இன்னும் வலிமையாக உதா சீனம் செய்ய முடியும். 5. சாகித்திய அக்காதெமிப் பரிசு கிடைத்தால் தான் நான் ஞானபீட பரிசுக்கான யாத்திரையைத் துவக்க முடியும்.

இந்த வாக்கியங்களுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் சம்பந்தம் இல்லை. இந்த வாக்கியங்களுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும்கூட சம்பந்தமில்லை.

பரிசு, படைப்பூக்கம் மிகுந்த இளமைக் காலத்தில் ஒரு படைப்பாளிக்குப் போய்ச்சேருவதில் குற்றம் ஒன்றுமில்லை. அதிக இரத்த அழுத்தம், பொய்ப்பல் செட், குறைந்த பட்சம் ஒரு தடவையாவது இருதயத் தாக்குதல், பார்வை மங்கி புருவத்தின் மீது கை வைத்துப் பார்த்தல் போன்ற தகுதிகளில் ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டோ இருந்தால்தான் பரிசு தரப்பட வேண்டும் என்று விதி ஒன்றும் இல்லை. நம் மொழியில் இப்போதுகூடப் பரிசு வாங்கத் தகுதியான நூல்களைப் படைத்துள்ள, நாற்பதுக்கும் குறைவான வயது கொண்ட படைப்பாளிகள் ஐந்தாறு பேர்களேனும் இருக்கிறார்கள். அவர்கள் மீசை நரைப்பது வரையிலும் க்யூவில் நின்று கால் கடுக்க வேண்டும் என்பதில்லை.

கற்பனைப் படைப்பாக்கங்கள் பரிசு பெறவேண்டும் என்ற விதியை எத்தனையோ தடவை தமிழ்க்குழு மீறி அறிவுத்துறைப் படைப்புகள் என்று நம்புகிறவற்றுக்குப் பரிசளித்திருக்கிறது. இந்த விதி மீறல்களை ஏற்றுக்கொள்ள நானும் இப்போது பழகிவிட்டேன். சிறந்த படைப்பாளிக்குப் பரிசு போய்ச் சேரட்டும். அல்லது நடுத்தரமான படைப்பாளிக்கேனும் அது கிடைக்கட்டும். அபத்தப் புனைகதைகளுக்குப் பரிசு தருவதைவிட அறிவார்ந்த நூல்களுக்குப் பரிசு கிடைப்பது எவ்வளவோ மேல். என் பார்வையில் அ.மா.சாமி (‘தமிழில் இஸ்லாமிய இதழ்கள்’ போன்ற பல நூல்கள்) எவ்வளவோ முக்கியச் செய்திகளைத் திரட்டித் தந்திருக்கிறார். இந்தியச் சரித்திரக் களஞ்சியங்களை (14 தொகுதிகள்) தனிநபராக உழைத்து உரு வாக்கியுள்ளவர் ப.சிவனடி. வாழ்க்கைக்கே சம்பந்தமற்ற அசட்டுக் கற்பனைகளைத் திரிக்கும் எழுத்தாளர்களைவிட இவர்கள் வாசகர்களுக்கு உபயோகமானவர்கள். இவர்களை ஒத்தவர்கள் பரிசு பெறுவது பரிசின் மீதான நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள உதவும்.

இந்தியா டுடே, 25.8.99

 
Top


Powered By Minveli © sundararamaswamy.com All Rights Reserved